search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சங்கு தீர்த்தம்
    X

    சங்கு தீர்த்தம்

    • பாஞ்சசன்னியம் என அழைக்கப்பட்ட தனது கையில் உள்ள வலம்புரிச் சங்கை வாயில் வைத்து ஊதி போர் ஆரம்பிக்கப்படுவதை தெரிவித்தார்.
    • அருமையானதும், பெருமையானதும் ஆக விளங்கும் சங்குகள் ஆழ்கடலில் இருந்து பெறப்படும். இதில் மிக அருமையான வலம்புரி கிடைப்பது அரிதாகும்.

    ஸ்ரீமந் நாரயணர் திருக்கரத்தில் ஒருகையில் வலம் புரிச்சங்கும் மறுகையில் ஸ்ரீசக்கரமும் தரித்தபடி காட்சி அளிப்பார்.

    தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடையும் போது அமிர்தம் மகாலஷ்மி, வலம்புரிசங்கு, காமதேனு இப்படி பல அரிய பொருட்கள் கிடைத்தன. அதில் மகாவிஷ்ணு மகாலஷ்மியை தனது இருதயத்திலும், கையில் சங்கையும் வைத்துக் கொண்டார். காத்தல் கடவுளாக விளங்கும் மகாவிஸ்ணு மகாபாரதயுத்தம் நடைபெற ஆரம்பிக்கும் போது அர்ச்சுனனுக்கு தேரோட்டியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். கீதா உபதேசம் செய்து நிலைகுலையாது அர்ச்சுனனை போராட்டம் பற்றி வழிகாட்டினார். பாஞ்சசன்னியம் என அழைக்கப்பட்ட தனது கையில் உள்ள வலம்புரிச் சங்கை வாயில் வைத்து ஊதி போர் ஆரம்பிக்கப்படுவதை தெரிவித்தார்.

    பிறப்புக்கும் இறப்புக்கும் சங்கு முக்கியம் இடம் வகிக்கிறது. தீய சக்திகள் இதனால் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் அரண்மனைகளில் அரசர் விழாக்களில் இச்சங்கு முக்கிய இடம் வகிக்கப்படுகிறது. விழா ஆரம்பிக்கும் முன் போருக்கு தயாராகும்போது சங்கினை வாயில் வைத்து ஊதி ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால், கோரோசனை, கஸ்தூரி பருகுவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர்.

    மகாலஷ்மிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லஷ்மி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து மந்திரத்தினால் புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தம் போல் பரிசுத்தமாக விளங்குகிறது. ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். அஸ்டோத்ரசத நூற்றியெட்டு எனவும், அஸ்டோத்ரசகஸ்ர ஆயிரத்தெட்டு எனவும் சங்குகள் இடம் புரிச்சங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டு பூஜித்த பின் சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சங்குவால் அபிஷேகிக்கும் போது மகாபுண்ணியம் கிடைக்கப் பெறுகிறது. அதில் பிரதான சங்காக விளங்கும் வலம்புரி தீர்த்தம் பாவங்களைப்போக்கி தீவினை களைந்து நன்மை அளிக்கிறது.

    அருமையானதும், பெருமையானதும் ஆக விளங்கும் சங்குகள் ஆழ்கடலில் இருந்து பெறப்படும். இதில் மிக அருமையான வலம்புரி கிடைப்பது அரிதாகும். தேவி பாகவத்தில் வலம்புரி சங்கு பற்றி கதையன்று உண்டு. அக்காலத்தில் கிருஷ்ண பகவானுக்கு மகனாக அவர் தேகத்தில் சுதர்மன் அவதரித்தார். சுதர்மன் ராதையால் ஏற்பட்ட சாபத்தின் காரணமாக சங்கசூடனாக அசுரகுலத்தில் பிறந்து பின்பு சாபம் தீர பல தவங்கள் இயற்றி யாகங்கள் செய்து யாராலும் அழியாத வரம் பெற்றதோடு, மந்திரகவசமும் கிடைக்கப் பெற்றான். மூன்று யுகங்களிலும், கிருதயுகத்தில் வேதவதி, திரேதாயுகத்தில் சீதை, துவாபர யுகத்தில் பாஞ்சாலியான திரௌபதியாகப் பிறந்து திரிகாயினி எனப் பெயர் பெற்று திகழ்ந்தாள் வேதவதி. இவள் லஸ்மியின் அம்சமாகையால் இலஸ்மியிடமே சேர்ந்தாள்.

