என் மலர்
சிம்மம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்
சிம்மம்
சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023
தலைமைப் பண்பு நிறைந்த சிம்ம ராசி அன்பர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் நின்ற சனி பகவான் 7ம்மிடமான களத்திர ஸ்தானத்திற்கு சென்று ஆட்சி பலம் பெறப் போகிறார். தனது 3ம் பார்வையால் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் ராசியையும் 10ம் பார்வையால் 4ம் மிடமான சுக ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.
கண்டகச் சனியின் பலன்கள்: இதுவரை ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு, ஸ்தானத்தில் நின்று கடன் எதிரி தொல்லையைக் கட்டுப்படுத்தி வந்த சனி பகவான் 7மிடத்திற்குச் செல்கிறார்.
7மிடம் என்பது உறவுகளின் உன்னதத்தை உணர்த்துமிடம். ஒருவருக்கு 7ம் மிடத்துடன் சுப கிரகம் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் சிறப்பு பெற்ற மனிதனாக உயர்வார்.இதற்கு அசுப கிரகம் சம்பந்தம் பெற்றால் உறவுகளால், சமுதாயத்தால் மன உளைச்சல் அதிகமாகும்.6ம் அதிபதியாகி சனி 7மிடத்தில் அமர்வது சிறப்பித்துச் சொல்லக் கூடிய பலன் அல்ல. அதே நேரத்தில் 7மிடத்தில் இயற்கை பாவியான சனிபகவான் அமர்வதும் சங்கடமே.இதில் சந்தோசப்பட வேண்டிய விசயம் என்ன வென்றால் ஏப்ரல் 22, 2023 முதல் ஒரு வருட காலத்திற்கு குரு பகவான் ராசியைப் பார்க்கிறார் என்பதால் ஒரு வருடத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. இந்த இரண்டரை ஆண்டுகள் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது அவசியம்.
சம்பந்திகளிடம் அன்பான, ஆறுதலான வார்த்தைகளைப் பேசி உறவை வளர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து நியாயமான தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். கருத்து வேறுபாட்டை தவிர்த்து விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். இயல்பாக சில தம்பதிகள் தொழில், உத்தியோக ரீதியாக பிரிந்து வாழலாம். சிலர் கருத்து வேறுபாடு காரணமாக நீதி மன்றத்தை அணுகலாம்.வாழ்க்கை துணையால், திருமணத்தால் துன்பம் அடைந்தவர்களுக்கு விவாகரத்து கிடைக்கும். சிலருக்கு திருமண வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தும். இல்லறத் துறவி போல் வாழ நேரிடும். வாழ்க்கை துணைக்கு ஆரோக்கிய குறைபாடு இருந்தால் உரிய மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். கூட்டுக் குடும்பம், கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகும்.ராசியை சனி பார்ப்பதால் ஏற்படும் மன சஞ்சலம் ஆரோக்கிய குறைபாட்டை யோகா மற்றும் இறைவழிபாட்டில் குறைக்க முயல வேண்டும்.
3ம் பார்வை பலன்: சனியின் மூன்றாம் பார்வை 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு இருப்பதால் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு சென்று குடிபுகலாம். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். சிலரின் தந்தை தொழில், வேலைக்காக வெளிநாடு சென்று தங்கலாம். ஆன்மீக நாட்டம் மிகும். இளம் வயதினருக்கு புத்திர பிராப்தம் கிடைக்கும்.மத்திம வயதினருக்கு பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். வயோதிகர்களுக்கு கொள்ளு பேரன், பேத்தி பிறப்பார்கள். 60 வயதை நெருங்குபவர்கள் சொத்து , வியாபாரத்தை பாகப் பிரிவினை செய்து பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுக்க விரும்புவார்கள். குல தெய்வம் , பூர்வீகம் தெரியாதவர்கள் அதனை தெரிந்து கொள்ள கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
7ம் பார்வை பலன். சனியின் 7ம் பார்வை ராசிக்கு இருப்பதால் ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசாபுத்தி இல்லாதவர்களுக்கு புனர் பூ தோஷம் ஏற்பட்டு ஜான் ஏறினால் முழம் சறுக்கும். மனதில் வெறுமை குடிபுகும். மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஞாபக மறதி மிகும். எனக்கு உதவி செய்ய யாருமில்லை என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பார்கள். அதிர்ஷ்டம் தன்னை தேடி வர வேண்டும் என அதிர்ஷ்டத்தை தேடி காலம் தள்ளுவார்கள். சம்பந்தம் இல்லாத உறவுகளின் சொத்துக்காக இருக்கும் பொன், பொருளையும் ஏமாந்து பிறருக்கு கொடுத்து பின்னர் அதற்காக வருந்துவார்கள். தோற்றப் பொழிவு குறையும். நன்றி கெட்ட குடும்ப உறவுகளை நினைத்து மனம் வெதும்பும். உடல் சோர்வு , கை, கால் , மூட்டு வலி மிகுதியாகும்.
