அனுகூலமான வருடம்
உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசி யினரே!
பிறக்கப் போகும் விசுவாவசு தமிழ் புத்தாண்டு உங்களுக்கு பிரகாசமான எதிர் காலத்தை உருவாக்க நல்வாழ்த்துக்கள். ஆண்டின் ஆரம்பத்தில் சனி பகவான் தனம், வாக்கு,குடும்ப ஸ்தா னத்தில் நிற்கிறார். தனது மூன்றாம் பார்வையால் சுகஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தை யும் பத்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் பார்ப்பார்.
14.5.2025 முதல் குரு பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு சென்று தனது ஐந்தாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் ராசியையும் பார்ப்பார்.
18.5.2025 முதல் ராசியில் ராகு பகவானும் சம சப்தம ஸ்தானத்தில் கேது பகவானும் சஞ்சரிப்பார்கள். வருட கிரகங்களின் சஞ்சாரத்தால் தமிழ் புத்தாண்டில் ஏற்பட போகும் பலன்களை பார்க்கலாம்.
விசுவாசு ஆண்டின் பொதுவான பலன்கள்
இந்த ஆண்டு உங்களுக்கு குரு மற்றும் சனி பகவானின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது. பாதச் சனியாக இருந்தாலும் குரு பகவான் உங்களை காப்பாற்றுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. மே மாதத்தில் பஞ்சம ஸ்தானத்திற்கு செல்லும் குருபகவான் அருட்கடாட்சத்தால் ராசி பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானம் வலிமை பெறுகிறது. தெய்வ அனுகூலம் தற்போது கிடைக்கப் பெறுவதால் சுய ஜாதக ரீதியான அனைத்து விதமான தோஷங்களும் சாபங்களும் விலகும்.
இதுவரை நிலவிய கடினமான சூழ்நிலையிலிருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் உற்சாகம் மிகுதியாகும். தடைபட்ட அனைத்து இன்பங்களும் மீண்டும் வந்து சேரும். கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் ஓடி வந்து நிற்கும். இனம் புரியாத நோய் தாக்கம், மனசஞ்சலம் பயம் அகலும்.
புதியதாக பிறப்பெடுத்தது போன்ற உணர்வு மேலோங்கும். உங்கள் வாழ்நாள் லட்சியங்களை, எண்ணங்களை கனவுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றக் கூடிய முயற்சிகளில் ஈடுபடலாம். தடைபட்ட அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும்.
குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.தடைபட்ட தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலமாக இருக்கும்.குழந்தைகளை சொந்த பொறுப்பில் கண்காணிக்க வேண்டும். முக்கிய தேவைகளுக்கு அரசுடமை வங்கிகளில் நகைகளை அடமானம் வைக்க வேண்டும். அருகில் உள்ள வட்டி கடையில் வைக்க கூடாது.
பெரும் பணம் புரளும் தொழில் மற்றும் வட்டித் தொழில் செய்பவர்கள் ரொக்க பரிவர்த்தனையை தவிர்க்க வேண்டும். பண பரிவர்த்தனைக் கான முறையான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அதிக ரொக்க பணம் கையில் வைத்திருக்க கூடாது. அவரவரின் தசா புத்திக்கு ஏற்ப மத நம்பிக்கை குறையும் அல்லது அதிகமாகும்.
திரையரங்கம், தங்கும் விடுதி, மருத்துவமனை, உணவகம் நடத்துபவர்கள், தொழிற்சாலை நடத்துபவர்கள் நீர், நெருப்பு, காற்று சார்ந்த பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் வீட்டில் பயன்படுத்தாத தேவையற்ற எலக்டானிக் சாதனங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
பொருளாதாரம்
வருட பலனை பொறுத்தவரை அனைவரின் முதல் எதிர்பார்ப்பும் பொருளாதாரம் பற்றியதாகவே இருக்கும்.தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வீட்டு சனியும், பஞ்சம ஸ்தானத்திற்கு செல்லும் குருபகவானாலும் பணபர ஸ்தானமான 2,5,8,11ம்மிடங்கள் இயங்குவதால் செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும்.
அதிர்ஷ்டம், பேரதிர்ஷ்டம் விபரீத ராஜயோகம் தரக்கூடிய வருடம்.பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகமாகும்.கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் அளவில் லாபங்கள் அதிகரிக்கும். வராக கடன்கள் வசூலாகும்.
குடத்தில் இட்ட விளக்காக உள்ள உங்கள் வாழ்க்கை. குன்றிமேல் ஏற்றிய விளக்காக பிரகாசிக்கத் துவங்கும்.ஜென்ம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையத் துவங்கும்.
அவிட்டம் 3,4
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அழகு, ஆடம்பர பொருட்கள் விற்கும் சில்லறை வியாபாரிகளுக்கு வியாபாரம் அமோகமாக இருக்கும். மொத்த வியாபாரிகள் புதியவர்களை நம்பி பண முதலீடு செய்ய வேண்டாம். குடும்பத்தில் திருமணம், சடங்கு போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடையச் செய்யும் பக்தி மார்க்கத்தில் மனம் லயிக்கும். பாவம், புண்ணியம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
பஞ்சம ஸ்தானத்தில் தன லாபாபதிபதி குரு இருப்பதால் மனம் தளராமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.விரைவில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கான நல்ல பலன் கிடைக்கும். சரியான திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினால் மேன்மையான பலன்களை பெற முடியும் .சொத்து வாங்குவது, விற்பது போன்ற பெரிய பணம் தொடர்பான விசயங்கள் நடக்கும்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.தாய், தந்தை உடன் பிறப்புகளுடன் கூடி மகிழ்வீர்கள்.
