search icon
என் மலர்tooltip icon

  ஆன்மிக களஞ்சியம்

  ஈசன் ஆடிய தாண்டவங்கள்
  X

  ஈசன் ஆடிய தாண்டவங்கள்

  • சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார்.
  • மரகத நடராஜர் சிலை மீது சந்தனம் பூசப்படும்.

  ஒரு தடவை திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணு திடீரென மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினார். அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது சித்திரை பவுர்ணமி நிலவை போன்று பளிச்சிட்டது.

  பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று சிவன் கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு உத்தரகோசமங்கை திருவாதிரை நாளன்று ஆடிய தங்களுடைய திருத்தாண்டவமே எனது மகிழ்ச்சிக்கு காரணம் என்றார்.

  இதைக்கேட்டதும் திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை, தான் ஆடிய நாட்டியத்தை தானே பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசை சிவபெருமானுக்கு ஏற்பட்டது.

  எனவே ஈசன் பாதி மார்புக்குமேல் மனிதராகவும், மார்புக்குக் கீழ் பாதி பாம்பாகவும் மாறி பதஞ்சலி முனிவர் ஆனார். ஈசன் ஆடிய திருநடனத்தை ஈசன் கண்டுகளித்த இடம்தான் ஆதிசிதம்பரம் என்ற உத்திரகோச மங்கையாகும்.

  சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் 18 நடனங்கள் ஈசன் தனியாக ஆடியதாகும். ஈஸ்வரியுடன் ஆடியது 36, விஷ்ணுவுடன் ஆடியது 9, முருகப்பெருமானுக்காக ஆடியது 3, தேவர்களுக்காக ஆடியது 42-ம் ஆகும்.

  ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகின்ற உத்தரகோசமங்கையில் மட்டும் நான்கு தாண்டவம் முதல் தடவையாக ஆடி உள்ளார். அந்த 4 தாண்டவங்கள் வருமாறு:-

  ஆனந்த தாண்டவம், சந்தியத் தாண்டவம், சம்விஹார தாண்டவம், ஊர்த்துவத் தாண்டவம் ஆகும். அடுத்து சிவபெருமான் சிதம்பரத்தில் ஆடிய தாண்டவம் மூன்று. அவை (1) திரிபுரந்தர தாண்டவம் (2) புஜங்கத் தாண்டவம் (3) லலிதாத் தாண்டவம் ஆகும்.

  மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று ஈசனின் நடனத்தை காண்பது விசேஷம்.

  இந்த ஆருத்ரா தரிசனத்தை காண தேவலோக தேவர்கள், ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோர் உத்தரகோசமங்கைக்கு வருவார்கள். இங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியல் செய்த பாவங்கள் விலகி இன்பமான வாழ்வு அமைவதுடன், சுமங்கலிப் பெண்களுக்குச் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

  கன்னி பெண்களுக்கு நல்ல இடத்தில் திருணம் கைகூடும். ஆடவர்களுக்கு மனதில் தைரியமும் உடல் பலமும் கூடும். ஆருத்ரா தரிசனம் பன்மடங்கு பலன்களையும் நலன்களையும், வளங்களையும் வாரி வழங்கும் வழிபாடாக உள்ளது.

  அவரது ஐந்தொழில்களை ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே இத்திருத்தலத்தில் பஞ்சகிருத்திய உற்சவம் நடந்து வருகிறது.

  உத்தரகோசமங்கை ஆதிசிதம்பரம் என்றும் பூலோக கைலாயம் என்றும் பூலோக சொற்கம் என்றும் உலகத்தில் முதல் தோன்றிய கோவில் என்ற பெருமை உண்டு. முக்தி கிடைக்க வழி செய்யும்.

  மனதை கவரும் மரகத நடராஜர்

  உத்தரகோசமங்கையில் உள்ள நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகத கல்லால் ஆனது. அவர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர்.

