சிம்மம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்
null

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026

Published On 2026-03-05 10:28 IST   |   Update On 2026-03-05 11:05:00 IST

ஆளுமைத் தன்மை நிறைந்த சிம்ம ராசியினரே

சிம்ம ராசியினருக்கு 6,7ம் அதிபதியான சனி பகவான் தற்போது கோட்ச்சாரத்தில் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டமஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது 3ம் பார்வையால் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 2ம் மிடமாகிய தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். ஆறாம் அதிபதியாகிய சனி எட்டாம் இடத்திற்கு செல்வதால் இது கெட்டவன் கெட்டிடில் கட்டிடும் ராஜயோகம் என்ற விபரீத ராஜயோகத்தை சிலருக்கு வழங்கலாம். அதே நேரத்தில் வாசகர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். விபரீத ராஜயோகத்தால் வரக்கூடிய எந்த பயன்களும் ஜாதகருக்கு பயன்படாது என்பது நிதர்சனமான உண்மை. கடந்த சில வருடங்களாக அனுபவித்த பிரச்சனைகளே சமாளிக்க முடியாத நிலையில் இருக்கும் போது அஷ்டமச் சனியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கலக்கமாக இருக்கும்.மேலும் ஜூன் 2026 முதல் விரய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார் என்பதையும் மறக்கக்கூடாது.எந்த வகையில் பார்த்தாலும் சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அஷ்டமசனி காலத்தை கடத்த வேண்டும் என்பதில் மட்டும் சிறிதும் சந்தேகமில்லை. மேலும் 2026 நவம்பர் வரை ராசியில் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் திட்டமிடுதல் நிதானம் தன்னம்பிக்கை தைரியம் போன்றவற்றை வளர்த்துக் கொள்ளும் போது கிரகங்களால் ஏற்படக்கூடிய இடங்களில் இருந்து விடுபட முடியும்.

அஷ்டம சனியின் பொதுவான பலன்கள்

பொதுவாக அஷ்டம சனி காலங்களில் பூர்வீ கத்தில் வசிக்க முடியாத சூழ்நிலைகள் உருவாகும். பூர்வீகத்தை விட்டு பிடிவாதமாக இருப்பவர்களை கூட சனி பகவான் இடமாற்றம் செய்ய வைத்து விடுவார்.தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக இக்கால கட்டத்தில் சிலருக்கு வாழ்க்கை துணையை பிரிந்து வாழ நேரலாம் அல்லது கணவன் மனைவி கருத்து வேறுபாட்டாலும் பிரிய நேரும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு பஞ்சாயத்து நீதி மன்றம் செல்லும் நிலையை ஏற்படுத்தும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். தவறான நட்பு வலையில் மாட்டலாம்.களத்திரம், நண்பர்கள் மூலம் வம்பு, வழக்கு , கோர்ட் கேஸ் பிரச்சனை வரும் . வம்பு வழக்கிற்கு நீதி மன்றம் செல்லாமல் பெரியோர்களின் முன்னிலையில் பேசி தீர்த்தல் நலம் தரும். அஷ்டம சனியால் நீதி மன்ற படி ஏறியவர்களுக்கு விவகாரத்து கிடைக்கும். மன நிம்மதிக்காக ஊரை விட்டு, மாநிலம் விட்டு தொலைதூரம் செல்லும் நிலை ஏற்படும். துன்பத்தாலும் துயரத்தாலும் வெறுப்படைந்து சிலர் சந்நியாசம் வாங்குவார்கள் அல்லது தலைமறைவு வாழ்க்கை வாழ நேரும். உற்றார் உறவினர்களுக்கு ஜாமீன் போட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்கும் நிலை ஏற்படும்.ஜாமீன் கையெழுத்து போடுதல், வங்கியில் பணம் இல்லாமல் காசோலை கொடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. எப்போதோ நடந்த வழக்கிற்கு இப்பொழுது தீர்ப்பு வந்து சிறை தண்டனை அனுபவிக்க நேரும்.