    லஸ்மி சரஸ்வதி கங்கை மூவருக்குள்ளும் ஏற்பட்ட கலகலப்பு பகையாக மாறி அவர்களே சாபமிட்டனர். அதன் விளைவே லஸ்மி அம்சமான துளசி தருமத்வஜனின் புத்திரி துளசியாக அவதரித்தாள். சாபங்கள் காரணமாக மானிடப்பிறவியாகி சங்கசூடனை மணம் புரிந்து பதிவிரதா தர்மத்தை கடைப்பிடித்து உலகம் போற்ற வாழ்ந்து வரும் போது சங்கசூடன் மூவுலகங்களையும் தன் வசப்படுத்தி ஆட்சி புரிய நினைத்தான்.

    அசுரருக்கும் தேவருக்கும் எப்போதும் தீராதபகை. அது போரில் முடிவுறுவது வழக்கம். அசுரனாகப் பிறந்து மூவுலகங்களையும் ஆட்டி வைத்து தேவலோகத்தை தன் கட்டுக்குள் கொண்டுவர சங்கசூடன் போர் செய்தான். அசுரப் படைகளை ஏவி தேவர்களை துன்புறுத்த தொடங்கினான். அதனால் தேவர்கள் அனைவரும் திருமாலிடம் முறையிட "பிரம்மனிடம் பல வரங்கள் பெற்று அவன் அழியாது உள்ளான். அவனை சிவபெருமானால் மட்டுமே அழிக்க முடியும், அதிலும் மந்திரக்கவசமும் அவன் மனைவியின் பதிவிரதத் தன்மையும் இழக்கப்படாது சங்கசூடனுடன் இருக்கும் வரை அவனுக்கு அழிவு கிடையாது. ஆகையால் அரிய சக்தியுள்ள சிவனிடம் தஞ்சம் அடையுங்கள்" என்று அவர் கூறியதும் தேவர்கள் சிவனிடம் முறையிட, தேவர்கள் புடைசூழ சென்று சங்கரரும் சங்கசூடனுக்கு தூது அனுப்பி தேவர்களுக்கு உரிய தேவலோகத்தின் மீது ஆசைப்படாதே என்றும் எதுவும் அளவுக்கு மிஞ்சி ஆசைப்பட்டால் அழிவு நிச்சயம் என்று சமாதானமாகப் போகும் படி கூறினார். அவன் தலையில் கனமும் மனதில் வஞ்சமும் சிவனாரையே எதிர்த்து பேசினான். தேவர்களுக்கு மட்டும் எல்லாம் கிடைக்கவேண்டும். அசுரர் அழிந்து பட்டு போகவேண்டும் என நினைப்பது சரியா? என்றும் தேவ சபையை வென்று அரசாள்வேன் எனக்கூறி நெடுங்காலம் போரிட்டுக் கொண்டே இருந்தான்.

    ஆக அவனை வெல்லுவது எளிதல்ல என நினைத்து அவனது மந்திரக்கவசத்தை தந்திரமாக யாசித்து பெற்றுக் கொண்டும் சங்கசூடனின் மனைவி துளசியிடம் விஸ்ணு சென்று அவள் கணவனாக மாறி அவள் பதிவிரதத்தன்மையை இழக்கச் செய்யவும் கடும் போர்புரிந்த சங்கசூடனை சிவபிரான் தன்சூலாயுதத்தால் பொடிப்பொடியாக்கினார். உயிர் இழந்த சங்கசூடன் வைகுந்தம் சென்று மோட்சம் அடைந்தான். சங்கசூடனின் உடல் சாம்பலாகியது. எலும்புகள் பூவுலகில் சங்குகளாகி ஆழ்கடலில் பிறப்பெடுத்தன. அவை தேவார்ச்சனைக்கு பயன்பட்டன, சங்கு தீர்த்தம் பூசைக்கு உகந்ததாய், மகாவிஸ்னு லஷ்மி உறைகின்ற பொருளாய் செல்வம் செழிக்க ஐஸ்வர்யம் கிடைக்க பூஜிக்கும் அருள் பெற்றது. வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் தெய்வங்களுக்கு செய்யப்பட்டு பூஜித்ததும் சங்கு தீர்த்தம் எம்மை புனிதம் அடைய வைக்கிறது. இந்நீரை தீர்த்தமாக அருந்த நோய்கள் நீங்கி ஆனந்தம் பெறலாம். சங்கின் மகத்துவத்தை உணர்ந்து என்றும் பூஜித்து அதன்பலனை அடைவோம்.

    Next Story
    ×