ஆன்மிக களஞ்சியம்

நந்தி அவதார ஸ்தலம்

Published On 2023-05-30 15:39 IST   |   Update On 2023-05-30 15:39:00 IST
  • பாறை ஒன்றில் பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
  • தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது தான்.

ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இத்தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் விசேஷமானது.

ஸ்ரீசைலம் மலையில் வசித்த சிலாதர் என்ற ரிஷி, குழந்தை வரம் வேண்டி சிவனை வணங்கி வந்தார். அவருக்கு நந்தி, பர்வதன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், சிலாதரிடம், "உங்களுக்கு பிறந்திருக்கும் நந்தி சில காலம் தான் பூமியில் வாழ்வார்'' என்றனர். வருந்தினார் சிலாதர். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி, "சிவனைக் குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்!'' என்று சபதம் செய்து, தவத்தை துவங்கினார்.

சிவபெருமானும் மனம் ஒருமித்த அந்த பிரார்த்தனையை ஏற்று, நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண முடியாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார். அவருக்கு அருள்புரிந்த சிவன், மல்லிகார்ஜுனர் என்ற பெயரில் இங்கு அருளுகிறார். நேரடியாக பக்தர்களே இவருக்கு பூஜை செய்யலாம் என்பது விசேஷம்.

பிரதோஷத்தன்று நம் ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பது நம்பிக்கை.

முக்கிய சிவத்தலங்களில், இமயமலையிலுள்ள கைலாயம் முதலிடமும், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடமும் வகிக்கிறது. குருக்ஷத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் இரண்டாயிரம் முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ, அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒருமுறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது.

நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து, அதன் மீது சிவன் ஆட்சி புரிவதாகவும் ஐதீகம். இக்கோவிலிலுள்ள நந்தி மிகப்பெரிய அளவில் இருக்கிறது.

இங்குள்ள அம்பிகை பிரமராம்பாள் எனப்படுகிறாள். 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. சிவன் சன்னதி கீழே இருக்க, அம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது மற்றொரு விசேஷம்.

மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்சபாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடமும் இங்குள்ளது. பாறை ஒன்றில் பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் பக்தர்கள் தங்க சத்திரங்கள் உள்ளன. திங்கள், வெள்ளியில் கூட்டம் அதிகமாக இருக்கும். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது தான்.

காலை 5.00 மணி முதல் – மதியம் 3.00 மணி வரையும், மாலை 5.30- முதல் இரவு 10.00 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு பக்தர்கள் பூஜை செய்ய அனுமதியுண்டு. கட்டணம்,700 ரூபாய்.

சென்னையில் இருந்து ரெயிலில் செல்பவர்கள் ஓங்கோல் சென்று, அங்கிருந்து பஸ்சில் ஸ்ரீசைலம் செல்லலாம்.

பஸ்சில் செல்பவர்கள் திருப்பதி சென்று, கர்நூல் செல்லும் பஸ்சில் நந்தியாலில் இறங்கி, ஸ்ரீசைலம் செல்லலாம்.

மலைப்பகுதியை சுற்றி பார்க்க ஜீப் வசதி உள்ளது. தனியார் வாகனங்கள் இரவு 8.00 மணியிலிருந்து காலை 6.00 மணிவரை மலைப்பாதையில் செல்ல அனுமதி கிடையாது; அரசு பஸ்கள் மட்டுமே செல்லும்.

Tags:    

Similar News