வீட்டில் எலக்ட்ரிக்கல் உபகரணங்களான பிரிட்ஜ், வாசிங் மெஷின், ஏசி, டிவி பழுதாகி அதிக செலவு வைக்கும்.வாகனங்களில் பயணம் செய்யும் போது அதிக கவனம் தேவை. சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். வாகனங்களுக்கு தேவையான லைசன்ஸ், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை முறையாக வைத்து இருக்க வேண்டும். அரசுக்கு தண்டம் கட்ட நேரலாம். நீண்ட நாட்களாக அவதிப்படுத்திய நோய்க்கு நிவாரண கிடைக்கும். தவறான எதிர் பாலின நட்பை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் பதவி இழப்பு ஏற்படும். பலவித துன்பங்களை சந்தித்து மனம் அழுத்துப் போகும் காலம். எல்லாவற்றிலும் சாதகமற்ற சூழ்நிலை, விபத்துகள், மன உளைச்சலே மிஞ்சும். சிலருக்கு உடல் நலம் பாதிப்பால் மருத்துவமனைக்கு சென்று சில நாட்கள் தங்கி சிகிச்சை செய்ய நேரலாம். ஆயுளுக்கு பங்கம் தரும் நோய் சிகிச்சை செய்பவர்கள் தினமும் மஹா மிருத்யஞ்ச மந்திர பாராயணம் செய்து துளசி தீர்த்தம் அருந்த நல்ல முன்னேற்றம் ஏற்படும். எலும்பு தேய்மானம், மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகள் கடுமையாக பாதிக்கும். ஒரு சிலருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேரும். முன்னோர் குல தெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்தினால் நற்பலன் மிகுதியாகும்.

சனியின் மூன்றாம் பார்வை பலன்கள்

அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் சனியின் பார்வை 10ம்மிடமான தொழில் ஸ்தானத்திற்கு இருப்பதால் வானமே எல்லை என சுற்றித் திரிந்த நீங்கள் உங்கள் மனதை கட்டுப்படுத்தி புதிய தொழில் ஒப்பந்தம் , முதலீட்டை தவிர்க்க வேண்டும். புதிய முதலீடு செய்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். புதிய தொழில் தொடங்க கூடாது.தொழில் போட்டி கடுமையாக இருக்கும். வாடிக்கையாளரிடம் கனிவாக பழக வேண்டும். வாடிக்கையாளார்களிடம் கோபம் காட்டினால் வேறு நபரிடம் சென்று விடுவார்கள். அதனால் மனம் வருத்தம் கூட நேரும். முதலாளி தொழிலாளி பிரச்சனையால் உற்பத்தி குறையும். அரசின் சட்ட திட்டங்கள் சமாளிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். உங்கள் தொழில் கவுரவத்தை நிலைநாட்ட கடுமையான மன உளைச்சலை சந்திக்க நேரும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் , வேலைப் பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு மிகும். உங்களை விட தகுதி குறைந்த நபருக்கு பதவி உயர்வு கொடுத்து கவுரவிப்பது உங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் பதவி உயர்வு தடைபடும். உத்தியோகத்தில் யாரோ செய்த தவறுக்கு நீங்கள் மெமோ வாங்க நேரும். குறைந்த சம்பளத்திற்கு 2 நபர்களின் வேலையை செய்ய நேரும். உயர் அதிகாரிகளுக்கு நம்பிக்கை குறைவு ஏற்படும். இதற்காக மனம் வருந்தி வேலையை விட்டால் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு . சனிக்கிழமைகளில் சிவ வழிபாடு செய்தால் சிரமம் குறையும்.அரசு அதிகாரிகள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

