search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சத்யராஜ் சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆனார்
    X

    சத்யராஜ் சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆனார்

    நாடகத்தில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார் சத்யராஜ். ஆனால் கிடைத்ததோ தயாரிப்புத் துறையில் நிர்வாகம் பார்க்கும் வாய்ப்பு!
    நாடகத்தில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார் சத்யராஜ். ஆனால் கிடைத்ததோ தயாரிப்புத் துறையில் நிர்வாகம் பார்க்கும் வாய்ப்பு!

    இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

    "கோமல் சுவாமிநாதன் இயக்கிய "ஆட்சி மாற்றம்'', "சுல்தான் ஏகாதசி'', "கோடுகள் இல்லாத கோலங்கள்'' என்ற மூன்று நாடகங்களிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த மூன்று நாடகத்திலும் நடித்ததற்காக எனக்கு நாடகம் ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் 30 ரூபாய் தந்தார்கள்.

    இந்த 30 ரூபாயில் 10 ரூபாய்க்கு சுவீட் வாங்கினேன். என்னை நாடகத்தில் சேர்த்துவிட்ட நடிகர் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போனேன். நடிப்புக்கு கிடைத்த என் முதல் சம்பளத்தில் அவர் வீட்டுக்கு சுவீட் வாங்கிப்போக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படிச் செய்தேன்.

    நான் எம்.ஜி.ஆர். ரசிகன் அல்லவா! எம்.ஜி.ஆர். கொடுத்து கொடுத்து சிவந்த கரம் கொண்டவர். அதனால் 5 ரூபாயை, தர்மத்துக்கு கொடுத்தேன். மீதி பணத்தில் நண்பர்களுடன் சினிமாவுக்கு போனேன்.

    நான் சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு போன காலகட்டத்தில் சூர்யா, கார்த்தி இருவருமே குழந்தைகள். இந்தக் குழந்தைகளும் வளர்ந்து இன்றைக்கு நடிக்க வந்துவிட்டார்கள்! கார்த்தி நடிக்க வரும் முன்பாக ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். முதல் மாத சம்பளத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு `சுவீட்' வாங்கிக்கொண்டு வந்தார்! அப்போதுதான் என் முதல் சம்பளத்தில் நான் அவர்கள் வீட்டுக்கு `சுவீட்'வாங்கிப்போனதை சிவகுமார் அண்ணன் தனது பிள்ளைகளிடம் சொல்லியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

    நாடகத்தில் அவ்வப்போது 10 ரூபாய் சம்பளம் வந்து கொண்டிருந்தது. பணம் குறைவாக இருக்கிறதே என்று நான் கவலைப்படவில்லை. அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் கொடுத்த பணம்தான் இருக்கிறதே. அதை முழுவதுமாக செலவழிக்க நாளாகும். அந்த அளவுக்கு, சிக்கனமாகவே என் செலவுப் பட்டியலை வைத்துக்கொண்டேன்.

    விவேகானந்தா பிக்சர்ஸ் என்ற கம்பெனி சார்பில் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'' போன்ற படங்களை தயாரித்த திருப்பூர் மணி, அண்ணன் மாதம்பட்டி சிவகுமாரின் நண்பர். அவரது மைத்துனர் கே.பாலு, அந்த நாட்களில் என் நண்பராகி விட்டார். பின்னாளில் இவர் பிரபு நடிக்க மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த "சின்னத்தம்பி'' படத்தை தயாரித்தார். பாலு என்னிடம் சினிமா வாய்ப்பு வரும்போது நிச்சயம் நடிக்க வைப்பதாக சொன்னார்.

    அப்போது நான் சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் மாதம் 85 ரூபாய் வாடகையில் ஒரு அறையில் இருந்தேன். என் சைசுக்குதான் அந்த அறை இருக்கும். காலை முழுசாக நீட்டி படுக்க முடியாத அளவுக்கு இருந்தது அந்த அறை.

