ஆன்மிக களஞ்சியம்

பயன் தரும் பஞ்ச பருவ பூஜைகள்

Published On 2023-12-23 16:31 IST   |   Update On 2023-12-23 16:31:00 IST
  • திருவண்ணாமலை ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது.
  • தினசரி நடக்கும் பூஜைக்கு நித்திய கிரியை என்று பெயர்.

தமிழகத்தில் உள்ள பழமையான ஆலயங்களில் இன்றும் கால பூஜைகள் தினமும் தவறாமல் நடத்தப்பட்டு வருகின்றன.

சில ஆலயங்களில் 5 கால பூஜைகள் நடப்பதுண்டு.

சில ஆலயங்களில் 6 கால பூஜைகள் நடைபெறும்.

திருவண்ணாமலை ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது.

தினசரி நடக்கும் பூஜைக்கு நித்திய கிரியை என்று பெயர்.

அப்படி அல்லாமல் விசேஷமாக நடத்தப்படும் பூஜைகளுக்கு நைமித்திக பூஜைகள் என்று பெயர்.

இதில் நித்திய பூஜைகளை எந்தெந்த காலங்களில் நடத்த வேண்டும் என்று ஆகமங்களில் நம் முன்னோர்கள் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

6 கால பூஜை என்பது உஷத் காலம், கால சந்தி, உச்சி காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்தஜாமம் ஆகியவற்றை குறிக்கும்.

சூரிய உதயத்தை கணக்கிட்டு நாழிகை அடிப்படையில் இந்த பூஜைகளை செய்வார்கள்.

ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் ஆகும்.

உஷத் காலம் என்பது சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்பு தொடங்கி சூரிய உதயம் வரை உள்ள காலம் ஆகும்.

கால சந்தி என்பது சூரிய உதயம் முதல் 10 நாழிகை உள்ள காலமாகும்.

உச்சிகாலம் என்பது மதியம் 11.30 மணி முதல் 12.30 மணி வரை உள்ள காலம் ஆகும்.

சாய ரட்சை என்பது சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிக்கைக்கு முன்பு தொடங்கி சூரியன் மறையும் வரை உள்ள நேரத்தை குறிக்கும்.

இரண்டாம் காலம் என்பது சூரியன் மறைவிலிருந்து மூன்றே முக்கால் நாழிகை வரை உள்ள காலம் ஆகும்.

அர்த்த ஜாமம் என்பது கோவில் நடைஅடைக்கும் சமயத்தில் நடத்தப்படும் பூஜை ஆகும்.

பொதுவாக அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடையை திறந்து இரவு 9 மணிக்கு அடைத்து விட வேண்டும் என்பது ஆகம விதியாகும்.

திருவண்ணாமலை ஆலயம் மற்ற ஆலயங்களை விட பெரிய ஆலயம் என்பதாலும் நிறைய சன்னதிகளை கொண்டு இருப்பதாலும் மற்ற சிவாலயங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பூஜை வகைகளை கொண்டுள்ளது.

குறிப்பாக திருவண்ணாமலை ஆலயத்தில் பஞ்ச பருவ பூஜைகள் சிறப்பு பெற்றுள்ளன.

மாத பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, பிரதோசம், சோமவாரம், சுக்கிரவாரம், கிருத்திகை, சதுர்த்தி, சஷ்டி ஆகியவை பஞ்ச பருவ பூஜைகளாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த பூஜைகள் வரும் நாட்கள் மற்றும் நேரத்தை தெரிந்து கொண்டு திருவண்ணாமலை ஆலயத்துக்கு சென்றால் மிகவும் புண்ணியம் பெறும் வகையில் வழிபாடுகள் செய்து விட்டு வரலாம்.

Tags:    

Similar News