search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    முண்டகக்கண்ணி அம்மன் கோவில் மிக பழைய கோவில்
    X

    முண்டகக்கண்ணி அம்மன் கோவில் மிக பழைய கோவில்

    • தமிழ்நாட்டில் ஆயிரமாயிரம் அம்மன் கோவில்கள் உள்ளன.
    • அம்பிகையை குண்டலி சக்தியாக கருதி யோகிகள் போற்றுவார்கள்.

    இந்த கோவில் மிகமிகப் பழமையான ஒரு கோவில் ஆகும். இந்த கோவில் அமைந்திருக்கும் தெரு `முண்டகக் கண்ணி அம்மன் கோவில் தெரு' என்றே அழைக்கப்பட்டு வருகிறது. மிகவும் பழமையான அரசாங்க ஆவணங்களிலும், இந்த தெருவின் பெயர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெரு என்றே காணப்படுகின்றது. இப்பகுதியில் உள்ள வயது முதிர்ந்த பலர் தங்கள் தாத்தாக்கள் காலத்திலும் இந்த அம்மன் கோவில் புகழுடன் விளங்கியதாக கூறுவர். இவை இந்த கோவிலின் பழமையை காட்டுகிறது.

    முதல் பிரார்த்தனை தலம்

    இந்த கோவிலில் எல்லா இனத்தவர்களும் வந்து தங்கள் பிரார்த்தனைகளைச் செலுத்தி வருகின்றனர். தங்கள் முதல் பிரார்த்தனையை இங்கே செலுத்திய பின்பே, பிற வழிபாடுகளையும், இவர்கள் மேற்கொள்கின்றனர். இந்தப் பழக்கம் நெடுங்காலமாக இங்கே தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது.

    இப்படி முதல் பிரார்த்தனை செய்யும் பழக்கம் நிலவுவது, இந்த கோவில் தொடக்க காலத்தில் மயிலையின் வடக்கு எல்லையில் அமைந்த எல்லையம்மன் கோவிலாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மயிலையின் காவல் தெய்வமாக, மக்களால் வழிபடப் பெற்ற அம்மனே நாளடைவில் முண்டகக்கண்ணி அம்மன் என்று மாறி இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    அடக்கமும் ஆற்றலும்

    சக்திவாய்ந்த முனிவர்களையும், மகான்களையும் தரிசிக்கப் போகும்போது, அவர்கள் காட்சி தரும் எளிமை கோலமும், அவர்கள் பேசுகின்ற கனிவான சொற்களும், நம்முடைய மன செருக்கை அடியோடு அழித்துவிடும். அவர்களிடம் அருளை பெற செல்கின்றோம். அருள் வழங்கும் வள்ளல்களான அவர்களின் எளிமை தோற்றம், நம் அகந்தையை சுட்டு எரிக்கின்றது.

    பெரும்சக்தி படைத்த முண்டகக்கண்ணி அம்பிகையின் சுயம்பு ரூபமும், ஓலைக்குடில் வாசமும், அவளைத் தொழுபவர்களிடம் இந்த மனமாற்றத்தையே ஏற்படுத்துகின்றன. அகந்தை அழிந்து அடியோடு மறைய உள்ளத்தில் எளிமையும் பக்தியும் பூத்து நிரம்பி வழிய வழி உண்டாகிறது. இதனால் இத்தலத்துக்கு பக்தர்கள் அனைவரும் அம்பிகையைத் துதித்து மகிழ்கின்றனர். இந்த மனமாற்றத்தை உள்ளத்திலே பூக்கும் தெளிவை ஏற்படுத்துவதற்காகவே அம்பிகை இவ்வாறு எளிய கோலத்தில் ஓலைக் குடிசையில் தோற்றம் தருகின்றாள்.

    அகத்தில் தோன்றும் காட்சி

    உருவமற்ற முண்டகக்கண்ணி அம்மனின் சுயம்பு வடிவத்தை புறக்கண்களால் கண்டாலும், நம் மனதில் அம்மன் சோதிப் பிழம்பாக, அருளோடு பார்க்கும் அன்னையாகவே காட்சி தருகின்றாள்.

