ஆன்மிக களஞ்சியம்

ராமேஸ்வரத்தை நினைவூட்டும் பிரகாரம்

Published On 2024-02-12 15:45 IST   |   Update On 2024-02-12 15:45:00 IST
  • பிரகார அழகு ராமேஸ்வரத்தில் உள்ள மூன்றாம் பிரகாரத்தை நினைவூட்டுகிறது.
  • சுற்றிலும் அகழி அமைப்பு உள்ளது. சன்னதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தலத்தில் உள்ள எல்லா பிரகாரங்களும் அழகுமிக கற்தூண்களுடன் அமைந்துள்ளன.

பிரகார அழகு ராமேஸ்வரத்தில் உள்ள மூன்றாம் பிரகாரத்தை நினைவூட்டுகிறது.

தூண்களில் பிட்சாடனார், ஊர்த்தவர் சிற்பங்கள் உள்ளன.

உலா வருவதற்குரிய நடராஜத்திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன.

வெளிச்சுற்றில் வல்லப விநாயகரைத் தரிசிக்கலாம்.

ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோவிலை அடுத்து காணலாம்.

நடராஜப் பெருமானுக்குத் தனிக்கோவில், கோவிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது.

பலிபீடம், கொடிமரம், நந்தியை தொழுது முன்மண்டபம் சென்றால், சேதுபதிகள் வண்ணங்களில் சுதையில் தூண்களில் காட்சி அளிக்கின்றனர்.

சுற்றிலும் அகழி அமைப்பு உள்ளது. எனவே சன்னதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் தற்போது படியில் ஏறி இறங்காமல் செல்ல வழிசெய்துள்ளனர்.

கருவறை தெற்கு நோக்கிய சன்னதியாக உள்ளது.

இங்கு அக்கினி மத்தியில் நடராஜப் பெருமான் ஆடுவதாக சொல்லப்படுகிறது. அம்பிகைக்கான அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையம்பலத்தில் ஆடினார்.

இங்குள்ள கூத்தப்பிரான் நடராஜர் அதி அற்புதமானவர்.

ஐந்தரை அடி உயரம் முழுவதும் மரகதத்திருமேனி, விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இப்பெருமான் வெளியே உலா வருவதில்லை.

பெருமான் திருமேனியை உள்வைத்தே சன்னதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியே வெளியே கொண்டுவர இயலாது.

மார்கழித் திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.

இதைச் செய்பவர்கள் திருப்பத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர்.

அன்று ஒருநாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அற்புதமாக நடைபெறும்.

வாழ்நாளில் ஒருமுறையாவது இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும்.

அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும்.

அக்காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை பெருமான் ஆண்டு முழுவதும் காட்சித் தருவார்.

மார்கழித் திருவாதிரை நாளில், வாய்ப்பும் திருவருள் பெற்றவர்களும் அவசியம் சென்று ஆடல் வல்லானைத் தரிசித்து ஆனந்தம் பெறவேண்டும்.

Tags:    

Similar News