    ஒருநாள் என்னைப் பார்ப்பதற்காக என் தங்கை கல்பனாவும், தங்கை கணவர் அர்ஜ×ன் மன்றாடியாரும் அங்கே வந்துவிட்டார்கள். என் அறையை பார்த்த இருவருமே கண் கலங்கிவிட்டார்கள்.

    அவர்கள் அப்படி கலங்கியதற்கு காரணம் இருக்கிறது. கோயமுத்தூரில் உள்ள எங்கள் வீடு 5 கிரவுண்டு கொண்டது. ஊரில் இருந்த செல்வாக்குக்கு தொழில் துறையில் ஈடுபடலாம். உறவு முறையில் யாரைக் கேட்டாலும் தொழில் தொடங்க உதவுவார்கள். இப்படி செல்வமும் செல்வாக்குமாய் இருக்க வேண்டியவன் இப்படி எங்கோ ஆறு அடி ரூமுக்குள் அரைகுறையாக முடங்கிக் கிடக்கவேண்டுமா என்ற கவலை அவர்களுக்கு.

    என் சித்தி இந்திராணி (அம்மாவின் தங்கை) சித்தப்பா துரைராஜ். ஊரில் சித்தி குடும்பமும் எங்களுடன்தான் இருந்தது. அம்மா மாதிரியே என் மேல் அன்பு காட்டி வளர்த்தவர் சித்தி. நான் சென்னையில் சரியான இருப்பிடம்கூட இல்லாமல் சிரமப்படுவதாக சித்தப்பாவுக்கு சொல்லப்பட்டதும், அவர் உடனே சென்னைக்கு வந்து விட்டார். "கோவைக்கு வா! உனக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்கிறேன்'' என்று அழைத்தார். நான்தான் சித்தப்பாவிடம் பிடிவாதமாக, "நிச்சயம் சினிமாவில் எனக்கு வாய்ப்பு வரும். அதுவரை முயற்சி செய்கிறேன்'' என்று சொல்லிவிட்டேன்.

    நாடகத்திலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் மணியன் நடத்திய பத்திரிகையில் சிறுகதைக்கு முக ஓவியப்போட்டி அறிவித்தார்கள். ஓரளவு நல்ல முகவெட்டு கொண்டவர்களை மாடலாக ஏற்றுக்கொண்டு அந்த முகங்களை தொடர் கதைக்குள் கொண்டு வருவார்கள். இப்படி பத்திரிகை மூலம் பிரபலமாகும் முகம், நாளடைவில் சினிமா வாய்ப்புக்கும் உரியதாகி விடும்.

    சரி, இதாவது நடக்கட்டும் என்று என் மாதிரியே நல்ல வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த நண்பர் ராஜ்மதனும் நானும் அந்த `ஓவிய முகத் தேர்வுக்கு போனோம். (இந்த ராஜ்மதன் ரஜினிக்கும் மிகச்சிறந்த நண்பர்) ஏராளமான பேர் திரண்டு வந்திருந்த இந்த போட்டியில் நாங்கள் முதல் ரவுண்டிலேயே ஓரம் கட்டப்பட்டோம்.

    வெறுத்துப்போயிற்று எனக்கு. ஒரு பத்திரிகையில் படம் வரையக்கூட உதவாத நம் முகத்தை வைத்து சினிமாவில் எப்படி நடிக்கப்போகிறோம் என்றுகூட தோன்றியது. என்றாலும் சினிமா முயற்சியில் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை. முயன்று பார்ப்போம். ஆனது ஆகட்டும் என்ற மனநிலையில் சினிமா வாய்ப்புக்கு முயன்று கொண்டிருந்தேன்.

    திருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் பட நிறுவனம் தொடங்கி சிவகுமாரை கதாநாயகனாக்கி "கண்ணன் ஒரு கைக்குழந்தை'' படம் எடுக்க இருந்தார். படத்தில் அவருக்கு ஜோடி சுமித்ரா. சுருளிராஜன் - மனோரமாவும் படத்தில் இருந்தார்கள்.