சனியின் ஏழாம் பார்வை பலன்

சனி பகவானின் 7ம் பார்வை 2ம் மிடமான தனம், வாக்கு ,குடும்ப ஸ்தானத்திற்கு இருப்பதால் வார்த்தையில் நிதானம் தேவை. தீயினால் சுட்ட புண் ஆறும். நாவினால் சுட்ட வடு ஆறாது. நீங்கள் விட்ட வார்த்தையே அம்பாக மாறி உங்களை பதம் பார்க்கும். அதே நேரத்தில் வெளுத்தது எல்லாம் பால் என எல்லோரையும் நம்பி திறந்த மனதாக உங்களின் மனக் குமுறலை கொட்டக் கூடாது. உங்கள் முன் நல்லவர் போல் ஆமாம் போட்டு உங்களுக்கு பின்னால் நீங்கள் பேசியதை திரித்து பேசி குற்றவாளி கூண்டில் ஏற்றி விடுவார்கள். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறி திட்டி சிறிய பிரச்சனையை கூட பெரிய பிரச்சனையாக்குவார்கள். பொருளாதார ஏற்ற தாழ்வு மிகுதியாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும். குடும்ப உறுப்பினர்கள் உண்மையில் உங்களிடம் பாசம் காட்டினால் பாசங்கு செய்வது போன்ற மன உணர்வு தோன்றும்.பெற்றோரே உலகம் என்று நம்பி வாழ்ந்த உங்களுக்கு பெற்றோரே உரிய நேரத்தில் பாசம் காட்டாமல் இருப்பார்கள்.பார்வை குறைபாட்டிற்காக அறுவை சிகிச்சை அல்லது கண்ணாடி அணிய நேரலாம். வீட்டில் உள்ள தாத்தா பாட்டி, அம்மா அப்பாவிற்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கும் மருந்துக்கும் வீண் செலவு ஏற்படும்.இதன் உச்சகட்டமாக குடும்ப உறுப்பினர்களுக்கு அறுவை சிகிச்சைக்கான செலவையும் சந்திக்க நேரும். கருத்து வேறுபாடு காரணமாகவோ, தொழில் நிமித்தம் காரணமாகவோ தம்பதிகள் பிரிந்து வாழலாம். குடும்ப வாழ்வில் நாட்டக்குறைவு உருவாகும். வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும்.

சனியின் 10ம் பார்வை பலன்கள்

சனியின் 10ம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம்மிடத்திற்கு இருப்பதால் பூர்வீகம் தொடர்பான விசயங்களில் அதிரடி முடிவுகள் எடுக்காமல் இருப்பது நலம். முக்கியமாக தொழில் , சொத்து பாகப்பிரிவினை போன்ற விசயங்களை அஷ்டமச் சனி முடியும் வரை ஒத்திப் போட்டால் பாகப் பிரிவினை உங்களுக்கு சாதமாக கை கொடுக்கும். மேலும் கூப்பிட்ட குரலுக்கு உங்கள் குல தெய்வம் ஓடி வந்து நிற்கும்.இந்த சனிப் பெயர்ச்சியால் நீங்கள் அடையும் பெரும் பாக்கியம் குல தெய்வ அனுக்கிரகம் மட்டுமே.குழந்தைகளின் நடவடிக்கைகள் உங்களை சங்கடத்தில் ஆழ்த்தும்.பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் வயது மாணவ மாணவியர் தவறான நட்பு வலையில் சிக்கி வாழ்க்கையை கேள்விக் குறியாக்காமல் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தடைபடும். அந்நிய மொழிப் புலமை ஏற்படும். அந்நிய மொழிய கற்றுக் கொடுப்பதால் வருமானம் வரும். வேற்று மதத்தவரால் இன்னல்கள் ஏற்படும். சிலர் மதம் மாறவும் செய்யலாம். காதல் கலப்பு திருமணம் நடைபெறும். வெளி நபர்களால் குடும்பத்தில் குழப்பம், சந்தேகம் தற்கொலை வரை கொண்டு செல்லும் என்பதால் மனதை கட்டுப்படுத்தி தெரியாதவர்களிடம் பழகுவதை தவிர்த்தல் நலம்.

திருமணம்

அஷ்டமச் சனியின் காலத்தில் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பாதிப்பு வம்பு வழக்கு மிகுதியாக இருக்கும் என்பதால் திருமணத்தை தவிர்ப்பது நல்லது. சில தவறான காதல் கலப்பு திருமணம் செய்து மறு விவாகத்தை நோக்கி செல்வார்கள்.

பெண்கள்

கணவன் மனைவி இடையை நிலவிய சின்னச் சின்ன சலசலப்புகள் சீராகும். வீடு, அல்லது அலுவலகத்தை மாற்ற நேரும்.அடிக்கடி அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும்.வீடு, வாகனம் தொடர்பான உங்களின் எண்ணம் சிறு தடை, தாமதத்திற்கு பிறகே ஈடேறும். சொத்து தொடர்பான வழக்குகள் இருந்தால் இழுபறி இருந்து கொண்டே இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவு இருக்கும்.தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்

குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி போட வேண்டும்.சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News