என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேகத்தையொட்டி மின் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலை படத்தில் காணலாம்.
    X
    கும்பாபிஷேகத்தையொட்டி மின் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலை படத்தில் காணலாம்.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தல வரலாறு

    சமயபுரம் மாரியம்மன் கோவில் இதிகாச, புராண காலத்தில் உருவானதாக கூறப்பட்டாலும் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்டு இருக்கலாம் என வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
    திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது சமயபுரம் மாரியம்மன் கோவில். தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது என்ற பெருமைக்குரிய இக்கோவில் வருவாயில் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இங்கு வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து, உலக உயிரினங்களை காத்து அருள் பாலித்து வரும் அம்பாளின் அழகே தெய்வீகமானது. எட்டு கைகளுடனும், கழுத்தில் தலை மாலை அணிந்து சர்ப்பக்கொடியுடன், ஐந்து அசுரர்களின் தலைகளை தன் காலால் மிதித்து சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அழகை கண்டால் மனம் அமைதி அடையும், ஒருமைப்படும், மாசு அகலும்.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் இதிகாச, புராண காலத்தில் உருவானதாக கூறப்பட்டாலும் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பாக தோற்றுவிக்கப்பட்டு இருக்கலாம் என வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. சமயபுரம் மாரியம்மன் கோவிலின் மூல கோவிலான ஆதி மாரியம்மன் கோவில் விக்கிரமாதித்த மகாராஜா வழிபட்ட திருத்தலம் என்ற பெருமைக்குரியது என்றாலும் தற்போது உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்து உள்ளன.

    பல்லக்கில் வந்த அம்மன்

    கோவில் அமைந்துள்ள பகுதிக்கு கண்ணனூர், கண்ண புரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்ற வரலாற்று பெயர்களும் உண்டு. கோவிலில் உள்ள மாரியம்மன் உற்சவர் சிலை விஜயநகரத்து மன்னர்களால் வழிபாடு செய்யப்பட்டதாகும். விஜயநகர பேரரசிற்கு ஆபத்து ஏற்பட்டபோது உற்சவர் அம்மன் சிலையை பல்லக்கில் தூக்கி வந்தனராம். பல்லக்கை தூக்கி வந்தவர்கள் அந்த காலத்தில் வேம்பு மரங்கள் வளர்ந்த அடர்காடாக காட்சியளித்த சமயபுரத்தில் இறக்கி வைத்துவிட்டு உணவு சாப்பிட்டனர். உணவு உண்ட பின் பல்லக்கை தூக்க முற்பட்டபோது தூக்க முடியாமல் போனதால் அங்கேயே விட்டு விட்டு சென்றனராம். பின்னர் கி.பி. 1706 முதல் 1732 வரை திருச்சி பகுதியை ஆண்ட விஜயரெங்க சொக்கநாதர் காலத்தில் அம்மனுக்கு தனி கோவில் அமைத்து பிரதிஷ்டை செய்தார்கள். அதுவே நாம் இப்போது வழிபட்டு வரும் சமய புரம் மாரியம்மன் கோவில் என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

    இன்னொரு தகவல்

    வேப்ப மர காட்டில் உருவான கோவில் என்பதால் தான் இப்போதும் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தல விருட்சம் வேப்பமரமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜயநகர மன்னர் ஒருவர் இப்பகுதிக்கு படை எடுத்து வந்த போது அம்மனை வழிபட்டு போருக்கு சென்றார். அந்த போரில் அவருக்கு பெரும் வெற்றி கிடைத்தது. அம்மனை வழிபட்டதால் கிடைத்த வெற்றிக்கு நன்றிக்கடனாக அப்போது உருவாக்கப்பட்டதே சமயபுரம் மாரியம்மன் கோவில் என்றும் கூறப்படுகிறது.
    Next Story
    ×