சாதனையாளர்களின் வரிசையில் இடம் பிடிக்க நினைக்கும் சிம்ம ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தனலாபாதிபதி புதனுடன் இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
சப்தம ஸ்தானத்தில் இருக்கும் சனியை, செவ்வாய் பார்ப்பதால் குடும்பச் சுமை அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலமே உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
குரு வக்ரம்
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் அடைகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். பஞ்சம - அஷ்டமாதிபதியான குரு, தொழில் ஸ்தானத்தில் வலிமை இழப்பது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளால் சில பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். பாகப்பிரிவினை முடிவடையாமல் இழுபறி நிலையிலேயே இருக்கலாம்.
அண்ணன் - தம்பிகளுக்குள் ஏற்பட்ட அரசல், புரசல்களை பெரிதாக்க வேண்டாம். எதையும் சமாளிக்கும் வல்லமை பெற்ற உங்களுக்கு, குருவின் வக்ர காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். 10-ல் குரு வருவதால் பதவி மாற்றம் உண்டு.
சனி - செவ்வாய் பார்வை
கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். அவரது பார்வை சனியின் மீது பதியும் பொழுது குடும்பப் பிரச்சினைகள் கூடுதலாக இருக்கும். கடுமையாக முயற்சித்தும் காரியங்கள் கைகூடாமல் போகலாம். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போய் வீண்பழிக்கு ஆளாக நேரிடும்.
மகர - சுக்ரன்
கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் சுக்ரன். அவர் இப்பொழுது மகரத்திற்கு வரும்பொழுது கடன் சுமை குறையும். கவலைகள் தீரும். இடம், பூமி வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
பழைய நகைகளை கொடுத்துவிட்டு, புதிய நகைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணம் பலன் தருவதாக அமையும். உடன்பிறப்புகள் வழியே சுபகாரியம் முடிவாகும். நீண்ட நாளையப் பிரச்சினைகளை சரிசெய்வீர்கள்.
செவ்வாய் வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் வக்ரம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கிய குறைபாடு உண்டாகும். குறிப்பாக நரம்பு, எலும்பு பாதிப்புகள் ஏற்பட்டு மனக்கவலை அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்ய இயலாது. வீடு மாற்றம் வரலாம். தந்தை வழி உறவில் விரிசல்கள் ஏற்படும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சியில் இடையூறு வரக்கூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பதவி மாற்றம் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்தாலும் 'இடமாற்றம் அல்லது நாடு மாற்றம் செய்யலாமா?' என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், விருப்ப ஓய்வு பெற நினைப்பார்கள். கலைஞர்களுக்கு தலைமைப் பதவி தேடி வரும். மாணவ - மாணவிகளுக்கு மறதியின் காரணமாக படிப்பில் அக்கறை குறையும். பெண்கள் குடும்பத் தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எதையும் எளிதில் செய்ய இயலாது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 19, 20, 25, 26, டிசம்பர்: 1, 2, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.