search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  ஜெயலலிதா மரணம்: கவுதமியின் சந்தேகத்தின் பின்னால் சதி
  X

  ஜெயலலிதா மரணம்: கவுதமியின் சந்தேகத்தின் பின்னால் சதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கவுதமியின் சந்தேகத்தின் பின்னால் சதி இருப்பதாக அ.தி.மு.க. தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
  சென்னை:

  ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

  அதில், “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய ரகசியம் ஏன் வெளியிடப்படவில்லை? அவரை எதற்காக தனிமைப்படுத்தினார்கள்? அவரை கவனிக்கும் உரிமை யாருக்கு அளிக்கப்பட்டது? அந்த முடிவை செய்தது யார்? இதுபற்றிய அனைத்து விவரங்களையும் வெளியே கொண்டு வரவேண்டும்” என்று அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

  கவுதமியின் இந்த குற்றச்சாட்டுக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

  புரட்சித்தலைவி அம்மா 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்தது அப்பல்லோ டாக்டர்கள் மட்டுமல்ல, உலகப்புகழ் பெற்ற லண்டன் டாக்டரும், எய்ம்ஸ் டாக்டர்களும் இணைந்து சிகிச்சை அளித்துள்ளார்கள்.

  மருத்துவராக இருக்கிற ஒருவர் ஒரு நோயாளியின் குணம் அறிந்து சிகிச்சை அளிக்க கடமைப்பட்டுள்ளார். யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என்று கவுதமி கேள்வி கேட்கிறார். யாரையும் பார்ப்பதற்கு முதலில் ‘அம்மா’ அனுமதிக்க வேண்டும். இதை கவுதமி புரிந்து கொள்ள வேண்டும்.

  யார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றாலும் அவரது அனுமதியின்றி மற்றவர்கள் யாரும் பார்க்க முடியாது.

  அம்மா உடல்நிலை 4-ந்தேதி சீர்கெட்ட பிறகு லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே தனது டுவிட்டரில் விரிவாக எழுதி இருந்தார். அம்மாவுக்கு இப்படி ஒரு திடீர் ‘கார்டியாக் அரஸ்ட்’ வரும் என கருதவில்லை என்று தெளிவுபட கூறி இருக்கிறார்.

  கோடிக்கணக்கான மக்களின் அன்பை அபிமானத்தை பெற்ற நீங்கள், நாங்கள் அளித்த சிகிச்சையில் குணமாகி வீடு திரும்புவீர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை வீண் போனதால் எனக்கே பெரிய வேதனையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

  உலகத்தரத்தில் ஒரு வருக்கு சிகிச்சை அளிக்க என்னென்ன வாய்ப்பு உண்டோ அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிகிச்சை தந்ததாகவும், அதற் கான வசதிகள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருப்பது எனக்கு மனநிறைவை தந்தது.

  ஆனால் இப்போது உங்கள் உடல்நிலை சீர்கெட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் அளவுகடந்த துயரம் அடைந்துள்ளேன். எங்களால் எந்த அளவுக்கு முடிந்ததோ அத்தனை சிகிச்சை முறைகளையும் செய்தாகி விட்டது. இனி கடவுளின் பிரார்த்தனை தான். அதில் என்னுடைய பிரார்த்தனையையும் சேர்த்துக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.  நான் கவுதமியை கேட்கிறேன், நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்? இதுபோன்ற அத்துமீறலை நிறுத்திக் கொள்வது நல்லது. ஏற்கனவே கவுதமி, பிரதமரை ஒருமுறை சந்தித்து வந்துள்ளார். இதற்கு பின்னால் ஏதோ ஒரு சதி திட்டம் இருக்கிறதோ என நான் சந்தேகிக்கிறேன்.

  இந்த சதிக்கு சகோதரி கவுதமி விலைபோய் விட்டாரா? என்ற ஐயம் எழுகிறது. ஆகவே இது தேவையில்லாத பிரச்சனை. இதை யாரும் விவாதம் ஆக்க வேண்டாம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியதாவது:-

  புரட்சித்தலைவி அம்மா வேகமாக குணம் அடைந்து வீடு திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். இந்தியாவில் உள்ள அத்தனை தலைவர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து அம்மாவின் சிகிச்சை பற்றி கேட்டறிந்து சென்றனர்.

  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, மத்திய மந்திரிகள், மாநில முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் என அத்தனை பேரும் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டரை பார்த்து விசாரித்து வந்துள்ளனர்.

  அத்தனை பேரும் அம்மா நல்லா இருப்பதாகவும், விரைவில் வீட்டுக்கு வந்து விடுவார்கள் என்றும் பேட்டி கொடுத்தனர். அப்படியானால் அத்தனை பேரும் பொய் சொன்னார்கள் என்று கவுதமி சொல்கிறாரா?

  எதிர்பாராமல் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாக லண்டன் டாக்டர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறாரே? ஆஸ்பத்திரியில் தொற்று ஏற்படாமல் இருக்க அங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

  எனவே தவறான கருத்தை கவுதமி சொல்வது வருத்தமாக உள்ளது. எனவே கவுதமிக்கு சந்தேகம் வேண்டாம். அப்படி விளக்கம் வேண்டும் என்றால் டெல்லி சென்று அவர் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

  இவ்வாறு சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.

  இதேபோல செய்தி தொடர்பாளர் தீரன், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வளர்மதி ஆகியோரும் கவுதமியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×