search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வித்தியாசமான கால பைரவர்
    X

    வித்தியாசமான கால பைரவர்

    • எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு பைரவர் என்று பெயர்.
    • கால பைரவரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்குவதுடன், எதிரிகளின் பயமும் விலகும்.

    எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு பைரவர் என்று பெயர்.

    படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் "பைரவர்" என்று அழைக்கப்படுகிறார்.

    பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது.

    படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.

    பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரப்பற்களை உடையவராய், செஞ்சடை உடையவராய், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சி அளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன.

    அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது.

    இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம்.

    சனீஸ்வரர் பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார்.

    ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள்பாலிக்கிறார்.

    காசியே பைரவரின் பிரதான தலமாகும்.

    சிவபெருமானின் தலைமைக் காவலரான பைரவரின் தலைமையிடம் காசியில் விசுவநாதர் ஆலயத்தின் வடக்கில் உள்ள பைரவநாத் என்னும் இடத்தில் உள்ள ஸ்ரீகால பைரவர் சன்னதியாகும்.

    பிரம்மாவும் திருமாலும் திருவண்ணாமலையில் அடிமுடி தேடியதில் பிரம்மன் பொய்யுரைத்தபடியால் கோபம் கொண்ட சிவனது புருவத்திலிருந்து தோன்றியவரே இந்த ஸ்ரீகால பைரவர்.

    கார்த்திகை மாதத் தேய்பிறை அஷ்டமியில் இந்தக் காலபைரவர் அவதாரம் செய்ததால் அந்நாளில் மக்கள் விரதம் இருந்து காலாஷ்டமியாகக் கொண்டாடுகிறார்கள்.

    கால பைரவரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்குவதுடன், எதிரிகளின் பயமும் விலகும்.

    இவருடைய சன்னதியில் மிருத்யுஞ்ச மந்திரத்தை ஓதுபவர்களையும் கேட்பவர்களையும் கண்டு யமன் அஞ்சி நிற்பானாம்.

    அச்சரப் பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் கால பைரவர் வித்தியாசமான கோலத்தில் காணப்படுகிறார்.

    மிகச்சிறிய உருவமாக இருந்தாலும் அவர் கழுத்தில் கபால மாலை அணிந்து காணப்படுகிறார்.

    அவரது காதில் கடுக்கன் அணிவிக்கப்பட்டு உள்ளது.

    இத்தகைய அலங்காரத்தில் தமிழகத்தில் வேறு எங்கும் கால பைரவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரை வழி பட்டால் கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

    தொழில் தொடங்கும் முன்பும் இவரை வழிபட வேண்டும்.

    எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் இவரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    தேய்பிறை, அஷ்டமி தினத்தன்று இந்த கால பைரவரை வழிபடுவது மிகவும் நல்லது.

    பூசனிக்காய் தீபம் ஏற்றியும் இவரை வழிபடலாம்.

    Next Story
    ×