ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ சாரதா புஜங்கப்ரயாதாஷ்டகம்

Published On 2023-12-27 12:41 GMT   |   Update On 2023-12-27 12:41 GMT
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ சாரதா புஜங்கப்ரயாதாஷ்டகம்


1. அமுதம் நிறைக் கலசங்கள்

கரங்களில் உடையவளாம்;

குடமெனக் குவிந்தபடி

அருள் பொழியும் நெஞ்சினளாம்;

பாலனம் புரிந்து நமைக்

காத்திடும் அம்பிகையாம்;

புனிதர்க்கெல்லாம்

பொற்பாதம் தருபவளாம்;

திங்கள் முகப்பொலிவு

எழிலார்ந்த இதழ்க்கனிவு,

பீடுடைய வடிவினளாம்;

என் தாயாகும் சாரதாம்பாளை

சந்ததமும், மனம் மொழி மெய் சேர

துதிக்கின்றேன்.

2. விழிக் கடையில் அளப்பரிய

கருணை மிகுந்து பொங்கும்

நோக்குடையவளாம்;

பொற்கரந்தனில் ஞான

முத்திரை உடையவளாம்;

கலைகளின் நித்ய வாசினியாம்;

புனிதம் நிறையப் பொன் அணி

மங்கலம் உடையவளாம்;

தெய்வமாய் என்றென்றும்

விழியாலே அருள்தருபவளாம்;

துங்காநதி வாழ்த் தூயவளாம்;

என் தாயாகும் சாரதாம்பாளை

சந்ததமும், மனம் மொழிமெய் சேர

துதிக்கின்றேன்.

3. பிறை நுதலில் வகிடென

பொன்நகை தரித்தவளாம்;

இன்னிசைப் பண்ணின்

உன்னதம் நயப்பவளாம்;

தொழுதவரைக் காத்தருளும்

தனிப்பெரும் தேவியாய்த்

திகழ்ந்து ஒளிர்பவளாம்:

கீர்த்தி இசைத்திடு கன்னங்கள்

திருக்கரத்தில் மணிமாலை உடையவளாம்;

கண்கவரும் தொல் அணிமணியில்

அகலாத விருப்பு உடையவளாம்;

என் தாயாகும் சாரதாம்பாளை

சந்ததமும், மனம் மொழி மெய் சேர

துதிக்கின்றேன்.

4. முடிவகிர்ந்து பின்னலிட்டுக்

குஞ்சலங்கள் கொண்டவளாம்;

மான்விழிப் பார்வையினும்

வென்றிடும் திருப்பார்வை உடையவளாம்;

கிள்ளையோடிருக்கும் வாணியாம்;

வானவன் இந்திர தேவன்

வணங்கிடும் தேவதேவியாம்;

அமுதபானம் விளைத்திடும்

மந்தஹாச வதனமுடையவளாம்;

கருங்கூந்தல் கவினழகொடு

நெஞ்சத்தை ஈர்ப்பவளாம்;

என் தாயாகும் சாரதாம்பாளை

சந்ததமும், மனம் மொழி மெய் சேர

துதிக்கின்றேன்.

5. சாந்த சொரூபி, எழிற் திருமேனி;

சுந்தரத் திரு வடிவினளாம்;

விழியோவோடிப் பரந்தடர்ந்த

கருங்கேசம் உடையவளாம்;

ஒளிவிடும் கொடிபோலும்

மென் உடம்பினளாம்:

என்றுமுள நித்ய நாயகியாம்;

உள்ளத்து எழும் எண்ணங்கடந்து

நின்று நிலைத்திருப்பவளாம்;

தவமுனிவர் தொழுதேற்றும்

உலகுக்கு முன்னம் உயிர்த்தவளாம்;

என் தாயாகும் சாரதாம்பாளை

சந்ததமும், மனம் மொழி மெய் சேர

துதிக்கின்றேன்.

6. மான்மீதும், மடஅன்னத்திலும்

மாட்சியுற சிம்ம மதன் மீதும்

கரி, பரி, இரண்டின் மீதும்

ஆரோகணித்து இருப்பவளாம்;

கழுகின் மீதும் காளையின் மீதும்

வீற்றிருப்பவளாம்;

நவராத்திரி நற்பொழுதில்

நல்வாகனங்களாகிவிடும்

இவைமீது அமர்ந்திருப்பவளாம்;

இனிமையின் தனி உருவாகி

என்றும் காட்சி தருபவளாம்.

என் தாயாகும் சாரதாம்பாளை

சந்ததமும், மனம் மொழி மெய் சேர

துதிக்கின்றேன்.

7. கனல் போலும் செம்பிழம்பாகி

ஒளிவீசும் செல்வழகுச்

செந்திருவென ஜொலிப்பவளாம்;

சகல சிருஷ்டிகளின் காந்தமிகு

உருக்கொண்டவளாம்;

பணிகின்ற நல்லடியாரின்

நெஞ்சக் கமலந்தன்னில்

தேனீயென ரீங்கரிப்பவளாம்;

நாதத்தின், நர்த்தனத்தின்.

உள்ளளி நிகர்த்த மேனியளாம்;

என் தாயாகும் சாரதாம்பாளை

சந்ததமும், மனம் மொழி மெய் சேர

துதிக்கின்றேன்.

8. படைக்கின்ற நான்முகனும்

பள்ளி கொண்ட மாலவனும்

மலை வாழும் மகேஸ்வரனும்

பூசனை புரிந்து துதிக்கின்ற

பெரும்சீர் படைத்தவளாம்

தேசுமிகு புன்னகையின்

திருவதனம் உடையவளாம்;

காதணிக் குண்டலங்கள்

ஊஞ்சலென அசைந்தாடி

அழகுக்குத் தனியழகூட்டும்

திருச்செவிகள் உடையவளாம்;

என் தாயாகும் சாரதாம்பாளை

சந்ததமும், மனம் மொழி மெய் சேர

துதிக்கின்றேன்.

Tags:    

Similar News