நினைத்ததை நடத்தி முடிப்பதில் வல்லவரான கும்ப ராசியினருக்கு இந்த குரோதி வருட தமிழ் புத்தாண்டு அனுகூலமான ஆண்டாக அமைய நல் வாழ்த்துக்கள்.
சுகஸ்தான குருவின் பலன்கள்:
கும்ப ராசிக்கு 2, 11ம் அதிபதியான குரு பகவான் ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானம் செல்வது சுபமான பலனாகும். 4ம்மிடம் என்பது வீடு, வாகனம், கால்நடை பாக்கியம், தாயன்பு, தேக சுகம், கல்விநிலை பற்றிக் கூறுமிடம். சொத்து, வீடு, வாகனம் என உங்கள் ஆழ்மன எண்ணம், ஆசைகள் நிறைவேறும். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி 4ம் மிடம் செல்வதால் பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும்.
குடும்ப சுமை குறையும். பணம் எனும் தனம் சமூக அங்கீகாரத்தை பெற்றுத்தரும். ராஜ மரியாதை கிடைக்கும். குருவின் 5ம் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிகிறது. அதிர்ஷ்டம், புதையலை நம்பி கால விரயம் செய்வீர்கள். தவறான சொத்து அல்லது பயன்படாத சொத்தை கட்டிக்காத்து ஏமாறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். காது, மூக்கு தொடர்பான அறுவை சிகிச்சை நடக்கலாம்.
பங்குச் சந்தை முதலீடுகள் நிலை தடுமாற வைக்கும். உங்களிடம் வேகம் அதிகரித்து உச்ச கட்ட கோபத்தை வெளிக்காட்டுவீர்கள். சிலருக்கு கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்படலாம். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பதிகிறது.
10ம்மிடம் என்பது தொழில் ஸ்தானம் மட்டுமல்ல, கர்ம ஸ்தானம். குழந்தை குழந்தை பாக்கியம் ஏற்படும். கர்மம் செய்ய புத்திரம் இல்லாதவர்களுக்கு புத்திரன் பிறப்பான். உங்களின் செயல் பாடுகளை மாற்றிக் கொண்டே இருப்பீர்கள் இதுவரை ஒரு தொழில் செய்தவர்கள் புதிய இணைத் தொழில் துவங்குவார்கள்.
சிறிய தொழில் செய்தவர்கள் தொழிலை விரிவுபடுத்துவார்கள். ஆனால் ஜென்மச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக வலிமையின் படி தொழில் முயற்சியில் ஈடுபடுவது நல்லது. குருவின் 9ம் பார்வை விரய ஸ்தானத்தில் பதிகிறது. எதையும் யோசிக்காமல் புதிய சொத்துக்கள் வாங்கிப் போடுவது உத்தமம். நிலைமை சீராகும் போது கடன் தானாக அடைபட்டு விடும்.
ஜென்மச் சனியின் பலன்கள்:
ராசி அதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் குரோதி வருடம் முழுவதும் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். வேலைப் பளு அதிகமாகும். வீண் விரயங்கள் மிகுதியாகும். சனியின் 3ம் பார்வை மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் பதிகிறது. அடமானத்தில் உள்ள சொத்து நகைகளை மீட்பார்கள். மாணவ மாணவியர் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். சம்பந்திகளுடன் ஏற்பட்ட பிணக்கு மறையும்.
சனியின் 7ம் பார்வை சம சப்தம ஸ்தானமான களத்திர ஸ்தானத்தில் பதிகிறது. சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். சுய ஜாதக ரீதியாக தசா புக்தி சாதகமற்றவர்கள் சிலர் நல்ல தொழில் கூட்டாளிகளை விலக்கி டூபாக்கூர் கூட்டாளிகளை நம்பி ஏமாந்து போகலாம். முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடு மிகும். கோட்சார ரீதியான புனர் பூ தோஷத்தால் திருமண முயற்சிகள் இழுபறியாகும்.
பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் சம்மந்தம் முடிப்பீர்கள். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். தொழில் உத்தியோகத்திற்காகவும், கருத்து வேறுபாடு காரணமாகவும் பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். கூட்டுத் தொழில் சிறைப்படையும். தொழில் கூட்டாளிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். சனியின் 10ம் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. இயல்பான பணியை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.திறமையான வேலையாட்கள் கிடைப்பார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். வெளிநாட்டு பயணம் மற்றும் வேலையில் நிலவிய தடைகள் விலகும். தொழில் துவங்கி நிலைத்து நிற்க முடியாமல் தவித்தவர்களின் திறமையை வெளிப்படுத்த உகந்த காலமாக அமையும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் விலகும்.
2ல்ராகு / 8ல் கேதுவின் பலன்கள்:
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான 2 ல் ராகுவும் விபரீத ராஜ யோகம் விபத்து, கண்டம், வம்பு, வழக்கு, சர்ஜரி பற்றிக் கூறும் அஷ்ட ஸ்தானத்தில் வழக்கிற்கு காரக கிரகம் கேது சஞ்சரிக்கிறார். 2ம்மிடமான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து குரு பகவானைப் போலவே செயல்படப்போகிறார். குடும்பத்தில் ஒற்றுமை நிம்மதி பெருகும். புதிய வேலையில் நிறைவான ஊதியமும் மனத் திருப்தியும் ஏற்படும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சமுதாய மதிப்பும், மரியாதையும் காப்பாற்றப்படும். திடீர் தன வரவை ஏற்படுத்தும் சக்தி ராகுவிற்கு உண்டு என்பதால் பொருளாதார வசதி அதிகரிக்கும். பல வழிகளில் இருந்தும் பணம் வரும்.
