search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    இருமுடி கட்டி வரும் மீனவர்கள்
    X

    இருமுடி கட்டி வரும் மீனவர்கள்

    • ஆந்திராவில் சில சக்தி தலங்களுக்கும் இருமுடி கட்டி செல்கிறார்கள்.
    • அப்படி வரும் பக்தர்களில் 90 சதவீதம் பேர் மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இருமுடி என்றதும் நமக்கு சபரிமலை அய்யப்பன் ஆலயத்துக்கு செல்லும் பக்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள்.

    கார்த்திகை மாதம் மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடி கட்டி செல்லும் அந்த யாத்திரை மிக வித்தியாசமானது.

    ஒரு மண்டலம் விரதமிருந்து சபரிமலை செல்வது தமிழக ஆன்மிக அன்பர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    அதேபோன்று ஆந்திராவில் பல்வேறு ஆலயங்களில் இருமுடி கட்டி யாத்திரை செல்லும் வழக்கம் இருக்கிறது.

    அங்குள்ள காணிப்பாக்கம் வினாயகர் ஆலயத்துக்கு கூட பக்தர்கள் இருமுடி கட்டி வருகிறார்கள்.

    ஆந்திராவில் சில சக்தி தலங்களுக்கும் இருமுடி கட்டி செல்கிறார்கள்.

    அந்த வகையில் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயத்துக்கு பக்தர்கள் இருமுடி கட்டி வருகிறார்கள்.

    அப்படி வரும் பக்தர்களில் 90 சதவீதம் பேர் மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நெல்லூர், ஓங்கோல், காவாலி, துர்க்கை பட்டிணம் ஆகிய நகரங்களில் வாழும் மீனவர்கள் ஆண்டுதோறும் இந்த தலத்துக்கு இருமுடி கட்டி வருகிறார்கள்.

    அதற்கு முன்னதாக இந்த மீனவர்கள் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் மாலை அணிந்து தீவிரமாக விரதம் இருப்பது உண்டு.

    அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து கடைப்பிடிக்கும் அத்தனை நெறிமுறைகளையும் இந்த பக்தர்களும் கடைப்பிடிக்கிறார்கள்.

    ஏப்ரல் மாதம் மச்ச ஜெயந்தி தினத்துக்கு முன்பு அவர்கள் தங்கள் ஊர்களில் இருந்து யாத்திரை புறப்படுவார்கள்.

    மிகச்சரியாக மச்ச ஜெயந்தி தினத்துக்கு ஒரு நாளைக்கு முன்பு நாகலாபுரம் வந்து சேர்வார்கள்.

    அவர்கள் தங்கள் இருமுடிகளில் ஹோமத்துக்கு தேவையான பொருட்களை சுமந்து கொண்டு வந்திருப்பார்கள்.

    மச்ச ஜெயந்தி தினத்தன்று அதிகாலையில் நாகலாபுரம் ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான ஹோமம் நடத்தப்படும்.

    அதில் இருமுடி கட்டி வரும் பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    தங்கள் வீட்டில் இருந்து இரு முடிக்குள் கட்டி கொண்டு வந்த ஹோம பொருட்களை ஹோமத்தில் சமர்ப்பிப்பார்கள்.

    பிறகு ஆலயத்தில் வழிபாடு செய்து தங்களது இருமுடி யாத்திரையை நிறைவு செய்வார்கள்.

    இப்படி இருமுடி சுமந்து வந்து வழிபடுவதன் மூலம் தங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    குறிப்பாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் போது நிறைய மீன்கள் கிடைக்க மீன் அவதாரம் எடுத்த வேதநாராயண சுவாமி அருள் புரிவதாக நம்புகிறார்கள்.

    அதுமட்டுமின்றி கடலில் மீன்பிடிக்க செல்லும் போது உரிய பாதுகாப்பு கிடைப்பதற்கும் வேதநாராயணர் துணை இருப்பதாக சொல்கிறார்கள்.

    ஆண்டுக்கு ஆண்டு இந்த தலத்துக்கு இருமுடி கட்டி வரும் மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

    தமிழகத்தில் இருந்தும் இந்த ஆலயத்துக்கு இரு முடி கட்டி செல்லும் பக்தர்கள் இருக்கிறார்கள்.

    பொன்னேரி, ஊத்துக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமானோர் இருமுடி கட்டி மச்ச ஜெயந்தி தினத்தன்று இந்த ஆலயத்துக்கு சென்று வருகிறார்கள்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சித்தூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமே பக்தர்கள் இருமுடி கட்டி வந்தனர்.

    சமீப காலமாக இந்த வழிபாடு அதிகரித்தப்படி உள்ளது.

    Next Story
    ×