null
தன்னம்பிக்கையான மகர ராசியினரே
மகர ராசியின் அதிபதி மற்றும் தன ஸ்தான அதிபதியான சனி பகவான் தற்போது கோட்ச்சாரத்தில் மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். தனது மூன்றாம் பார்வையால் ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் பன்னிரெண்டாம் இடமான விரைய ஸ்தானத்தையும் பார்ப்பார். மூன்றாமிடம் என்பது உப ஜெய ஸ்தானமாகும்.வெற்றி, வீரியம், விஜயம், சகாயம், திட்டமிடுதல் ஆகியவற்றை கூறும் இடத்திற்கு சனி பகவான் செல்லும்போது உங்களுக்கு தொட்டது துலங்கும் பட்டது பூக்கும். விரும்பத் தகுந்த இடப்பெயர்ச்சி நடக்கும். வீடு மாற்றம் வேலை மாற்றம் ஊர் மாற்றம் நாடு மாற்றம் வரலாம்.
சகாய ஸ்தான சனியின் பொது பலன்கள்
பல்வேறு சோதனைகள் சாதனையாகும். உங்களின் முயற்சிகள் பலிதமாகும். தைரியம் ,தெம்பு உருவாகும். இது உங்களுக்கு பொற்காலமாகும்.அழியாத புகழை அடையப் போகிறீர்கள்.உடன் பிறந்தவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும், ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிரும். உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். இது வரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். சிந்தனை செயல் திறன் கூடும். முகப் பொழிவு ஏற்படும். தன வரவு இரட்டிப்பாகும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும்.
ஆன்ம பலம் பெருகும். தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கைநிறைய பணம் புரள்வதால் மனதில் நிறைவும் நெகிழ்சியும் உண்டாகும்.கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். கடனாக கொடுத்திருந்த பணம் திரும்ப கிடைக்கும். தடைபட்ட சுப காரியங்களும் முக்கிய பணிகளும் சுலபமாக நடந்து முடியும். நவீனமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. சட்ட ரீதியான நெருக்கடிகள் நீங்கும். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். திருமணத்தடைத் அகலும்.
நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும்.மூத்த சகோதர,சகோதரி சித்தப்பா மூலம் பொருள் உதவி கிடைக்கும்.சட்டச் சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்டச் சிக்கலாக இருந்தாலும் நீதிமன்ற படி ஏறுவதை தவிர்த்து பேசித் தீர்க்க முயல வேண்டும். சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் குரு பார்வை சாதகமாக இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படாது.சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம்.உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும்.தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.தாய், தந்தை பொருள் உதவி செய்து தொழில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள். திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை நிறைவேற்றுதல் போன்ற சுப செலவு உண்டாகும்.பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் வீண் செலவுகளால் மன அமைதி குறையும்.முன் கோபத்தில் பகைமை உருவாகும் என்பதால் பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். காரியத்தடையால் மன சஞ்சலம் அதிகரிக்கும்.
சனியின் 3ம் பார்வை பலன்கள்
சனியின் 3ம் பார்வை 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு இருப்பதால் குடும்பத்துடன் சென்று குல தெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். குல தெய்வ , இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி மன அமைதி அடைவீர்கள்.பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு . ஆன்மீக நாட்டம் மிகும். குழந்தைகளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்து மகிழ்வீர்கள். அவ்வப்போது குழந்தைகளைப் பற்றிய மன சஞ்சலமும் மனதை வாட்டத் தான் செய்யும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். திருமண வயதில் இருக்கும் உங்களின் மகள், மகனின் திருமணத்தை சீரோடும் சிறப்போடும் நடத்துவீர்கள். பங்குச் சந்தையால் பெரும் ஆதாயம் உண்டு. அரசியலில் இருப்பவர்களுக்கு விரும்பிய பதவி தேடி வரும். சனி பகவான் பதவி கொடுத்தால் யார் தடுக்க முடியும். சனி பகவான் நியாயவாதி . கொடுத்த பதவியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை ஏழரைச் சனியின் காலத்தில் கற்றுக் கொடுத்து இருப்பார். வெளிநாட்டில், வெளி மாநிலத்திலிருந்து பூர்வீகம் வர முடியாமல் தவித்தவர்கள் பூர்வீகம் வந்து உற்றார், உறவினரை கண்டு மகிழ்வீர்கள். இதுவரை உங்களுக்கு பகல் கனவாக இருந்த நாற்காலி ஆசை நனவாகும். அரசியல் வாதிகள் மீண்டும் களம் இறங்கி ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யலாம்.
