search icon
என் மலர்tooltip icon

  ஆன்மிக களஞ்சியம்

  கிருஷ்ணபெருமாள் ஆலயங்கள்
  X

  கிருஷ்ணபெருமாள் ஆலயங்கள்

  • காளியங்க நர்த்தனராக கிருஷ்ணன் காட்சி தருகிறார்.
  • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் அலங்காரம்.

  ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும், சென்னிமலையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது கிருஷ்ணபெருமாள் ஆலயம். சுமார் 500 வருடங்கள் பழமை மிக்க திருக்கோவில் இது.

  ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரக மூர்த்தமானது, பன்னெடுங்காலத்துக்கு முன்பு சுயம்புவாக தோன்றியதாகும். இவருக்கு அவல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

  திருமண வரம் கைகூடும், நஷ்டத்தில் இயங்கி வந்த வியாபாரம் லாபம் கொழிக்கும். ஊத்துக்கோட்டை காளிங்கநர்த்தனர் கோவில் தலத்தில் சர்ப்பத்தை வதம் செய்யும் திருக்கோலத்தில், காளியங்க நர்த்தனராக கிருஷ்ணன் காட்சி தருகிறார்.

  இந்த காளிங்கநர்த்தனர் கோவிலுக்கு, நாகதோஷம் உள்ளவர்கள் வந்து ஸ்ரீகாளிங்கநர்த்தனப் பெருமானைத் தரிசித்து வேண்டினால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.

  வராகபுரி: உறியடித் திருவிழா என்றால் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள வராகபுரி என்ற வரகூரே பக்தப் பெருமக்களின் நினைவுக்கு வரும்.

  பல வைணவத் தலங்களில் உறியடித் திருவிழா நடைபெற்றாலும் வரகூரில் நடக்கும் உறியடித் திருவிழா மிகச் சிறப்பானது. பிறந்த குழந்தைகளை இந்த வழுக்கு மரத்தின் முன்னால் தரையில் வைத்து, இந்தக் குழந்தை ஸ்ரீகிருஷ்ணர் அருளிய பிரசாதமாக நினைத்து எடுத்துக் கொள்கிறார்கள்.

  மதுரா: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா, ஆக்ராவில் இருந்து வடக்கே 50 கி.மீ. தொலைவிலும், டெல்லியில் இருந்து தென்கிழக்கே 145 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

  பஞ்ச பாண்டவர்களுக்கு கடைசி வரையில் துணை நின்று அவர்களின் பிரச்சினைகளையும் துயரங்களையும் போக்கியவர் கிருஷ்ண பரமாத்மா என்பதால், மதுரா கிருஷ்ணரை வழிபட்டால் துன்பங்களும் துயரங்களும் விலகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  குருவாயூர்: குழந்தைகளுக்கான பிரத்யேகமான தலமாக குருவாயூரைப் போற்றுவார்கள். குருவாயூரில் எல்லா நாட்களிலும் அன்னப்ராசனம் எனப்படும் சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்குக் குழந்தை பிறந்தால், இங்கு வந்து சோறு ஊட்டுவதாக வேண்டிக் கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.

  திருச்சி: ஸ்ரீவேணுகோபாலகிருஷ்ணன் கோவில். திருச்சி பீமநகர் பகுதியில் ஸ்ரீவேணுகோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் கிருஷ்ணன் சக்தி மிக்கவர்.

  மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக, ரோகிணி நட்சத்திரநாளில், இங்கு கிருஷ்ணரை வேண்டி, பால், தயிர் மற்றும் பழச்சாறு அபிஷேகம் செய்தால் அந்தக் குழந்தைகள் விரைவில் குணமடையும் என்பது நம்பிக்கை.

  திருவானைக்காவல்: ஸ்ரீவேணுகோபால் சுவாமி, திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு அருகில், கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீவேணுகோபால் சுவாமி.