  ஒளிவெள்ளத்தில் இந்த சிலையைப் பார்க்கும்போது உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும். அபூர்வமான இந்த விக்கிரகத்தில் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் இருப்பதைக் காணலாம். எனவே இந்த சிலை உலக அதிசயத்தில் ஒன்றாக உள்ளது.

  இந்த நடராஜர் விக்ரகம் மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்க இயலாத தன்மை கொண்டது. எனவே இந்த கோவிலில் மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படுவதில்லை. எந்த விதத்திலும் விக்கிரம் சேதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள்.

  வருடத்திற்கு ஒரு நாள் அதாவது மார்கழி மாதம் பவுர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் மட்டும் சந்தனக்காப்பு கலைக்கப்படும். அன்று முழுவதும் சந்தனக்காப்பு இல்லாத மரகதக்கல் மேனியால் ஆன நடராஜரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

  அதனைத்தொடர்ந்து நடராஜர் சிலைமீது சந்தனாதிதைலம் பூசப்பட்ட பின்னர் வெண்ணெய், சந்தனம், குங்குமம், மஞ்சள் திரவியம், தேன், பால், தயிர், இளநீர் உள்பட 32 வகையான அபிஷேகம் நடைபெறும்.

  இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.

  மேலும் நடராஜர் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதனை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். இதையடுத்து அன்று இரவு சரியாக 12 மணி அளவில் சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டு மீண்டும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனம் பூசப்படும்.

  திருவாதிரை அன்று கோவிலில் அதிக கூட்டம் இருக்கும் காலை பத்து மணியில் இருந்து மரகத நடராஜரைப்பார்க்கலாம். இரவு 3 மணிக்கு மேல் சந்தனம் பூசிவிடுவார்கள் பிறகு அடுத்த வருடம்தான் மரகத நடராஜரை தரிசிக்க முடியும்.

  அதனால் இரவு சாமி தரிசனம் செய்யும்போது வரிசை யில் அதிகநேரம் நிற்கவேண்டியதிருக்கும் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருப்பதால் சில நேரம் அதிக தொலைவில் இருந்து வந்து இருப்பவர்கள் மரகத நடராஜரை பார்க்காமலே சந்தனம் பூசப்பட்ட நடராஜரை பார்த்து செல்ல வாய்ப்பு உண்டு.

  இந்த ஏமாற்றத்தை தவிர்க்க காலையில் வந்துவிட்டால் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் நேரத்தில் மரகதநடராஜர் தரிசனத்தை எவ்வித சிரமமும் இன்றி தரிசித்து விட்டு செல்லலாம். வயதானவர்கள் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் காலையில் வந்து விடுவது சிறந்தது.

  முதல் பூஜை அம்பிகைக்கே....

  நடராஜர் சன்னத்திக்கு பின்புறம் பிரகாரத்தில் ஒரு அம்பிகை சன்னதி இருக்கிறது. ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாளில் இவளுக்கு பிட்டு, களி நைவேத்யம் படைத்து, மஞ்சள் பயிறு சாத்தி விசேஷ பூஜை நடக்கிறது. அதன் பின்பே நடராஜருக்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த அம்பிகை, திருவாதிரை விரதம் இருந்து சிவனருள் பெற்றார். இதன் அடிப்படையில் இவளுக்கு முதலில் பூஜை செய்யப்பட்டு அதன் பின்பு சிவனுக்கு பூஜை செய்வார்கள்.

  மங்களம் உண்டாகும்

  திருத்தலத்தை மிதித்தாலே மங்களம் யாவும் கைகூடிவரும் என்பதால் இங்கு எழுந்தருளி உள்ள இறைவர் இறைவிக்கு மங்களநாதர், மங்கள நாயகி எனத்திருமங்கள் வழங்குகின்றன.

  சிவபெருமானை வழிபட்ட ஆயிரம் சிவவேதியர்களும் ஒவ்வொரு லிங்க வடிவில் இறைவனோடு ஒன்றினர். அதுவே இங்கு சஹஸ்ரலிங்கமாக தரிசனம் தருகின்றது.

  Next Story
  ×