search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகாலயா இடைத்தேர்தல் - முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி
    X

    மேகாலயா இடைத்தேர்தல் - முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி

    மேகாலயா மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்வர் கான்ராட் சங்மா வெற்றி பெற்று முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்டார். #MeghalayaBypolls #ConradSangma
    ஷில்லாங்:

    மேகாலயா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் (21 தொகுதிகள்) வென்ற போதிலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, பா.ஜ.க. மற்றும் மாநில கட்சிகளின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைத்தது. மக்களவை முன்னாள் சபாநாயகர் பிஏ சங்மாவின் மகனும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா, கடந்த மார்ச் 6-ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.

    துரா மக்களவைத் தொகுதி எம்பியான கான்ராட், முதல்வராக பதவியேற்ற 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்காக அவரது சகோதரி அகதா சங்மா, தெற்கு துரா தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல் ராணிகோர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மார்ட்டினும் ராஜினாமா செய்திருந்தார். பின்னர் அவர் தேசிய மக்கள் கட்சியில் இணைந்தார்.

    இந்த இரண்டு தொகுதிகளிலும் கடந்த 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தெற்கு துரா தொகுதியில் முதல்வர் கான்ராட் சங்மா போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்லோட் மோமின், சுயேட்சை வேட்பாளர்கள் ஜான் லெஸ்லீ கே சங்மா,  கிறிஸ் காபூல் ஏ சங்மா ஆகியோர் போட்டியிட்டனர்.



    இதேபோல் ராணிகோர் தொகுதியில் தேசிய மக்கள் கட்சி சார்பில் மார்ட்டின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து யுடிபி கட்சி சார்பில் பியுஸ் மார்வீன், பிடிஎப் தலைவர் பிஎன் ஷியாம், காங்கிரஸ் சார்பில் ஜாக்கியுஷ் சங்மா ஆகியோர் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் இரண்டு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. துவக்கம்  முதலே முன்னிலை வகித்த முதல்வர் கான்ராட் சர்மா, 8000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில்  மொத்தம் 22200 வாக்குகள் பதிவானதாகவும், தேசிய மக்கள் கட்சி தலைவர் கான்ராட் சங்மா 13656 வாக்குகளும், எதிர்க்கட்சி வேட்பாளர் சார்லோட் 8421 வாக்குகள் பெற்றதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்த வெற்றியின்மூலம் 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் தேசிய மக்கள் கட்சியின் பலம் 20 ஆக உயர்ந்துள்ளது. ராணிகோர் தொகுதியில் மார்ட்டின் சுமார் 3500 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தார். எனவே, யுடிபி கட்சி வேட்பாளர் மார்வீன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  #MeghalayaBypolls #ConradSangma
    Next Story
    ×