  வெண்ணெய் தாழியுடன் அருள்பாலிக்கும் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணருக்கு, வெண்ணெய் மற்றும் கற்கண்டு நைவேத்தியம் செய்து தரிசித்தால்... விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்க பெறுவார்கள் என்பது நம்பிக்கை

  இந்த கோயில், புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். இந்த கோவிலில் ஸ்ரீராதா கல்யாணம் விமரிசையாக நடைபெறுகிறது. இந்த வைபவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஸ்ரீவேணுகோபாலனை தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும்.

  திருச்சி திருமந்திரநகர்: சந்தான கிருஷ்ண சாமி கோவில், திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்து வந்த சுந்தர்ராஜ ஐயங்காரும் அவர் மனைவி ருக்மினியும் திருமணமாகி 15 வருடங்களாகியும் பிள்ளை செல்வம் இல்லாமல் பெரிதும் கலங்கி வந்தனர்.

  அவர்களின் கனவில் வந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தென் திசையில், ஸ்ரீபார்வதி தேவிக்கு சிவப்பரம்பொருள் மந்திரோபதேசம் செய்த இடம் உள்ளது. அந்த இடத்தின் பெயர்... திருமந்திர நகர்.

  குழந்தை வடிவில் அவதரித்த எனக்கு, அந்த வடிவிலேயே அங்கே கோயில் கட்டி வழிபட்டு வா! குழந்தை பாக்கியம் கிடைக்கும் என அருளி மறைந்தார். அதன்படி கணவனும் மனைவியும் திருமந்திர நகர் எனும் ஊருக்கு வந்தார்கள்.

  அங்கே சந்தான கிருஷ்ண சாமி கோவில் கட்டி குழந்தை கிருஷ்ணனின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்கள். அதன் பலனாக, அவர்கள் குழந்தை வரம் கிடைக்க பெற்றனர். அங்கு நின்ற கோலத்தில், குழந்தை கண்ணனாக காட்சி தருகிறார் ஸ்ரீசந்தான கிருஷ்ண சுவாமி. இவருக்கு துளசி மாலை சார்த்தி சிறப்பு திருமஞ்சனம் செய்து வழிபட்டால்... பிள்ளை வரம் கிடைக்க பெறுவார்கள் என்பது ஐதீகம்.

  திருவண்ணாமலை குண்டு கண்ணன்: கண்ணனை அழிக்க கம்சன் பூதனை என்ற அரக்கியை அனுப்பி வைத்தான். அவள் அழகியாக உருவெடுத்து, குழந்தை கிருஷ்ணருக்கு பால் கொடுப்பது போல் விஷம் கொடுத்தாள். குழந்தை கண்ணன் பெரு வடிவம் எடுத்து பாலை குடிப்பது போல் அவளது உயிரையே குடித்து விட்டார்.

  அப்படி கண்ணன் எடுத்த மாபெரும் வடிவம் திருவண்ணாமலை கிரிவல பாதையின் நிறைவு பகுதியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த கண்ணனுக்கு `பூதநாராயணர்' என்ற பெயரும் ஏற்பட்டது. இவரை வணங்கினால் தீய குணங்கள் அழிந்து நற்குணங்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை.

  திருவண்ணாமலை தலத்தின் காவல் அரணாக இந்த குண்டு கண்ணன் இருப்பதாக கூறப்படுகிறது. குழந்தைகள் அறிவாளியாகவும், நற்குணங்கள் கொண்டவர்களாகவும் பிறக்க இவருக்கு வெண்ணெய், கல்கண்டு படைத்து, துளசிமாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.

  கிரிவலத்தை நிறைவு செய்பவர்கள், இந்த கோயிலில் தீர்த்தம் வாங்கி வாசல் முன் அதை கொட்டுகின்றனர். அதாவது கிரிவலம் செல்வதால் உண்டான பலனை கிருஷ்ணருக்கு சமர்ப்பணம் செய்து தியாக உள்ளத்தை பெறுவதாக ஐதீகம்.

