ஆன்மிக களஞ்சியம்

ருக்மணியும் பாரிஜாத மலரும்

Published On 2023-09-30 12:18 GMT   |   Update On 2023-09-30 12:18 GMT
  • ருக்மணி போட்டிக்குப் போவதில்லை. பாமாதான் தொடங்கி வைப்பாள்.
  • கண்ணன் அந்த பாரிஜாத மலர் மாலையை ருக்மணிக்கு அன்பளிப்பாகத் தந்தான்.

பாகவதத்தில் இடம் பெறும் பல சுவையான நிகழ்ச்சிகளில் பாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையில் நடக்கும் போட்டிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

ருக்மணி போட்டிக்குப் போவதில்லை. பாமாதான் தொடங்கி வைப்பாள்.

ஆனால் அதன் உச்ச கட்டம் ருக்மணியின் பெருமையை விளக்குவதாகவே அமையும்.

அப்படி நடந்த நிகழ்ச்சிகளில் பாரிஜாத மலரால் ஏற்பட்ட விவகாரமும் ஒன்றாகும்.

ஒருமுறை கண்ணன் நரகாசுரனை வென்ற பின் இந்திரலோகத்திற்கு சத்யபாமாவுடன் செல்ல இந்திரன் அவருக்குக் காணிக்கையாக பாரிஜாத மலர் மாலையை அணிவித்தான்.

ஆனால் சத்யபாமாவைப் பொருட்படுத்தவில்லை.

அங்கிருந்து வந்த கண்ணன் அந்த பாரிஜாத மலர் மாலையை ருக்மணிக்கு அன்பளிப்பாகத் தந்தான்.

நாரதர் அதைக் கண்டதும் கலகத்திற்கு ஒரு காரணம் கிடைத்ததென்று பாமாவிடம் வந்து, "நரகாசுரவதம் நடப்பதற்காக நீதானே கண்ணனுக்கு சாரதியாகச் சென்றாய்.

அதற்குப் பரிசாகத்தானே கண்ணனுக்கு இந்திரன் எப்போதும் வாடாத பாரிஜாத மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிவித்தான்.

நியாயமாக அதைக் கண்ணன் உனக்குத்தானே அணிவித்திருக்க வேண்டும்.

ஆனால் அதை அப்படியே கொண்டு வந்து ருக்மணியிடம் தந்து விட்டானே. இது நியாயமா? என்று கேட்டார்.

ஏற்கனவே இந்திரன் தன்னை சரியாக கவுரவிக்கவில்லை என்று கொதித்துக் கொண்டிருந்த பாமாவிற்கு மேலும் கோபம் பொங்கியது.

கண்ணன் வந்தபோது அவனிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

காரணம் கேட்டபோது இந்திரனின் பாரிஜாத மரம் இங்கு வர வேண்டும். அப்போதுதான் பேசுவேன் என்றாள்.

கண்ணன் அந்த மரத்தை சில நாட்கள் தங்களிடம் இருக்க தந்தனுப்ப வேணடும் என்று இந்திரனுக்கு செய்தி அனுப்ப, அவன் முடியாது என்று மறுத்து விட்டான்.

அதனால் கண்ணன் இந்திரன் மீது போர் தொடுத்து வென்று அந்த பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்து பாமாவின் அரண்மனைத் தோட்டத்தில் பதித்து வைத்தார்.

ஆனால் அந்த மரம் அங்கேயிருந்தாலும் அந்த மலர்கள் ஒவ்வொரு நாளும் ருக்குமணியின் அரண்மனையில் போய் விழுந்தன என்பது வேறு கதை.

Tags:    

Similar News