ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீ காமாட்சியம்மன் விருத்தம்

Published On 2023-05-20 06:54 GMT   |   Update On 2023-05-20 06:54 GMT
  • அன்னை காமாட்சி தேவியைப் போற்றி வணங்குவதற்கேற்ற ஸ்ரீ காமாட்சியம்மன் விருத்தம்
  • அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி யுமையே.

அன்னை காமாட்சி தேவியைப் போற்றி வணங்குவதற்கேற்ற ஸ்ரீ காமாட்சியம்மன் விருத்தம்


1. சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி

சோதியாய் நின்ற உமையே,

சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்

துன்பத்தை நீக்கி விடுவாய்,

சிந்தைதனிலுன் பாதந் தன்னையே தொழுபவர்கள்

துயரத்தை மாற்றி விடுவாய்,

ஜெகமெலா முன் மாய்கை புகழவென்னா லாமோ

சிறியனால் முடிந்திடாது.

சொந்தவுன் மைந்தனாய் எந்தனை ரட்சிக்கச்

சிறிய கடன் உன்னதம்மா,

சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீச்வரி

சிரோன்மணி மனோன் மணியுநீ,

அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி

யனாத ரட்சகியும் நீயே,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி யுமையே.


2. பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது

பாடகந் தண்டை கொலுசும்,

பச்சை வைடூரியம் மிச்சையா இழைத்திட்ட

பாதச் சிலம்பின் ஒலியும்,

முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்

மோகன மாலை யழகும்,

முழுதும் வைடூரியம் புஷ்ப ராகத்தினால்

முடிந்திட்ட தாலி யழகும்,

சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்

செங்கையிற் பொன் கங்கணமும்

ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற

சிறுகாது கொப்பினழகும் ,

அத்திவரதன் தங்கை சக்தி சிவரூபத்தை

யடியனால் சொல்ல திறமோ

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி யுமையே


3. மாயவன் தங்கை நீ மரகத வல்லிநீ

மணிமந்திர காரிநீயே

மாயா சொரூபிநீ மகேஸ்வரியுமான நீ

மலையரை யன்மக ளான நீ,

தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ,

தயாநிதி விசாலாட்சிநீ,

தரணியில் பெயர்பெற்ற பெரிய நாயகியும்நீ

சரவணனை ஈன்ற வளும்நீ,

பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில்

பேறுபெற வளர்ந்தவளும் நீ,

பிரணவ சொரூபிநீ பிரசன்ன வல்லிநீ

பிரியவுண்ணா முலையுநீ,

ஆயிமகமாயிநீ ஆனந்தவல்லிநீ

அகிலாண்டவல்லிநீயே,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி யுமையே.


4. பாரதனிலுள்ளளவும் பாக்கியத்தோடென்னைப்

பாங்குட னிரட்சிக்கவும்,

பக்தியாய் உன்பாதம் நித்தம் தரிசித்த

பாலருக் கருள் புரியவும்,

சீர்பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்

செங்கலியன் அணுகாமலும்,

சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து

ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,

பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமல்

பிரியமாய்க் காத்திடம்மா,

பிரியமா யுன்மீதில் சிறியனான் சொன்னகவி

பிழைகளைப் பொறுத்து ரட்சி,

ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்

னம்மை ஏகாம்பரி நீயே,

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்

அம்மை காமாட்சி யுமையே.

Tags:    

Similar News