ஆன்மிக களஞ்சியம்

குமரிமுனை திருப்பதி ஆலயத்தின் அமைப்பு

Published On 2023-12-29 13:20 GMT   |   Update On 2023-12-29 13:20 GMT
  • அங்கு ஒரே நேரத்தில் 1,200 பேர் அமர்ந்து சாப்பிடலாம். மற்றொரு பகுதியில் தியான கூடம் உள்ளது.
  • கீழ் தளத்தில் கல்யாண உற்சவம் நடத்த தனி அரங்கு உள்ளது.

திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையான் ஆலயத்துக்கும், குமரிமுனை திருப்பதி ஆலயத்துக்கு மிகுந்த வேற்றுமை உள்ளது.

திருமலையில் உள்ள ஆலயம் பல நூறு ஆண்டுகளாக பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு இன்று பிரமாண்டமான வளர்ச்சியை எட்டி உள்ளது.

அதன் உட்பிரகாரங்கள் அனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டவை ஆகும்.

பல்வேறு மன்னர்கள் அந்த ஆலயத்தை கட்டி சிறப்பித்துள்ளனர்.

மலை மீது உள்ளதால் அதற்கேற்ப ஆலயத்தின் மற்ற பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆனால் குமரிமுனை திருப்பதி ஆலயம் விவேகானந்தா கேந்திரம் உள்ளே சிறிய இடத்தில் உருவாகி உள்ளது.

விவேகானந்தா கேந்திரம் சார்பில் வழங்கப்பட்டுள்ள 5 ஏக்கர் நிலத்தில்தான் இந்த ஆலயம் எழுந்துள்ளது.

தானமாக பெற்ற அந்த 5 ஏக்கரில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ஆலயம் உருவாகி உள்ளது.

மீதமுள்ள 1 ஏக்கர் இடம் கோவில், தீர்த்தம் மற்றும் வசதிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பும் வித்தியாசமானது ஆகும்.

இந்த ஆலயம் கீழ்தளம்-மேல் தளம் என அடுக்குடன் கூடிய அமைப்பில் உருவாக்கப்பட்டு உள்ளது.

கீழ்தளத்தை அலிபிரி என்று பெயர் சூட்டி உள்ளனர்.

மேல் தளத்தை ஏழுமலையான் ஆலயம் என்று அழைக்கின்றனர்.

திருமலை-திருப்பதியில் நடைபாதை தொடங்கும் அலிபிரி கீழே அமைந்துள்ளது.

ஏழுமலையான் மேலே மலையில் அருள்பாலித்து வருகிறார்.

இந்த மலை அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் குமரிமுனை ஆலயம் 2 அடுக்குடன் திகழ்கிறது.

கீழ் தளத்தில் கல்யாண உற்சவம் நடத்த தனி அரங்கு உள்ளது.

அங்குள்ள சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து கல்யாண உற்சவத்தில் பங்கேற்கலாம்.

கீழ் தளத்தின் மற்றொரு பகுதியில் அன்னதான கூடம் அமைந்துள்ளது.

அங்கு ஒரே நேரத்தில் 1,200 பேர் அமர்ந்து சாப்பிடலாம். மற்றொரு பகுதியில் தியான கூடம் உள்ளது.

பக்தர்கள் தியானம் செய்வதற்கு ஏற்ப அமைதியான சூழ்நிலையை உருவாக்க அங்கு வசதி செய்துள்ளனர்.

மேல் தளத்தில் ஏழுமலையான் கருவறை நடுநாயகமாக உள்ளது.

ஒருபுறம் பத்மாவதி தாயாருக்கும், மற்றொருபுறம் ஆண்டாளுக்கும் தனித்தனி சன்னதி அமைத்துள்ளனர்.

திருப்பதியில் உள்ளது போலவே ஏழுமலையானுக்கு நேர் எதிரில் கருடவாழ்வார் உள்ளார்.

அவருக்கு அங்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது. அவருக்கு பின்புறம் பலிபீடமும், கொடி மரமும் அமைக்கப்பட்டுள்ளது.

மேல் தலத்தில் ஆலயத்தை சுற்றி வசதி செய்துள்ளனர்.

கடற்கரை காற்றை அனுபவித்துக் கொண்டே ஆலயத்தை வலம் வருவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

மேல் தலத்துக்கு செல்ல 45 படிகளுடன் நுழைவு வாயில் மேடை கட்டப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலையில் ஏழுமலையான் ஆலயம் மலை மீது அமைந்துள்ளது.

ஏழுமலைகள் மீது இருப்பதால்தான் அவருக்கு ஏழுமலையான் என்ற பெயர் உருவானது.

ஆனால் குமரிமுனையில் ஏழுமலையான் கடலோரத்தில் கடல் அலைகள் தாலாட்டும் இடத்துக்கு மிக அருகில் எழுதருளி உள்ளார்.

திருப்பதி ஆலயத்துக்குட்பட்ட கிளை ஆலயங்களில் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரே ஆலயம் என்ற சிறப்பை இந்த ஆலயம் பெற்று உள்ளது.

குமரிமுனையில் ஏழுமலையானுக்கு ஒரு கிளை ஆலயம் உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியபோது ஏழுமலையான் ஆலயத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விவேகானந்தா கேந்திரத்தின் செயலாளராக இருக்கும் அனுமந்தராவ் தேவையான உதவிகளை செய்து கொடுத்தார்.

இதனால் இன்று குமரிமுனை திருப்பதி ஆலயம் திட்டமிட்டப்படி கட்டப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வந்துள்ளது.

Tags:    

Similar News