search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பிரதோஷம் குறிப்புகள்
    X

    பிரதோஷம் குறிப்புகள்

    • இதே போல் பவுர்ணமியிலிருந்து 13-வது நாளன்றும் வரும். இதையும் திரயோதசி நாள் என்பர்.
    • நந்திதேவருக்கு பின்பு நின்று கொண்டு கொம்புகளுக்கிடையே லிங்கத்தை தரிசிப்பதே சிறந்த முறை.

    1. பிரதோஷ நாள் அமாவாசையிலிருந்து 13-வது நாளன்று வரும். அதை திரயோகதசி நாள் என்பர்.

    இதே போல் பவுர்ணமியிலிருந்து 13-வது நாளன்றும் வரும். இதையும் திரயோதசி நாள் என்பர்.

    அமாவாசையிலிருந்து 13-வது நாளாக வரும் திரயோதசி திதியை வளர்பிறை பிரதோஷம் என்றும், பவுர்ணமியிலிருந்து 13-வது நாளாக வரும் திரயோதசி திதியை "தேய் பிறை பிரதோஷம்" என்றும் அழைப்பர்.

    2. பிரதோஷ நாளன்று உடல் சுத்தம் செய்து கொண்டு ஆலயத்தில் பிரவேசிக்க வேண்டும்.

    முதலில் ரிஷப தேவருக்கு நெய் தீபம் போட்டு அருகம்புல் கொடுத்து வாலைத்தொட்டு வணங்க வேண்டும்.

    பிறகுதான் கணபதியை வணங்க வேண்டும்.

    நந்திதேவருக்கு பின்பு நின்று கொண்டு கொம்புகளுக்கிடையே லிங்கத்தை தரிசிப்பதே சிறந்த முறை.

    ஆலயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் மனதால் லிங்கத்தை தியானிக்கலாம்.

    தியானித்து விட்டு அப்பிரதட்சனமாக (வலம் கை ஓரமாக) சண்டகேஸ்வரர் சந்நிதி வரை சென்று சண்டகேஸ்வரரை வணங்கி விட்டு, அப்படியே திரும்பி வந்து முன்பு போல நந்தீஸ்வரர் பின்பு நின்று லிங்கத்தை தியானித்துக் கொண்டு, வழக்கம் போல இடமிருந்து வலமாக பிரதட்சனமாக வர வேண்டும்.

    பிரகாரத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நீர் வருவதற்கு ஒரு தொட்டி அமைந்து இருக்கும். அதை கோமுகி நீர் தொட்டி என்பர். அந்த தொட்டி வரை வரவும்.

    அந்த தொட்டியை கடக்க கூடாது. அப்படியே வந்த வழியே செல்லவும்.

    நந்தியையும், லிங்கத்தையும் தியானிக்கவும். மறுபடியும் அப்பிரதட்சணமாக சென்று சண்டகேஸ்வரரை வணங்கவும்.

    வணங்கிவிட்டு வந்த வழியே வந்து கோமுகி நீர் தொட்டி வரை வரவும்.

    அந்த வழியே திரும்பவும். இவ்வாறு மூன்று முறைகள் செய்து சிவனை வணங்க வேண்டும்.

    இவ்வாறு பிரதோஷ நாளன்று சிவனை வணங்க பாபம் நீங்கி "அஸ்வமேதயாகம்" செய்த பலன் கிடைக்கும்.

    3. பிரதோச நாளன்று நந்தி தேவருக்கு சிவப்பு அரிசியில் வெல்லம் சேர்த்து நைவேத்யம் செய்யலாம்.

    4.பிரதோஷ நாளன்று உபவாசம் இருப்பவர்கள் ஆலய தரிசனம் முடித்துவிட்டு வெறும் தரையில் படுத்து உறங்க வேண்டும்.

    5.ஒவ்வொரு மாலை வேளையான 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் தினப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகின்றது. இதில் ஈசனை தரிசனம் செய்ய பாவம் விலகும்.

    6.பிரதோஷ வேளை 4.30 மணிக்கும்மேல் 7 மணிக்குள்.

    7. பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் ஒரு வருடம் ஆலயத்திற்கு சென்று வந்த பலனை பெறுவார்கள்.

    8. சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிக விசேஷமானது. அன்று சனி பகவானின் தோஷத்துக்கு ஆளானவர்கள் ஈசனை வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கி சுக வாழ்வு பெறுவார்கள்.

    சனி பிரதோஷம் அன்று வழிபட்டவர்கள் ஐந்து வருட காலம் கோவிலுக்கு சென்று வந்த பாக்கியத்தை பெறுவார்கள்.

    9. பிரதோஷ நாளன்று ஈசனுக்கு பால் அபிஷேகத்திற்கு பால் தானம் செய்ய சகல பாவங்களையும் போக்கி கொள்ளலாம்.

    10. பிரதோஷ நாளன்று ரிஷப வாகனத்தில் ஈஸ்வரர் எழுந்தருளி பிரகாரத்தை மும்முறை வலம் வருவார். அப்பொழுது நாமும் அவர் பின்னால் வலம் வர முக்தி கிடைக்கும்.

    ஏனெனில் ஈஸ்வரர் பிரகாரத்தை ஒரு சுற்று வரும்போது வேத பாராயணம் ஓதப்படுகின்றது.

    இரண்டாவது சுற்றில் திருமுறை பாராயணம் ஓதப்படுகின்றது. மூன்றாவது சுற்றில் நாதங்கள் முழங்கப்படுகின்றன.

    Next Story
    ×