சிம்மம் - விசுவாவசு வருட பலன்

2025 தமிழ் புத்தாண்டு ராசிபலன்

Published On 2025-04-11 08:22 IST   |   Update On 2025-04-11 08:26:00 IST

அமைதி காக்க வேண்டும்

ராஜ யோகம் நிறைந்த சிம்ம ராசியினரே..

எதிலும் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடும் சிம்ம ராசியினருக்கு இனிய விசுவாசு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டின் சனிபகவான் ராசிக்கு எட்டில் நின்று அஷ்டம சனியாக பலன் தரப்போகிறார்.

தனது மூன்றாம் பார்வையால் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் 2ம்மிடமான தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்ப்பார்.

ஆண்டின் துவக்கத்தில் தொழில் ஸ்தானத்தில் நிற்கும் குரு பகவான் 14.5.2025 இரவு முதல் லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். தனது ஐந்தாம் பார்வையால் 3ம்மிடமான முயற்சி ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் ஒன்பதாம் பார்வையால் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்தையும் பார்ப்பார் 18 5 2025 முதல் ராசியில் கேதுவும் 7ம் மிடத்தில் ராகு பகவானும் சஞ்சரிக்க போகிறார்கள் இதனால் ஏற்பட போகும் பலன்களை பார்க்கலாம்.

விசுவாவசு தமிழ் புத்தாண்டு பொது பலன்கள்

விசுவாசு ஆண்டில் அஷ்டமச் சனி மற்றும் சர்ப்ப தோஷ தாக்கம் உள்ளது. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள். இந்த பலன் உங்களுக்கு பொருந்தாது. ஏனெனில் லாப ஸ்தானத்திற்கு வரக்கூடிய குரு பகவான் உங்களை கவசமாக காப்பார்.

எனவே எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். ஏற்றம் இறக்கம் நிறைந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். எடுத்த காரியத்தில் இறுதிவரை போராடி ஒரு முடிவை பார்த்து விடுவீர்கள். வாழ்க்கையில் போராடி எப்படி வெற்றி பெற வேண்டும் என்று உங்களிடம் இருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

எதிலும் முதலிடத்தை பிடிப்பது ஒன்றே உங்களின் தலையாய நோக்கமாக இருக்கும் நீங்கள் இந்த ஆண்டு பல்வேறு அனுகூலமான பலனை சந்திக்க உள்ளீர்கள். இயற்கையிலேயே சுறுசுறுப்பான நீங்கள் புத்துணர்வால் அழகு பெறுவீர்கள்.

உடல் தேஜஸ் பெறும். உங்களுடைய பணிகளை விரைவாகவும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள்.அளவிட முடியாத அளவிற்கு நற்பலன்கள் மிகும். தொட்டது எல்லாம் துலங்கும்.

ஜனவசியம் ஏற்படும். தெளிவான மன நிலையோடு செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகிழ்ச்சி தரும். பல விதமான மாற்றங்கள் , ஏற்றங்கள் ஏற்படும். வாழ்வில் வசந்தம் உலா வரும். உற்றார் உறவினர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். மனதில் தெம்பு , தைரியம் ஏற்படும்.

உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். நல்ல தகவல்கள் வீடு தேடி வரும்.குழந்தை பாக்கியம் ஏற்படும். என் அனுபவத்தில் அஷ்டமச் சனியின் காலத்தில் பலர் வீடு, வாகனம் என்று வாழ்க்கையில் செட்டிலாகி உள்ளார்கள். சுய ஜாதக தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றம், வீடு, வாகன யோகம் என வாழ்வாதாரம் உயரும்.

குரு பகவான் 5ம்மிடத்தை தன் வீட்டைத் தானே பார்ப்பதால் ஆண் வாரிசு ஏற்படும். குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவமனைக்கு அலையத் தேவையில்லை.நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் பூர்வீகம் தொடர்பான கர்ம வினை நோய்க்கு செய்யும் சிகிச்சை பலன் தரும். எந்த வைத்திய முறையை கையாண்டால் நோயிலிருந்து விடுபடலாம் என்ற புரிதல் ஏற்படும்.

பொருளாதாரம்

முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும். குரு மற்றும் சனியின் சஞ்சாரத்தால் 2,5,8,11 எனும் பண பர ஸ்தானத்தின் இயக்கம் மேன்மையாக உள்ளது. சிந்தித்து நிதானமாக செயல்பட்டால் தாராளமான தன வரவு உண்டு. அதே நேரத்தில் உழைக்காமல் போனில் நேரத்தை முதலீடு செய்தால் உங்கள் வாழ்க்கை கேள்விக் குறிதான்.

அவசியத்தை உணர்ந்து செயல்பட்டால் வழக்கத்தை விட வருமானம் அதிகமாக இருக்கும்.தனியார் நிதி நிறுவனங்கள் அல்லது முறையற்ற ஏலச் சீட்டு நடத்துபவர்கள் பண பரிவர்த்தனைக்கு உரிய ஆவணங்கள் வைத்து இருக்க வேண்டும்.

பிறந்தகால ஜாதகப் படி அஷ்டமாதிபதி ,பாதகாதிபதி , விரைய அதிபதிகள் தசை நடத்தினால் பங்குச் சந்தை முதலீட்டை தவிர்க்கவும்.தங்க நகைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.இந்த காலகட்டத்தில் பூர்வீக சொத்து தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது நல்லது.

