search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆலய அமைப்பு
    X

    ஆலய அமைப்பு

    • இந்த ஆலயம் மொத்தம் 5 பிரகாரங்களை உள்ளடக்கியது. 5வது பிரகாரமாக அந்த ஊரின் தெரு அமைந்துள்ளது.
    • ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரது ஐம்பொன் திருமேனிகளையும் அங்கு காணலாம்.

    நாகலாபுரம் வேதநாராயணசுவாமி ஆலயம் மிக அழகான ஆலயமாகும். பக்தியோடு சிற்பங்களையும், பிரம்மாண்டமான பிரகாரங்களையும் ரசித்து பார்ப்பவர்களுக்கு இந்த ஆலயத்தில் மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது.

    15, 16ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    ஆனால் அதற்கு முன்பே இந்த பகுதியில் வேத நாராயணசுவாமி மிகச்சிறிய கருங்கல் கருவறையுடன் இருந்ததாக பழமையான நூல்களில் குறிப்புகள் உள்ளன.

    எனவே இதன் தோற்றத்தை கணக்கிட முடியாதபடி உள்ளது.

    கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் அரிகண்ட பெருமாள் நாயக்கர் என்பவர் ஏராளமான திருப்பணிகளை செய்து உள்ளார்.

    அதன் பிறகு பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு மன்னர்கள், சிற்றரசர்கள் இந்த ஆலயத்தில் திருப்பணியை செய்து உள்ளனர்.

    இதன் காரணமாக இந்த ஆலயம் அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒருமுழுமையான ஆலயமாக திகழ்கிறது.

    இந்த ஆலயம் மொத்தம் 5 பிரகாரங்களை உள்ளடக்கியது. 5வது பிரகாரமாக அந்த ஊரின் தெரு அமைந்துள்ளது.

    அங்கு சென்றால் நம்மை 5 நிலை ராஜகோபுரம் வரவேற்கிறது.

    அதன் வழியாக ஆலயத்துக்குள் நுழைந்தால் முதலில் அழகான நந்தவனத்தை காண முடியும்.

    அதன்பிறகு அடுத்தடுத்த பிரகாரங்களை பார்த்துக்கொண்டே ஆலயத்துக்குள் செல்லலாம்.

    கருவறையில் வேதநாராயணசுவாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    வழக்கமாக பெருமாளின் பாதம் அவருக்குரிய பீடத்தில் அமைந்திருக்கும்.

    ஆனால் இந்த தலத்தில் வேதங்களை மீட்க பெருமாள் மீன் அவதாரம் எடுத்தவர் என்பதால் அதை பிரதிபலிக்கும் வகையில் வேதநாராயண சுவாமி கால் பகுதி மீன் போன்ற அமைப்பில் காணப்படுகிறது.

    அவருக்கு இரு புறமும் ஸ்ரீதேவியும், பூமாதேவியும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.

    கருவறை முன்புள்ள மண்டபத்தில் ஆழ்வார் சிலைகளும், உற்சவர் சிலைகளும் அழகாக அணிவகுத்து காணப்படுகின்றன.

    ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரது ஐம்பொன் திருமேனிகளையும் அங்கு காணலாம்.

    அதையடுத்த பிரகாரத்தில் மிக பிரமாண்டமான மண்டபம் கட்டப்பட்டு உள்ளது.

    அந்த காலத்தில் அந்த மண்டபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கலாம்.

    தற்போது அந்த மண்டபங்கள் வெறுமனே உள்ளன.

    ஆனால் மிக சிறப்பாக பராமரிப்பதால் இந்த மண்டபங்கள் அழகாக காட்சி அளிக்கின்றன.

    இந்த மண்டப தூண்களில் கல்வெட்டுகளும், ஏராளமான சிற்பங்களும் காணப்படுகின்றன.

    சிற்பங்களை ஆய்வு செய்பவர்களுக்கு மிகப்பெரிய தகவல் தரும் சுரங்கமாக இந்த ஆலயம் திகழ்கிறது.

    இந்த பிரகாரத்தில் தாயார் வேதவல்லி தனி சன்னதியில் உள்ளார்.

    பொதுவாக வைணவ தலங்களில் மூலவர் சன்னதிக்கு அருகிலேயே தாயார் சன்னதி அமைந்திருக்கும்.

    இந்த தலத்தில் சற்று தொலைவில் சற்று வித்தியாசமாக பெருமாளை எதிர்திசையில் பார்த்தபடி தாயார் சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது.

    மீன் வடிவமெடுத்து கடலுக்குள் சென்ற பெருமாளை தாயார் தேடி வருவதாக ஐதீகம் என்பதால் இப்படி சன்னதி அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

    அதற்கு அடுத்த பிரகாரம் முழுமையான நந்தவனமாக காட்சி அளிக்கிறது.

    இந்த ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் பக்தர்கள் நிதானமாக பார்வையிட்டால் பல புதிய உண்மைகளை தெரிந்து கொண்டு வர முடியும்.

    Next Story
    ×