10ம் பார்வை பலன்: சனியின் 10ம் பார்வை சுக ஸ்தானமான 4ம் இடத்திற்கு இருப்பதால் ஆரோக்கிய குறைபாடுகள் மருத்துவத்தில் சீராகும். தாய், தாய் வழி உறவுகளின் அன்பு, அனுசரணை, ஆசிர்வாதம் கிடைக்கும். தாயாரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க முயல்வீர்கள். அழகு, ஆடம்பர பொருட்கள் விதவிதமான ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். நிலம் விற்றல், வாங்குதல் போன்ற பணிகள் சிறு தடை தாமதத்துடன் நடக்கும். நிலம் தோட்டம் வாங்கி விவசாயத்தில் புதுமையை புகுத்தும் எண்ணம் மிகும். கால்நடை வளர்ப்பில் ஆர்வம் மிகும். கடன் வாங்கி உங்களின் சொந்த வீடு, வாகன கனவை நிறைவேற்ற ஏற்றகாலம். சிலருக்கு வீடு, வாகன பராமரிக்க செலவு மிகுதியாகும்.
சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை
சிம்ம ராசிக்கு 4, 9ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் தாய், தந்தையின் உடல் நலம் சிறக்கும். ஆயுள் பலம் அதிகரிக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தாய், தந்தை மீண்டும் சேர்த்து வாழ்வார்கள். தாய், தந்தை பிறந்த குலத்திற்கு பெருமை சேர்ப்பீர்கள்.
வயது முதிர்ந்தவர்களுக்கு அரசாங்கத்திலிருந்து பென்சன், உதவித் தொகை கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில், குலத்தொழில் செய்பவர்களின் வளர்ச்சி விண்ணைத் தொடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மன திருப்தி கிடைக்கும். உயர் அதிகாரி களின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு உத்தியோக முயற்சி கைகூடும்.
சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை
கோட்சாரத்தில் அக்டோபர் 30, 2023 வரை ராசிக்கு 9ம் இடத்திலும் அதன்பிறகு ராசிக்கு 8ல் சஞ்சரிக்கும் ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் நன்மையும் தீமையும் கலந்தே நடக்கும் . இது வரை நீங்கள் கட்டி காப்பாற்றிய வீரம், விவேகம் மட்டுப்படும். உங்களின் இளைய சகோதரரை நம்பி நீங்கள் ஒப்படைத்த பணிகளால் இழப்பும், மன வருத்தமும் வரும். உங்கள் சகோதரர் மேல் தவறு இருந்தாலும் பலி உங்கள் மீதே விழும்.
செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்க நேரும். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதால் உற்றார் உறவுகளுடன் பெருந்தன்மையாக நடந்து கொள்வது நல்லது. எந்த முக்கியமான விசயத்திலும் தடாலடியான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். சிலருக்கு பொருளாதார பற்றாக் குறையை சமன் செய்ய கடன் வாங்க வேண்டிய நிலை இருக்கும். பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும்.