சதயம்
தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும் . எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம் , அதிர்ஷ்டக்குறைபாடு இருந்த இடம் தெரியாது. உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். செல்வச் செழிப்பில் மிதப்பீர்கள்.
காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்ய உகந்த நேரம். சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களின் பிடியில் கவுரத்திற்காக வழியச் சென்று அகப்படுவார்கள். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும்.
பாக்கிய பலத்தால் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். ரியல் எஸ்டேட் தொழில் துறையினருக்கு அபிவிருத்தி உண்டு. பரம்பரை குலத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் புதிய மாற்றமும் ஏற்றமும் உண்டு. தந்தையின் பூர்வீகச் சொத்துக்கள் உங்கள் பெயரில் மாற்றி எழுதப்படும்.
பூரட்டாதி 1, 2, 3
தொட்டது துலங்கும்.தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும்.எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். லட்சியத்தையும், கொள்கையையும் விடாது பின்பற்றுவீர்கள். நிலையான, நிரந்தரமான புதிய தொழில், வாய்ப்புகள் கிடைக்கும். வாடகை வருமானம் தரக் கூடிய சொத்துக்கள் சேரும்.
தடைபட்ட வாடகை வருமானம் வரக் துவங்கும்.வீண், இழப்புகள், விரயங்கள் நஷ்டங்கள் குறையத் துவங்கும். இதுவரை உங்களை அச்சுறுத்திய கடன் தொல்லையிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும்.மூத்த சகோதர, சகோதரிகள் சித்தப்பா மூலம் நல்ல ஆதாயம் உண்டு.குல தெய்வம் தெரியாதவர்கள் அதை கண்டுபிடிக்க முயற்சிக்கலாம்.
குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை தாமதங்கள் அகலும்.காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும்.கவுரவப் பதவி, கவுரவப் பட்டம் கிடைக்கும்.ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
திருமணம்
குடும்ப ஸ்தான சனி பகவனால் திருமணம் தடைபடாது. கடந்த ஒன்றரை வருடங்களாக கோட்சார ராகு கேதுவினால் தடைபட்ட திருமணம் தற்போதும் தடைபடலாம். ஆனால் ராசிக்குள் நுழையும் ராகுவை குருபகவான் பார்ப்பதால் மே மாதத்திற்கு மேல் திருமணம் நடைபெறும்.
பொருத்தமான ஜாதகம் வந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். முதல் திருமணத்தில் தோல்வியை சந்தித்தவர்களுக்கு அடுத்த இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமையும். ராகு தசா மற்றும் கேது தசா நடப்பவர்கள் சுய ஜாதகத்தை பரிசீலிக்க வேண்டும்.
பெண்கள்
கணவன்-மனைவி ஒற்றுமையாக இருந்தாலும் மூன்றாம் நபரின் குறுக்கீடு நிம்மதி குறைவை ஏற்படுத்தும் என்பதால் பிறரின் நயவஞ்சக பேச்சை நம்பக்கூடாது. விலை உயர்ந்த பொருட்களை நகைகளை இரவல் வாங்குவது, கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சுய தொழில் புரிபவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
பெண்களுக்கு மாமியாரின் சில செயல்கள் வேதனை தரும் என்பதால் அனுசரித்து செல்லவும். குரு சாதகமாக இருப்பதால் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதும் இருப்பதை தக்க வைத்துக் கொள்வதும் உங்கள் திறமையில் உள்ளது.
மாணவர்கள்
புத்தி சாதுர்யத்தை கூறும் 5ம்மிடத்தில் குரு பகவான் நிற்பதால் மாணவர்கள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். உங்களின் கடமைகளை பதட்டப்படாமல் நிதானத்துடனும் செய்தால் எந்தச் சரிவிற்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம்.
கல்வி சார்ந்த விசயங்களில் ஏற்பட்ட தடை அகலும். அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க முடியும்.மாணவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும்
முதலீட்டாளர்கள், வியாபாரிகள்
11ம்மிடமான லாப ஸ்தானத்திற்கு சனி, குரு பார்வை. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஜென்மச் சனியால் ஏற்பட்ட இழப்பினை ஈடு செய்ய முடியும். ராசிக்குள் ராகு இருப்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும்.
7ம் மிடத்தில் கேது இருப்பதால் நண்பர்கள் தொழில் கூட்டணிகள் வாடிக்கையாளர்களோ , வாழ்க்கை துணை மூலம் வம்பு வழக்கு உருவாகலாம். தொழிலில் அகலக் கால் வைக்காமல் இருப்பது நல்லது. புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகளால் பிரகாசமான எதிர்காலம் உருவாகும்.அரசாங்க உத்தியோகம் அல்லது அதற்கு இணையான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டால் உழைப்பிற்கு மேல் இரண்டு மடங்கு வருமானம் உயரும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பதவி மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் வரலாம். அதன் முலம் நல்ல வருவாயும் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள்.
அரசியல்வாதிகள்
5ம்மிடமான பதவி ஸ்தானத்திற்கு செல்லும் குரு பகவான் பதவியில் ஸ்திர தன்மையை கொடுப்பார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும்.தாங்கள் சார்ந்துள்ள கட்சி, தொண்டர்களுக்கு, நெருங்கியவர்களுக்கு மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
சங்கடங்கள் குறையத் தொடங்கும். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்துகொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு அதிகமாகும். பொதுக் கூட்டத்தில் நிறைவேற்ற முடியாத வாக்குகளை கொடுக்கக் கூடாது.
பரிகாரம்
வியாழக்கிழமைகளில் கலச பூஜை செய்து வழிபட தாராள தன வரவு உண்டாகி குடும்பத்தில் இன்பம் பெருகும். திருநள்ளாறு சென்று வர சுபமான திருப்பங்கள் உண்டாகும்.