search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருவாலங்காட்டில் இருந்து திருக்காளத்தி சென்ற காளி
    X

    திருவாலங்காட்டில் இருந்து திருக்காளத்தி சென்ற காளி

    • காத்யாயினி அம்மனுக்கும் தனி சன்னதி உள்ளது.
    • காளியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் உள்ளன.

    காளத்தியப்பரைத் திருமால், துர்க்கை, காளி, சீனிவாசப் பெருமாள், எமன், சனி, சித்திரகுப்தன், சப்தரிஷிகள், அகத்தியர் மார்க்கண்டேயர், வியாசர், ராமன் கண்ணன், அனுமன், சீதை, பரமதன், தருமர் ஆகியோர் வழிபட்டு பூஜை செய்துள்ளனர். அவர்களுடைய திருவுருவங்களும் இவர்கள் பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கங்களும் பிரகாரம் முழுவதும் காணப்படுகின்றன.

    காளத்தீஸ்வரரை வழிபட்ட விஷ்ணு சூரியநாராயணர், காளத்திக் கணநாதரை வழிபட்ட துர்க்கையம்மன் காலகாம்பாள், கனக துர்க்கையம்மன் என்ற பெயர்களுடன் தனிச் சன்னதிகளில் உள்ளாள். காத்யாயினி அம்மனுக்கும் தனிச் சன்னதி உள்ளது.

    கடவுளை பழித்துச் செய்யப்பட்ட தட்சன் நடத்திய யாகத்தில் தாட்சாயிணி நெருப்புக் குண்டத்தில் விழுந்து துவண்டுபோனதைக் கண்ட சப்தரிஷிகள் தட்சனின் கொடுமைகள் முற்றுப்பெற அருளுமாறு பரமேஸ்வரனைப் பூஜை செய்து தொழுதனர். வீரபத்திரர், பத்ரகாளி என்ற பெயருடைய இரண்டு தெய்வங்களை ஈசன் படைத்தருளினார்.

    தட்சனின் யாகத்தில் பங்கு பெற்ற பாவத்திற்காக தேவியர்களை இருவரும் தண்டித்தனர். தட்சனின் தலையை அறுத்து எறிந்த வீரபத்திரர் வடக்கேயுள்ள கயிலைமலைக்கு சென்று சிவ நினைவில் மூழ்கினார். ஆனால் பத்திரகாளியோ வெறி அடங்காமல் கண்ணில் பட்ட எல்லோரையும் தாக்கி துன்புறுத்தினாள்.

    காளியின் கொடுமைக்கு ஆளான மண்ணுலக வாசிகளும், விண்ணுலக வாசிகளும் மகேஸ்வரனை பூஜை புரிந்து தங்களை காத்தருளுமாறு வேண்டினர். ஆடல் நாயகனான கனகசபேசன் திருவாலங்காட்டில் வெளிப்பட்டுத் தோன்றி திருநடனம் ஆடினார்.

    காளியும் போட்டி போட்டுக் கொண்டு ஆட வந்தாள். கால்கட்டை விரலை காது வரையிலும் உயர்த்தி ஆடும் ஊர்த்துவத் தாண்டவம் என்ற நடனத்தை அம்பலவாணர் ஆடினார்.

    நடன நூல்களில் கூறப்படாத, நாட்டியக் கலைஞர்கள் அறியாத, முப்பத்தாறு தத்துவங்களுக்கு அப்பாற்பட்ட அருள்மேனி கொண்ட எல்லாம் வல்ல பரம்பொருளால் மட்டுமே நிகழ்த்தக்கூடிய இந்த நுணுக்கமான அரிய நடனத்தை காளி ஆட முடியாமல் போனதால் கோபமும் வெறியும் அடங்கி அமைதியடைந்தாள்.

    ஈசனை தொழுது வணங்கினாள். அம்பலத்தரசனின் திருவருளால் எல்லைத் தெய்வமாக விளங்கும் பேறு பெற்ற காளி இரும்பை மாகாளம், அம்பர் மாகாளம் போன்ற பல தலங்களிலும் பரமேஸ்வரனை பூஜை செய்து வழிபட்ட பின் காளஹஸ்தியை அடைந்தாள்.

    வாயுலிங்கப் பரம்பொருளைப் பூஜை செய்து வணங்கிய பின் உஜ்ஜயினிக்குப் பயணமானாள். திருக்காளத்தீஸ்வரரை வழிபட்ட காளிக்கு காளத்திநாதர்க் கோவிலில் தனி சன்னதியுள்ளது.

    காளி சன்னதிக்கு அருகே காளியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் உள்ளன.

    மேலும் பிரகாரத்திலும்உ ள்ளன. தனிச் சன்னதி கொண்டும் அமைந்துள்ளன. காளிகாதேவி சன்னதிக்கு உள்ளும் லிங்கம் உள்ளது.

    Next Story
    ×