search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கனம் கோர்ட்டார் அவர்களே படத்தில் 13 தோற்றங்களில் அசத்தினார், சத்யராஜ்
    X

    கனம் கோர்ட்டார் அவர்களே படத்தில் 13 தோற்றங்களில் அசத்தினார், சத்யராஜ்

    டைரக்டர் மணிவண்ணன் தயாரித்து இயக்கிய "கனம் கோர்ட்டார் அவர்களே'' படத்தில், சத்யராஜ் 13 விதமான தோற்றங்களில் நடித்தார்.
     
    டைரக்டர் மணிவண்ணன் தயாரித்து இயக்கிய "கனம் கோர்ட்டார் அவர்களே'' படத்தில், சத்யராஜ் 13 விதமான தோற்றங்களில் நடித்தார்.

    இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சத்யராஜ் கூறியதாவது:-

    "நானும், மணிவண்ணனும் நண்பர்கள். எங்கள் வெற்றி தொடர்ந்த நேரத்தில், மணிவண்ணனுக்கு தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. மணிவண்ணன் டைரக்ஷனில் நான் நடித்த படங்கள் அத்தனையும் வெற்றி என்பதால், தான் தயாரிப்பாளராக மாறி அந்தப் படத்திலும் என்னையே கதாநாயகனாக நடிக்க வைக்க விரும்பினார்.

    முதன் முதலாக தயாரிப்பாளர் ஆவதால், ஒரு அலுவலக கட்டிடத்தை விலைக்கு வாங்கி, அதை கலைஞர் கையால் திறக்க வைத்தார். இப்படி படக் கம்பெனி அலுவலகத்தை விலைக்கு வாங்கி படமெடுத்தவர் என்ற முறையில், அப்போதே மணிவண்ணன் பரபரப்பாக பேசப்பட்டார்.

    சினிமாவில் என்னை வைத்து "முதல் வசந்தம்'', "பாலைவன ரோஜாக்கள்'', "விடிஞ்சா கல்யாணம்'', "ஜல்லிக்கட்டு'', "சின்னத்தம்பி பெரியதம்பி'' உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். எல்லாமே நன்றாக ஓடிய படங்கள். இத்தனை `ஹிட்'டுக்குப் பிறகு, சொந்தப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்புதானே.

    படத்துக்கு அவர் வைத்த "கனம் கோர்ட்டார் அவர்களே'' தலைப்பும் வித்தியாசமாகவே இருந்தது. வேலை வெட்டி இல்லாமல் "கேசுக்கு'' திண்டாடும் ஒரு வக்கீலின் வாழ்க்கைப் பின்னணி தான் கதை.

    இதில் கோர்ட்டில் ஜட்ஜ் தொடங்கி, டவாலி வரை நான்தான் நடித்தேன். அதாவது ஜட்ஜ், எதிர்க்கட்சி வக்கீல், அரசு வக்கீல், கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர், கொலையை பார்த்த சாட்சிகள் பால்காரர், ஈட்டிக்காரர், அய்யர், கேசை நடத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர், கோர்ட் டவாலி, முப்படைத் தளபதி உள்பட மொத்தம் 13 வேடம் எனக்கு. இந்தப்படம் வளரும்போதே, என்னுடைய விதவிதமான தோற்றங்கள் பத்திரிகைகளில் வெளியாகி, பரபரப்பு ஏற்படுத்தியது.

    நான் நடிக்க வரும் முன், என்னை முதன் முதலாக படமெடுத்த `ஸ்டில்ஸ்' ரவிதான் இந்தப் படத்துக்கான பல்வேறு தோற்றங்களில் என்னை படமெடுத்தார். இந்த ஸ்டில்களை மற்ற படக் கம்பெனியிலும் கேட்டு வாங்கி பார்த்து ரசித்தார்கள்.

    இப்படி வித்தியாசமான கேரக்டர்கள் என்றில்லை! படத்தின் செலவு விஷயத்திலும் மணிவண்ணன் குறை வைக்கவில்லை. படத்தில் `ஹெலிகாப்டர்', `கிளைடர்' விமானம் முதலியவை இடம் பெறுகிற மாதிரியும் காட்சிகள் அமைத்திருந்தார்.

