search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆட்சீஸ்வரர் தல வரலாறு
    X

    ஆட்சீஸ்வரர் தல வரலாறு

    • விநாயகர் விக்னேசுவரர். தன்னை வழிபடுவோரின் விக்னங்களைப் போக்குவார்.
    • ‘‘தனதடி வழிபடும் அவர் இட கடி கணபதி‘‘ எனத் திருஞானசம்பந்தர் போற்றுவார்.

    முன்பு ஒரு காலத்தில் தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களும் பிரம்மதேவரை நோக்கிக் கடுந்தவம் புரிந்தனர்.

    அவர்கள் தவத்துக்கு இரங்கி பிரம்மதேவர் அவர்கள் முன்புதோன்றி, ''உங்களுக்கு என்ன வரம் வேண்டும்?'' எனக் கேட்டார்.

    அதற்கு அவர்கள் முறையே தங்களுக்கு பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆனதும் பறக்கும் திறன் வாய்ந்ததுமான மூன்று கோட்டைகள் வேண்டும்'' என வேண்டினர். அவரும் அவ்விதமே தந்தருளினார்.

    அந்த மூன்று அசுரர்களும் கோட்டைகளுடன் வானத்தில் பறந்து சென்று தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் தந்து வந்தனர்.

    தேவர்கள் துன்பம் பொறுக்க முடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    சிவபெருமான் சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகவும், கீழ் ஏழு உலகங்களைத் தேருக்குக் கீழ்த்தட்டுகளாகவும்

    எட்டுத்திக்கும் உள்ள மலைகளைத் தூண்களாகவும் மேலேழு உலகங்களைத் தேரின் மேல் தட்டுகளாகவும்

    இமயத்தைக் கொடியாக்கி நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும் பிரம்மாவைத் சாரதியாகவும்,

    மகாமேருமலையை வில்லாகவும் ஆதிசேஷனை அந்த வில்லுக்கு நாணாகவும் திருமாலை அம்பாகவும் அமைத்துக் கொண்டு தேவாம்சம் பொருந்திய தேரை உருவாக்கினார்.

    அந்த தேரில் ஏறி அசுரர்கள் தங்கியிருந்த திரிபுரம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

    அப்போது அவர் முழு முதற்கடவுளாகிய விநாயகரை வழிபடாமல் புறப்பட்டார்.

    தேவர்கள் தம்மை மதியாது சென்ற தேவர்களின் செயல்கண்டு கோபம் கொண்ட விநாயகப் பெருமான் தேரின் அச்சை முறித்து தடையை ஏற்படுத்தினார்.

    இதனால் மகேசனின் தேர் தொடர்ந்து செல்ல முடியாமல் புறப்பட்ட இடத்திலேயே நின்றது.

    வினைகளை வேரறுக்கும் விநாயகப் பெருமானின் செயல் இது என்பதை குறிப்பால் உணர்ந்த ஈசன், தன் தனயனை நினைத்து செல்லும் செயல் சிறப்படைய வேண்டும் என திருவுள்ளம் பற்றினான்.

    இதனால் அத்தேரின் அச்சு வழியில் முறிந்துவிட்டது. அப்படித் தேரின் அச்சு இற்ற இடமே 'அச்சிறுப்பாக்கம்' எனப் பெயர் பெற்றது.

    இதனை அருணகிரிநாதர் திருப்புகழில் ''முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா'' எனப் பாடுகிறார்.

    எவரும் ஒரு செயலைச் செய்யத் தொடங்குகையில் விநாயகரை வழிபட்டே தொடங்க வேண்டும். அப்படித் தொடங்கினால் அவர் செயலை விநாயகர் முன்னின்று முடித்து வைக்க வேண்டும்.

    தன்னை வணங்காமல் தொடங்கினால் இடையூறு செய்ய வேண்டும் என விதித்தவரே சிவ பெருமான்தான்.

    அவ்விதியை உலகிற்கு செயல்படுத்திக்காட்ட அவர் அமைத்துக் கொண்ட திருவிளையாடலே இது.

    சிவபெருமான் தேவம்சம் பொருந்திய தேரில் இருந்து இறங்கி ஸ்ரீவிநாயக பெரு மானை வணங்கி, விநாயக பெருமானுக்கு முக்கண் உடைய தேங்காய் பலியிட்டு (செதூர் தேங்காய் உடைத்து) மீண்டும் அத்தேரில் சென்று முப்பராதிகளை அழிக்க திருவதிகை என்ற தலத்துக்கு சென்றார்.

    யாரின் துணையும் இல்லாமலேயே சிவன் சிரித்தார். அவ்வளவிலேயே முப்புரங்களை எரித்தார்.

    விநாயகர் விக்னேசுவரர். தன்னை வழிபடுவோரின் விக்னங்களைப் போக்குவார்.

    தம்மை வழிபடாதவர்க்கு விக்கினங்களை ஆக்குவார்.

    ''தனதடி வழிபடும் அவர் இட கடி கணபதி'' எனத் திருஞானசம்பந்தர் போற்றுவார்.

    இவ்வரலாற்றை நினைவூட்டும் வகையில் கிழக்கு மாடவீதியில் ''அச்சுமுறி விநாயகர்'' திருக்கோவில் கொண்டு எழுந்தருளி உள்ளார்.

    தேர் அச்சு + இற்ற காரணத்தினால் அச்சிறுபாக்கம் என இவ்வூர் பெயர் பெற காரணம் ஆகும்.

    இவ்வாலயத்தில் அச்சுமுறி விநாயகரை வழிபட்டால் சலக கஷ்டங்களும், சகலவித தோஷங்களும், தொழில் தொடங்குவதற்கு தடங்களும், படிப்பிற்கும் 11, 54, 108, 1008 சதூர் தேங்காய் உடைத்து சங்கடங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    Next Story
    ×