மகம்

நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெற வேண்டிய வருடம். குரு கடாட்சத்தால் உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கேள்விக்குறியாக இருந்த பல குழப்பங்கள் விலகும். வம்பு, வழக்கு விவகாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். செல்வாக்கு, கவுரவம் போன்றவற்றில் ஏற்பட்ட பங்கம் நீங்கும்.

மண், மனை வாங்குவது, வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, புதிய வாகனம் வங்குவது என சுப விரயங்கள் ஏற்படும். தொழில் ஜீவனத்தில் எந்த குறையும் வராது. வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். புதிய நட்புக்களால் ஆதாயம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

பணம், பதவி என்று வாழ்க்கை செழிப்பாகும். புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும்.சுருக்கமாகச் சொன்னால் அஷ்டமச் சனியால் தொழில் பாதிப்பு ஏற்படாமல் குருபகவான் காப்பாற்றுவார்.

பூரம்

குரு லாப ஸ்தானத்தில் நிற்பதால் நெருங்குவதால் எண்ணிலடங்கா சுப பலன்கள் நடக்கவுள்ளது.இது போன்ற கிரக அமைப்பு என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையைத் தரும். அனைத்து செயல்களிலும் தைரியமாக செயல்பட்டு வெற்றியடைவீர்கள்.கடனுக்கு பயந்து ஓடி ஒளிந்த நிலை நீங்கும்.

உறவுகளிடம் நிலவிய சண்டை, சச்சரவு மாறும்.ஆரோக்கியத்துடன் உடல். மன வலிமையுடன் இருப்பீர்கள். தாய் வழிச் சொத்தில் நிலவிய சங்கடங்கள் தீரும். தாயின் பூரண ஆசியும் அன்பும், அரவணைப்பும். கிடைக்கும். சொத்து வாங்குவது விற்பதில் இருந்த தடைகள் விலகும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். போட்ட முதலீட்டை எடுக்க முடியாத நிலை குறையத் துவங்கும்.

உத்திரம் 1

உழைப்பின் பயனை உணர்ந்து செயல் படுவீர்கள். நிலையான வருமானத்திற்கு வழி பிறக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.புதியதாக தொழில் துவங்குபவர்கள் முதலீடு அதிகம் இல்லாத சுய தொழில் செய்யலாம். உடன் பிறந்தவர்களின் அன்பு அனுசரனையும் கிடைக்கும்.

அசையா சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திரங்களை சரிபார்ப்பது நல்லது. சிலர் வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் ஈடுபடுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.

உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.கணவன் மனைவி இருவரும் மனமொன்றி நடந்துகொள்வார்கள். மனச் சுமை குறையும். குல தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும்.

திருமணம்

சிம்ம ராசியினருக்கு இது திருமணத்திற்கு ஏற்ற காலம் அல்ல. 29.3.2025 அன்று அஷ்டமச் சனி துவங்குகிறது.18.5.2025 முதல் ராசியில் கேது மற்றும் ஏழில் ராகு என கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. தசாபுத்தி சாதகமாக இருந்தாலும் இரண்டரை ஆண்டு காலம் திருமணம் நடத்துவதை தவிர்ப்பது உத்தமம்.

பெண்கள்

8ம்மிடம் என்பது மாங்கல்ய ஸ்தானம் என்பதால் பெண்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்ல வேண்டும். மருமகன், மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். பிள்ளைகளின் திறமைகள் மகிழ்ச்சி தரும்.

பெண்களின் கருப்பை தொடர்பான பிரச்சனைகளான கருக்குழாய் அடைப்பு, முட்டை உற்பத்தியின்மை பிரச்சனைகளுக்கு மாற்றுமுறை மருத்துவம் நல்ல பலன் தரும்.குல இஷ்ட தெய்வ பிரார்த்தனைகள் மூலம் உங்களை நீங்கள் காத்துக் கொள்ள முடியும்.

மாணவர்கள்

படிப்பு, ஞானம், எண்ணம், விருப்பம் ஆகியவற்றைப் பற்றிக் கூறும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருக்கிறது. மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் இலக்கை நிர்ணயம் செய்து கற்பார்கள். படிப்பில் நிலவிய மந்தத் தன்மை மாறும். புதிய விஷயங்களை சுற்றுக் கொள்வதில் ஆர்வம் கூடும்.

வேதங்கள் கற்பது, ஆன்மீகம் சார்ந்த விசயங்களை கற்பது, செஸ் போன்ற அறிவைத் தூண்டும் விளையாட்டுகளை கற்பது என தங்களின் தனித் திறமையை வளர்த்துக் கொள்ள உகந்த காலம். கிடைத்த சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தி திட்டமிட்டு படித்தால் அஷ்டமச் சனியாலோ, ராகு, கேதுவாலோ படிப்பு தடைபடாது.

பரிகாரம்:

தினமும் பட்சிகள், விலங்குகளுக்கு உணவிட வேண்டும். உடம்பையும், உயிரையும் வளர்ப்பது உணவு. உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில் உண்மையில் பசித்தவருக்கு அன்னதானம் தொடர்ந்து செய்து வர பிரச்சனைகள் பனிபோல் விலகும். சித்தர்கள் ஜீவ சமாதியில் வழிபாடு செய்வது கைமேல் பலன் தரும்.

Similar News