17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். எதிர் பாரத தனவரவினால் பொருளாதார மாற்றமும் ஏற்றமும் மன மகிழ்வை தரும். அநாவசிய ஆடம்பர செலவு செய்துவிட்டு பின்னர் சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள். அசட்டுத்தனமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னாளில் வருந்தும் நிலை ஏற்படும். இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிகமாக போராட நேரும். தன்னம்பிக்கை தைரியம் குறையும்
பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை
ராசிக்கு 5,8ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்கடுமையான சிகிச்சைக்குப் பிறகு குழந்தை பேறு கிடைக்கும்.சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய தொழில் ஆரம்பிப்பார்கள்.பூர்வீகம், சொத்து தொடர்பான விவகாரங்கள் தடை தாமதமானாலும் சாதகமாக நிறைவேறும். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் மிகும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் உங்களை மகிழ்விக்கும். சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்புக்காக வெளியூர் செல்லநேரும். 5ம்மிடம் நேரடி அதிர்ஷ்டத்தைக் கூறுமிடம்.
8ம்மிடம் மறைமுக அதிர்ஷ்டத்தைக் கூறுமிடம். இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தை, உயில் சொத்து, அதிர்ஷ்ட பணம், நகைகள், தொழில் லாபம் என பணமும், பொருளும் பலவிதத்தில் உங்களை மகிழ்விக்கும். 30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் அவசர முடிவுகள் எடுக்க கூடாது. அரசியல்வாதிகளுக்கு பொது மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் . அநாவசியமான விமர்சனங்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். இருக்கின்ற வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்கு செல்ல முயற்சிப்பது, தொழில் விரிவாக்கம் செய்ய நினைப்பது போன்றவை சற்று தடைகளையும் மன அளவில் உளைச்சல்களையும் தரும். எந்த ஒரு நிலையிலும் கூட்டுத் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக் கூடாது .
திருமணம்: ஏழாமிடம் எனும் மாரக ஸ்தானமே ஒருவருக்கு திருமண பந்தத்தை உருவாக்கி கொடுக்கும் களத்திர ஸ்தானமாகும்.40 வயதைக் கடந்தும் திருமணம் நடக்காத ஆண் , பெண்களுக்கு கூட திருமணம் நடக்கும். கோட்சார ரீதியான சனி சந்திரன் சம்பந்த புனர் பூ தோஷத்தால் திருமண பாதிப்பு இருப்பவர்கள் சனிக்கிழமை சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபடவும்.
பெண்கள்: சிம்ம ராசி பெண்களுக்கு இது ஒரு மகிழ்சியான நேரம். சுப விசேஷங்கள் நடைபெறும். திருமண வயதில் மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களின் திருமணத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவின் வருகையால் குடும்பம் கலகலப்பாக இருக்கும். பேரன், பேத்தி பிறக்கும்.குடும்ப உறுப்பினர்களின் அன்பும் அரவைணைப்பும் கிடைக்கும்.
பரிகாரம்: வாழ்க்கை என்பது கண்ணாடி பாத்திரம் அதை கவனமாக கையாள வேண்டும். ஓடி ஓடி ஒளிந்தாலும் பிரச்சனை தேடித்தேடி வரும் காலம் என்பதால் நம்பிக்கையுடன் செயலாற்ற இதுவும் கடந்து போகும். கருமை நிற பசுவிற்கு எள் நாட்டுச் சர்க்கரை கலந்து உணவளிக்க வேண்டும்.சனிக்கிழமை பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது சிறப்பு.சனிக்கிழமை பழமையான சிவன் கோவில் சென்று பால் அபிசேகம் செய்து வழிபட வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2022
ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை
ஆறில் வருகிறது சனி, அனைத்திலும் வெற்றி இனி!
சிம்ம ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 6-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 6-ம் இடம் என்பது எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிப்பதாகும். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். எதிரிகள் ஸ்தானாதிபதி, எதிரிகள் ஸ்தானத்திலேயே இப்பொழுது சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகும். பகை பாராட்டியவர்கள் பாசம் காட்ட முன்வருவர். ஜீவன ஸ்தானமாகவும் அது கருதப்படுவதால் உத்தியோகம் மற்றும் தொழிலில் உங்கள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் இருக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி இணைவதால் 'நீச்ச பங்க ராஜயோகம்' ஏற்படுகின்றது. சப்தமாதிபதியாகவும் சனி விளங்குவதால், குடும்பப் பிரச்சினைகள் அவ்வப்போது வரத்தான் செய்யும்.