வெளிநாட்டுப் பணம் கையில் பணம் புரளும். சுய சம்பாத்தியம் பெருகும்.பொன்னும், பொருளும் சேரும். துன்பங்கள் பொசுங்கி விடும். நல்ல மாற்றங்கள், திடீர் திருப்பங்கள் ஏற்படும். இழந்த அனைத்தையும் திரும்பப் பெறப் போகிறீர்கள். நீங்கள் செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும்.
அஷ்டம கேதுவால் குபேர யோகம் கிடைக்கப்போகிறது. கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து விபரீத ராஜ யோகத்தை கொடுக்கப்போகிறார். மன பேதத்துடன் கருத்து வேறுபாட்டுடன் வாழும் அம்மா பிள்ளைகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவார். பட்டா மற்றும் முறையான சொத்துப் பத்திரம் இல்லாத சொத்துக்களுக்கு முறையான ஆவணங்கள் கிடைக்கும்.
வட்டிக் கொடுமையில் சிக்கி பல வருடங்களாக மீட்க முடியாத அடமானச் சொத்துக்களை பேச்சு வார்த்தையின் மூலம் திருப்பப் பெற உகந்த காலம். ஒரு சிலருக்கு விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம், வம்பு, வழக்கு போன்ற அசுப பலன்களும் ஏற்படும்.
பெரிய அளவில் முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக வாங்கித்தர வேண்டாம். இருப்பதை காப்பாற்றுவது புத்திசாலித்தனம்.என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும்.
அவிட்டம் 3, 4:
செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 3, 4ம் பாதம் கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டில் மன உளைச்சல் அகலும். எந்த ஒரு செயலிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். கடந்த காலத்தில் நிலவிய பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாது. சிலருக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பிள்ளைப் பேறு, உயர்கல்வி போன்ற சுப விரயங்கள் ஏற்படும்.
தொழில் வளம் சிறக்கும். வாக்கு சாதுர்யத்தால் தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும். அலுவலக டென்ஷன் குறையும்.உங்கள் மீது போடப்பட்ட வழக்கில் தீர்ப்பு சாதகமாகும் அல்லது தண்டனைக் காலம் குறையும். தாய்மாமனுடன் இருந்த மனஸ்தாபம் மாறும். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெறுவார்கள்.திருமணம், புத்திரபிராப்தம் போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும்.
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர்.முருகனை வழிபடவும்.
சதயம்:
ராகுவின் சதயம் நட்சத்திரம் கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருட புத்தாண்டு நல்ல மாற்றத்தை தரும். எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். வாழ்வில் வசந்தம் வீசும். உபரி வருமானத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். உங்கள் சேமிப்புகள் சுப விரயங்களாக மாறும். சுய தொழில் செய்பவர்களுக்கு இக் காலம் வசந்த காலமாக மாறும். லாபம் பல வழிகளிலும் வரும்.
தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கேட்ட உதவி கிடைத்து முன்னேற்றம் காண்பீர்கள். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு கிடைக்கும். பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் தொழில், உத்தியோக பிரச்சனைகள் சீராகும். தொழில் வியாபாரத்தில் மந்தமான நிலை இருந்தாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.
புத்திரப்பேறில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும்.பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். தாய் வழியில் ஏற்பட்ட மனக்கவலைகள், கருத்து வேறுபாடு அகலும்.
விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். அங்காளி பங்காளி வகையில் நிலவிய மனக்கசப்புகள் விலகும். திருமணத்தடை அகலும்.தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள். குல தெய்வத்தை வழிபடவும்.
பூரட்டாதி 1, 2, 3:
குருவின் பூரட்டாதி நட்சத்திரம் 1, 2, 3ம் பாதம் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டு வசந்தகாலமாக மாறும். புதிய முயற்சிகள் கைகூடும். வறுமையில் வாடியவர்களுக்கு தேவைகள் நிறைவேறும். மனநிறைவும், நிம்மதியும் அதிகரிக்கும். மருமகன் மகன் ஸ்தானத்தில் நின்று உங்கள் தேவைகளை நிறைவு செய்வார்.
குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். அரசு வேலை முயற்சி சாதகமாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டாளிகள் பக்குவமாக நடந்து லாபத்தை அதிகரிப்பார்கள். தொட்டது துலங்கும்.வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் அல்லது வாபஸ் பெறப்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும்.
வெளியூர், வெளிநாட்டு வேலை அல்லது குடியுரிமை பெற்று செட்டிலாவது போன்ற பலன்களை எதிர்பார்க்கலாம். கடன்காரர்களின் கெடுபிடி குறையும். வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. குடும்ப குழப்பங்கள் நீங்கி நன்மை உண்டாகும். லஷ்மி குபேரரை வழிபடவும்.
திருமணம்:
2ல் ராகு, 8ல் கேது கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம். மேலும் இது ஜென்மச் சனியின் காலம் என்பதால் புனர் பூ தோஷம். சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமணம் செய்வது நல்லது. காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளது.
பரிகாரம்:
ஜென்மச் சனி மற்றும் குடும்ப ஸ்தானத்தில் ராகு இருப்பதால் குடும்ப ஏற்படும் அசவுகரியங்களை சீராக்க திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரரை வழிபட வேண்டும்.