சனியின் ஏழாம் பார்வை பலன்
சனியின் 7ம் பார்வை 9ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு இருப்பதால் இதுவரை தடைபட்ட நீத்தார் வழிபாட்டை செய்து முடிப்பார்கள். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் இருந்தால் உங்களுக்கு சாதகமாகும். காசி, ராமேஸ்வரம், அமர்நாத், கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தி போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று உங்கள் பாக்கிய ஸ்தானத்தை பலம் பெறச் செய்வீர்கள். கோவில் திருப்பணிகளை பொறுப்பேற்று நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். பல வருடங்களாக நீங்கள் செய்த பிரார்தனை, வழிபாடுகள் பலன் தரும். தான தர்மங்களில் நாட்டம் மிகும். ஆசை , பேராசை, எதார்த்தம் இந்த மூன்றில் எது நிராந்தரமாக மனிதனை வழி நடத்தும் என்ற உண்மை புரியும். பள்ளிக்கு சென்று கற்றதை விட வெளி வட்டாரத்தில் அனுபவத்தில் கற்ற பாடம் உங்களுடன் பயணம் செய்யும். காலம் உங்களுக்கு பல வித அனுபவங்களை பாடமாக நடத்தியுள்ளது. இந்த கால கட்டத்தில் வேகம் கலந்த விவேகத்துடன் செயல்பட்டு சந்தோஷ மழையில் நனையப் போகிறீர்கள். 3,6,11ம் இடங்கள் சனி பகவானுக்கு உகந்த ஸ்தானம் .தைரியத்துடன் வீரத்தைக் கொடுக்கும் ஸ்தானம் .அழியாப் புகழையும் பெருமையையும் கொடுக்கும் ஸ்தானம்.
சனியின் 10ம் பார்வை பலன்கள்
சனியின் 10ம் பார்வை 12ம்மிடமான விரய ஸ்தானத்திற்கு இருப்பதால் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும் அல்லது பணி நிமித்தமாக நீங்கள் வேலை பார்க்கும் கம்பெனியின் மூலம் வெளிநாடு சென்று வருவீர்கள்.ஒரு சிலர் பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும். ஜனன ஜாதகத்தில் பாதகமான தசா , புத்தி நடந்தால் சுகவீனத்தால் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரலாம். அந்நிய மொழி, பாஷை பேசுபவர்களின் நட்பு கிடைக்கும், அந்நிய மொழி பேசுபவர்களிடையே வாழும் நிலை ஏற்படும். சிலருக்கு மத நம்பிக்கை குறையும். சிலர் அதீத மத நம்பிக்கையால் சட்ட சிக்கலை சந்திக்க நேரும்.மனம் தனிமையை நாடும். பாவம் எது? புண்ணியம் எது?வாழ்நாளில் மனிதன் எப்படி வாழ வேண்டும் போன்ற சிந்தனைகள் தோன்றும்.மோட்சம் அடையும் மார்க்கத்தில் ஈடுபடும் ஆர்வம் மிகும்.
விரயம் கட்டுக்குள் இருக்கும். சுபச் செலவாகவே இருக்கும்.சிலருக்கு வீடு மாற்றம் செய்ய நேரும்.இது வரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டி குடிபுகும் ஆர்வம் மிகும் .உங்கள் எண்ணம் போல் வீடு , வாகன யோகம் அமையும்.சிலர் வீட்டை புதுப்பிப்பார்கள். பல வருடங்களாக தடைபட்ட எண்ணற்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கிட்டும்.
ஒருவரின் குலம் கோத்திரம் மரபு ஆகியவற்றை கூறும் ஒன்பதாம் இடத்திற்கு சனி பார்வை இருப்பதால் உங்களின் காதல் விசயம் பெற்றோருக்கு தெரிய வரும். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு காதல் திருமணம் நடைபெறும். மகர ராசியினர் புதிய காதல் வலையில் மாட்டாமல் மனதை கட்டுப்பாடுடன் வைக்க வேண்டும். சிலருக்கு சட்டத்திற்கு புறம்பாக 2 வது திருமணம், தவறான தரம் குறைந்த நட்பும் ஏற்படும். பெண்கள் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சீராகும்.ஆரோக்கியத் தொல்லை குறையும்.தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பார்கள். தாயின் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.சிலருக்கு பிள்ளைகள் மூலம் வீடு, வாசல் யோகம் உண்டாகும்.
பரிகாரம்
ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் காப்பகங்கள் , ஊன முற்றோருக்கு இயன்ற உதவிகளை செய்தால் நன்மைகள் மிகுதியாகும். மன சஞ்சலத்திலிருந்து விடுபட விநாயகரை தினமும் 21 முறை வலம் வர வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406