எதிரிகளின் பலம் குறையும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தை அடையும் சனி பகவானால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை, 3, 8, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. அதன்படி சகோதரம், சகாயம், வழக்குகள், உடல்நலம், இழப்புகள், இடமாற்றங்கள், தூரதேசப் பயணங்கள், விரயங்கள், கடன் சுமை, ஆயுள் விருத்தி, நீங்காப்பகை, ஏமாற்றம், புனிதப்பயணங்கள், மூதாதையர் சொத்துக்கள் சம்பந்தப்பட்டவைகளை குறிக்கும் இடங்களில் சனியின் பார்வை பதிவதால், அந்த ஆதிபத்யங்களில் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரலாம். 3-ம் இடத்தை சனி பார்ப்பதால் உடன்பிறப்புகளின் பகை அகலும். சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சனியின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் சிறுசிறு ஆரோக்கியத் தொல்லைகள் வந்து அலைமோதும்.
சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால், திடீர் திடீரென பயணங்கள் ஏற்படும். வாடகை வாகனத்தில் உலா வந்த நீங்கள், இனி சொந்த வாகனம் வைத்துக்கொள்ள வாய்ப்புகள் கைகூடிவரும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சந்தோஷ வாய்ப்புகள் ஏராளமாக வந்து சேரும். சிந்தித்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். சனி பகவான், உங்கள் ராசி நாதனான சூரியன் காலில் சஞ்சரிப்பதால் பிரகாசமான எதிர் காலம் உங்களுக்கு வந்து சேரும். மனையில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சுபவிரயங்கள் அதிகரிக்கும். விரயாதிபதியாக சந்திரன் விளங்குவதால் இக்காலத்தில் வீட்டுப் பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்ளலாம். அசையாத சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் இருந்த தடை அகலும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மனைகட்டிக் குடியேறும் யோகம் உண்டு. குடும்ப உறுப்பினர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை கிடைத்து குடும்ப வருமானம் உயரும். செவ்வாய் உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமாவார். எனவே பூமி விற்பனை தொழில் செய்பவர்களுக்கு, பொருளாதாரநிலை நினைக்க இயலாத அளவு உயரும். இக்காலத்தில் சனியும் கும்ப ராசிக்குச் செல்கின்றார். கண்டகச்சனியாக இருந்தாலும் கும்பம் அவருக்குச் சொந்த வீடு என்பதால் கெடுபலன்களை கொடுக்க மாட்டார். புது முயற்சிகளில் தாமதம் உருவாகலாமே தவிர, காரியம் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் வருவதால், அதன் பார்வை பலம் உங்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்கும். ஆரோக்கியம் சீராகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது சுபகாரியங்கள் முடிவடையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. வருமானம் இருமடங்காக உயரும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். எனவே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானம் பலப்படுகின்றது. இதனால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கேது மூன்றில் இருப்பதால் சகோதரர்களிடையே ஒற்றுமை குறையலாம். கூட்டு வியாபாரம் செய்த உடன்பிறப்புகள் தனித்தியங்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பர்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அஷ்டமத்தில் ராகு வருவதால் ஆதாயத்தைக் காட்டிலும் விரயங்கள் கூடலாம். இருப்பினும் குரு வீடாக இருப்பதால் சுபவிரயங்களே அதிகரிக்கும். கேது சஞ்சாரத்தால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். இக்காலத்தில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
ஞாயிற்றுக்கிழமை தோறும் விரதமிருந்து சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இல்லத்துப் பூஜை அறையில் சிவ குடும்ப படம் வைத்து திருவாசகம் படித்து வழிபடுவது நல்லது. வாழ்க்கை வளமாக அமையும்.