search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மெய் சிலிர்க்க வைக்கும் கண்ணப்ப நாயனாரின் பக்தி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மெய் சிலிர்க்க வைக்கும் கண்ணப்ப நாயனாரின் பக்தி

    • சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார்.
    • திண்ணனார் வில்வித்தையில் பதினாறு ஆண்டுகளுக்குள் சிறந்த பயிற்சி பெற்றார்.

    சந்தன மரமும், அகில் மரமும், நல்ல தேக்கு மரமும் பொருந்தி விரைந்து செல்லுகின்ற பொன்முகலியாற்றின் கரையில் உமாதேவியாரோடு மணமிக்க சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார்.

    அதன் அருகில் உள்ள பொத்தப்பி நாட்டின் தலைநகர் உடுப்பூர், நாகன் அதை ஆண்டு வந்தான். நாகனும், அவன் மனைவி தத்தையும் மகப்பேறின்றி வருந்தினர். முருகப்பெருமானை வழிபட்டனர். ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

    திண் என்று இருந்தமையால் அவனுக்குத் திண்ணன் என்று பெயரிட்டனர். உரிய வயதில் வேட்டைத் தொழிலில் திண்ணன் நல்ல பயிற்சி பெற்றார். திண்ணனார் வில்வித்தையில் பதினாறு ஆண்டுகளுக்குள் சிறந்த பயிற்சி பெற்றார். தந்தை தன் மகனுக்குப் பட்டம் கட்டினார். திண்ணனார் அரசர் ஆனதும் வேட்டையாட சென்றார்.

    ஒரு பன்றியைச் துரத்திக் கொண்டு நெடுதூரம் சென்றார். அவருடைய தோழர்களாகிய நாணனும் காடனும் உடன் சென்றனர். கடைசியில் பன்றியைக் கொன்றார். பன்றியைத் தூக்கிக் கொண்டு பொன்முகலியாற்றை நோக்கிச் சென்றனர்.

    திண்ணனார் மலை மீதுள்ள தேவரை நோக்கினார். அவர் உடம்பில் இருந்து ஏதோ பாரம் குறைவது போன்ற உணர்வு தோன்றியது. பன்றியைச் சுட்டுப்பதம் செய்யுமாறு காடனிடம் சொல்லிவிட்டு நாணனுடன் மலை மீது ஏறினார்.

    இறைவனைக் கண்டார், உடல் புளங்காகிதம் அடைந்தது. இறைவனைக் கட்டித் தழுவினார். அய்யோ தனியாக உள்ளீரே என்று வருந்தினார்.

    இறைவன் மீதுள்ள நீரும், பூவும் எப்படி வந்தன...? என்று நாணனிடம் கேட்டறிந்தார். தானும் அவ்வாறே செய்ய வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்.

    இவர் கொண்ட முடிவை நாணனும், காடனும் விரைந்து சென்று பெற்றோர்க்குத் தெரிவித்தனர். அவர்கள் வந்து திருத்த முயன்றும் பயனில்லை.

    திண்ணனார் கீழே இறங்கி வந்து பன்றியின் இறைச்சியை தீ அனலில் இட்டு பதப்படுத்தினார். தேக்கிலையில் அதை வைத்துக் கொண்டார்.

    திருமஞ்சனத்திற்கு வேண்டிய நீரை வாயில் குடித்து தேக்கி வைத்து கொண்டார்.

    பூக்களைத் தலைமுடியில் சொருகிக் கொண்டார். மேலே சென்று லிங்கத்தின் மேலிருந்த பூக்களைத் தன் காலால் அப்புறப்படுத்தினார். வாயில் இருந்த நீரால் அபிஷேகம் செய்தார்.

    சுவையான இறைச்சியை ஊட்டினார். விருப்புடன் இறைவனும் உண்டார். இவ்வாறு ஐந்து நாட்கள் பூஜை நடைபெற்றது. திண்ணனார் வேட்டையாட சென்ற சமயத்தில் ஈசனுக்கு பூஜை வைக்கும் சிவச்சாரியார் அங்கு வந்தார்.

    இறைவன் மீதுள்ள இறைச்சி துண்டுகளை அப்புறப்படுத்துவார். முறைப்படி வழிபாடு செய்து செல்வார். ஐந்தாம் நாள் இரவில் சிவச்சாரியார் கனவில் இறைவன் தோன்றி திண்ணனாரின் மெய்யன்பினைப் பற்றிக் கூறினார்.

    மறுநாள் மறைந்திருந்து பார்க்கும்படி பணித்தார். ஆறாம் நாள் திண்ணனார் வழக்கம்போல் ஊனும், நீரும், மலரும் கொண்டு வந்தார். இறைவன் வலக்கண்ணில் ரத்தம் வழியக்கண்டார். அவர் நெஞ்சம் பதைபதைத்தார்.

    ரத்தத்தை துடைத்தார். ரத்தம் நின்றபாடில்லை. பச்சிலையைக் கொண்டு வந்து சாறு பிழிந்து தடவினார். ரத்தம் பெருகிக் கொண்டேயிருந்தது. ஊனுக்கு ஊனிடல் வேண்டும் என்ற நியதி அவர் நினைவுக்கு வந்தது.

    உடனே தன் கண்ணை அம்பினால் பெயர்த்து எடுத்து சிவபெருமானின் கண்ணில் அப்பினார். என்னே ஆச்சரியம் ரத்தம் நின்றது. மனநிறைவு கொண்டார். மகிழ்ந்தார். சற்று நேரத்திற்குப் பின் இடக்கண்ணில் ரத்தம் பெருகத் தொடங்கியது.

    வைத்திய முறை தெரிந்து விட்டபடியால் இப்போது அவர் வருந்தவில்லை. அடையாளம் தெரிவதற்காக இறைவனது இடது கண்ணில் தன் செருப்புக் காலை ஊன்றிக் கொண்டு தன் இடது கண்ணை அம்பினால் பெயர்த்து எடுக்க முயன்றார்.

    இறைவன் துணுக்குற்று தமது கையினால் திண்ணனார் கையைப் பிடித்துக் கொண்டு `நில்லு கண்ணப்பா' என்று தடுத்து நிறுத்தினார். ``என் வலது பக்கத்தில் நீ என்றும் நிலைத்திருப்பாயாக'' என அருளினார். இன்றும் திருக்காளத்திக்குச் செல்பவர்கள் கண்ணப்ப நாயனார் உயர்ந்த கற்சிலையாகக் கம்பீரமாய் நிற்பதைக் காணலாம். அன்று முதல் கண்ணப்பர் 63 நாயன்மார்களுள் ஒருவரானார். இவருடைய வரலாற்றை சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்துள் 186 பாடல்களாகப் பாடி மகிழ்ந்துள்ளார்.

    Next Story
    ×