  திருத்தங்கல்: சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தலத்தில் திருமால் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார். கிருஷ்ணரின் பேரன் அனிருத்துக்கும் உஷை என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த திருமணத்தை நடத்தி வைக்க கிருஷ்ணரே நேரில் வந்தார்.

  அப்போது அவர் தஸ்காலமலையில் தங்கினார். அந்த மலையே திருத்தங்கல் என்று அழைக்கப்படுகிறது.

  மருதூர்: நவநீத கிருஷ்ணர் கோவில், நெல்லையில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலையில் உள்ளது மருதூர். இங்கு புகழ் பெற்ற நவநீத கிருஷ்ணர் கோவில் உள்ளது.

  கண்ணன் வெண்ணை திருடி உண்டதால் கோபம் அடைந்த யசோதா, கண்ணனை உரலில் கட்டிப் போட்டாள். அந்த உரலில் கண்ணன் இழுத்தப்படி சென்றான். அப்போது இரு மருத மரங்களுக்கிடையே உரல் சிக்கிக் கொண்டது.

  கண்ணன் கைகள் பட்டதும் மருத மரங்களாக இருந்த குபேரன் மகன்கள் சாபவிமோசனம் பெற்றனர். அவர்கள் மருத மரங்கள் உள்ள ஊர்களில் எல்லாம் கிருஷ்ணர் காட்சி தர கேட்டுக் கொண்டார். அந்த ஐதீகத்தின் அடிப்படையில் மருதூரில் கிருஷ்ணர் ஆலயம் அமைந்துள்ளது.

  துவாரகை: துவாரகையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணருக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் அலங்காரம் செய்யப்படுகிறது. திங்கட்கிழமை ரோஜா, செவ்வாய்க்கிழமை சந்தனம், புதன்கிழமை பச்சை, வியாழக்கிழமை ஜேசரி, வெள்ளிக்கிழமை வெள்ளை, சனிக்கிழமை நீலம்,

  ஞாயிற்றுக்கிழமை சிவப்பு நிறங்களில் அலங்காரம் செய்கிறார்கள்.

  பேளூர்: குழல் ஊதும் கண்ணன் 2 கைகளுடன் இருப்பதை தானே நாம் பார்த்து இருப்போம் ஆனால் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ள பேளூரில் எட்டு கை கிருஷ்ணர் உள்ளார். எனவே இது அபூர்வமான தலமாக கருதப்படுகிறது.

  இத்தலத்தில் வழிபாடு செய்தால் பணக் கஷ்டங்கள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

  காரமடை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடையில் ஸ்ரீசந்தான ஆலயம் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று இங்கு கிருஷ்ணருக்கு கற்கண்டு, சீடை, சுக்கு வெல்லம், முறுக்கு, நாவல் பழம் படைத்து வணங்குவார்கள். அன்று அவரை தரிசித்தால் உடல் நலமும், செல்வ வளமும், உண்டாகும் என்பது நம்பிக்கை.

  மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில்: தமிழ்நாட்டில் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

  ராஜகோபாலர் இக்கோவிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். இவருக்கு பால் பிரதான நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர்.

  இத்தலத்தில் உள்ள பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும்.

  நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி அருகே உள்ளது கிருஷ்ணன் கோவில் என்ற ஊர்.இங்கு அழகான கிருஷ்ணன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இத்தலத்தில் இரவு நேர பூஜையின் போது தினமும் பாலகிருஷ்ணனை வெள்ளித் தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடி தூங்க வைக்கிறார்கள்.

  குழந்தைக்கிருஷ்ணனை தூங்க வைப்பதற்கு முன் கிருஷ்ணனுக்கு சார்த்தப்பட்ட வெண்ணெய் மற்றும் கிருஷ்ணனுக்கு நிவேதித்தப்பாலை பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.

  தொடர்ந்து மூன்று அஷ்டமி நாட்கள் அல்லது ரோகிணி நட்சத்திர நாட்களில் இக்கோவிலுக்கு வந்து `பால கிருஷ்ணனை' வழிபட்டு வெண்ணெய் பாலும் வாங்கி உண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  Next Story
  ×