    தமிழ்நாட்டில் ஆயிரமாயிரம் அம்மன் கோவில்கள் உள்ளன. எத்தனையோ வகையான கட்டிட அமைப்புகளும் உள்ளன. மண்ணிலே அமைந்தவை, செங்கல்லும் சுண்ணாச்சாந்தும் கலந்து கட்டியவை, கற்பணிகளால் எழுப்ப பெற்றவை என பலவகைகள் உள்ளன.

    ஓலைக் குடில்களும் உள்ளன. எனினும் ஓலைக்குடிலை விரும்பிய இந்த அம்பிகையின் உள்ளக் குறிப்பினை அனைவரும் சிந்திக்க வேண்டும். `என்னைப்பார்! எளிமையைப் போற்று! என்றும் இன்பமாக இருப்பாய்' என்று அன்னை கூறாமல் கூறுவது போல கருவறை காட்சி உள்ளது.

    நாகக்குடையும் மலர் இருக்கையும்

    அம்பிகையின் சுயம்பு வடிவத்துக்கு மேல் தாமரையில் அமர்ந்திருப்பவளாக அவளைப் புனைந்து காட்டும் ஒரு சிறிய விமான அமைப்பை காணலாம். அவள் தலைக்கு மேலாக, ஐந்து தலைநாகம் படம் விரித்து, அவளுக்கு நிழல் தரும் குடைபோல் அது விளங்குகின்றது.

    செந்தாமரையில் அமர்ந்த இவளுடைய உருவத் தோற்றமானது இவளே செல்வத்திற்கு அதிதேவதையான திருமகள் என்பதை சுட்டிக் காட்டுகிறது. இதனால் அவளை வழிபடுபவரின் வறுமை விலகிச் செல்வம் பெருகும். முண்டகக்கன்னித் தாயின் முன்னே நின்று வேண்டிய பலரின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது.

    குண்டலினி சக்தி

    அம்பிகையைக் குண்டலி சக்தியாகக் கருதி யோகிகள் போற்றுவார்கள். குண்டலி சக்தியானது மூலாதாரத்திலிருந்து சீறி எழுந்து சகஸ்ரநாமத்தை அடைந்து அங்கே சிவத்துடன் ஒன்றுபடும்.

    இந்த வகையில் குண்டலினி சக்தியை எழுப்பி மேலேற்றியும் இறக்கியும் யோகம் புரிபவர்கள், அளவில்லாச் சக்தியைப் பெற்றும், அழியாத உடலைப் பெற்றும் விளங்குவார்கள். இவ்வகையில் விளங்கும் குண்டலினி சக்தியாகிய மூல சக்தியே நாகப்பாம்பாக இந்த கோவிலில் உலவுகின்றது. எனவே நாகப்பாம்புக்கு முட்டையும் பாலும் வைத்துப் பூசிப்பது என்பது அன்னையை வழிபட்டதற்கு சமமாகும்.

    குண்டலினி சக்தியை மேம்படுத்திக் கொள்ள விரும்பு பவர்கள் முண்டகக்கன்னி அம்மனை பணிந்தால் நிச்சயமாக அதற்கான பலன்களை பெறுவார்கள்.

    அம்மன் கோவில்களில் நாகங்களின் நடமாட்டம் எப்போதுமே இருக்கும். `கோவில்பாம்பு' என்று இவற்றைக் குறிப்பிடுவார்கள். இந்தப் பாம்பு பக்தர்களுக்குக் கெடுதல் செய்வதும் இல்லை. தனக்கெனப் படைக்கும் பாலையும் முட்டையையும் அருந்திவிட்டுப் போய் விடுகின்றது.

    சில கோவில்களுள் பாம்பு புற்று தனியாக இருக்கும். சில இடங்களில் மூலஸ்தானத்துக்கு அருகேயே பாம்பு புற்று இருக்கும். இங்கே மூலஸ்தானத்துக்குப் பின்புறம் உள்ளது.

    இத்தலத்தில் நாகத்தையே தனக்கு உகந்ததாக ஏற்று விளங்குகிறாள் அன்னை. எத்தகைய கொடியவரையும் மாற்றித் தனக்கு அடியவராக்கிக் கொள்ளும் சக்தி பெற்றவள் அன்னை என்பது இதன்மூலம் விளங்கும் உண்மையாகும்.

    Next Story
    ×