    இத்தனை இருந்தும் படம் எதிர்பார்த்த மாதிரி ஓடவில்லை. படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கிற மாதிரி, தோல்விக்கு சில காரணங்களாவது இருக்கும். அப்படி தோல்விக்கு ஒரு காரணமாக நான் நினைப்பது, படத்தில் நான் சோடாபுட்டி கண்ணாடி அணிந்து, தலை வழித்து சீவிய தோற்றத்தில் நடித்ததை ரசிகர்கள் அவ்வளவாக விரும்பவில்லை என்பதே.

    என் கதாநாயகிகள் பற்றி சொல்ல வேண்டும். நான் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியபோது என் ஜோடியாக நடிக்க உயரமான நடிகைகள் தேவைப்பட்டார்கள். அப்போது அம்பிகா - ராதா சகோதரிகள் கதாநாயகிகளாக நடித்து கொண்டிருந்தார்கள். இருவருமே நல்ல உயரம் என்பதால் எனக்கு கதாநாயகிகள் பிரச்சினை இல்லாமல் இருந்தது. பிறகு, உயரமான அமலா வந்தார். பிறகு பானுப்பிரியா. அவரும் நல்ல உயரம். அதன் பின்னர் சுகன்யா, கவுதமி, ஷோபனா இப்படி உயரமான கதாநாயகிகள் தொடர்ந்து எனக்கு கிடைத்துக் கொண்டே இருந்தார்கள். இப்போதும் நமீதா மாதிரி உயரமான நடிகைகள் எனக்கு ஜோடியாக கிடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆபாவாணனின் "தாய் நாடு'' படத்தில்தான் ராதிகா எனக்கு ஜோடியானார். அதற்கு முன் பல படங்களில் ராதிகா கதாநாயகியாக நடித்திருக்க, அதில் நான் வில்லனாக இருந்திருப்பேன். ரஜினியுடன் ராதிகா ஜோடி சேர்ந்த "மூன்று முகம்'', எம்.பாஸ்கரின் "உறங்காத நினைவுகள்'' மணிரத்னத்தின் "பகல் நிலவு'' என ராதிகா கதாநாயகியாக தொடர, நான் வில்லனாக நீடித்துக் கொண்டிருந்தேன்.

    வில்லனாக நடித்தபோதே ராதிகா எனக்கு நல்ல சிநேகிதி. கதாநாயகன் ஆன பிறகோ நட்பில் இன்னும் இறுக்கம். ராதிகா, ஸ்ரீபிரியா இருக்கிற இடத்தில் நானும் இருந்தால் அந்த இடத்தின் கலகலப்பே தனிதான். காமெடிக் கலாட்டா கச்சேரியே நடக்கும்.

    "தாய் நாடு'' படத்தில் தாடி கெட்டப்பில் என் நடை, உடை, பாவனை எல்லாமே எம்.ஜி.ஆர். ஸ்டைலில் இருந்தது. எம்.ஜி.ஆர். மாதிரி நான் வேக வேகமாக மாடிப்படியில் இருந்து இறங்கி வந்ததை ரசிகர்கள் ரசித்தார்கள். எம்.ஜி.ஆர். ஸ்டைலில் இந்தப் படத்துக்காக நான் ஆடிப்பாடிய ஒரு பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

    இப்படி படங்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு சின்ன தொய்வு ஏற்பட்டது. அப்போது பட உலகில் ஒரு புயல் மாதிரி என்ட்ரி ஆனார், டைரக்டர் பி.வாசு. அவர் டைரக்டர் சந்தான பாரதியுடன் சேர்ந்து "பன்னீர் புஷ்பங்கள்'' என்ற படத்தை இயக்கி அதன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதே கூட்டணி "மெல்லப் பேசுங்கள்'' என்ற படத்தையும் இயக்கியது.

    இந்த இரட்டையர்களில் சந்தான பாரதி, பாரதியாக பெயரை சுருக்கிக் கொள்ள, `பாரதி - வாசு' என்ற பெயரில் 2 படங்களை இயக்கினார்கள். அதன் பிறகு இவர்கள் தனித்து வெளிப்பட விரும்பி, வாசு தனியாக `பி.வாசு' என்ற பெயரில் பிரபு - ரூபினி நடித்த `என் தங்கச்சி படிச்சவ' படத்தை இயக்கினார். படம் பெரிய வெற்றி.
    Next Story
    ×