    இந்த படத்துக்கு என்னை புரொடக்ஷன் வேலை பார்க்கச் சொன்னார், திருப்பூர் மணி. சினிமாவுக்கும் எனக்கும் அதுவரை இருந்த இடைவெளியை இந்த வேலை குறைக்கும் என்ற நம்பிக்கையில் வேலையை ஒப்புக்கொண்டேன்.

    இந்த சமயத்தில் பிரபல கேமிரா மேனாக இருந்த என்.கே.விஸ்வநாதனிடம் கே.பாலு உதவியாளராகச் சேர்ந்தார். பாலு மூலம் எனக்கு என்.கே.விஸ்வநாதன் சாரின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகம், பிறகு நட்பாகியது. அவரிடம், "நீங்க ஒர்க் பண்ற படங்களில் ஏதாவது ரோல் இருந்தா சொல்லுங்க'' என்று கேட்டுக்கொண்டேன். `சரி' என்றவர், "எதற்கும் உங்களை பல கோணங்களில் படம் எடுத்து போட்டோ ஆல்பம் ரெடி செய்து கொள்ளுங்கள். டைரக்டர் யாராவது அழைக்கும்போது உங்களை வெளிப்படுத்த இந்த ஆல்பம் உதவும்'' என்றார்.

    பிரபல கேமிராமேன் இப்படி சொன்னால் போதாதா? உடனே "ஸ்டில்ஸ்'' ரவியிடம் விஷயத்தை சொல்லி, படங்கள் எடுத்தேன். அவர் போட்டுக்கொடுத்த படங்களை பார்த்ததும் நொந்துபோனேன். புகைப்பட கோணத்தில் என் படம் படுகேவலமாக இருந்தது. இந்த படங்களை சினிமா கம்பெனியில் கொண்டு போய் காட்டினால் கிடைக்கிற வாய்ப்பும் கிடைக்காது என்பது தெளிவாக புரிந்தது. அதனால் அந்தப் படங்களை தூர எறிந்துவிட்டு, பட சான்ஸ் தேடுவதை தொடர்ந்தேன். ஒருவேளை என் உயரம், அதற்கான பர்சனாலிட்டியை பார்த்துகூட ஒரு வாய்ப்பு வரலாம். போட்டோவைக் கொடுத்து, அதை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்!

    டைரக்டர் டி.என்.பாலு அப்போது "சட்டம் என் கையில்'' என்ற படத்தை இயக்கினார். கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம். அந்த படத்தில் ஒரு சின்ன ரோல் இருப்பதாக கேமராமேன் என்.கே.விஸ்வநாதன் சார் என்னை அழைத்துப் போனார்.

    அப்போது ஏவி.எம். ஐந்தாவது புளோரில் "சட்டம் என் கையில்'' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கமல் - ஸ்ரீபிரியா நடிக்க ஒரு பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தார், டைரக்டர்.

    பாடல் காட்சியை முடித்து விட்டு என்னை அழைத்தார், டி.என்.பாலு. அப்போதுதான் கமலஹாசனை முதன் முதலாக நேரில் பார்த்தேன். "இவ்வளவு அழகாய் இருக்கிறாரே. இவரெல்லாம் நடிக்கும்போது நாமும் ஊரில் இருந்து நடிக்க வந்திருக்கிறோமே!'' என்று எனக்குத் தோன்றியது.

    என்னைப் பார்த்த டைரக்டர், போட்டோ எடுத்துப் பார்க்கவில்லை (பார்த்திருந்தால் அவ்வளவுதான்) என்னிடம், "கார் ஓட்டத்தெரியுமா?'' என்று கேட்டார். ஊரில் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததால் "தெரியும் சார்'' என்றேன்.

    அப்போதே மனசுக்குள் ஒரு பயம். "நடிக்கத் தெரியுமா?'' என்று கேட்காமல், "கார் ஓட்டத் தெரியுமா?'' என்று கேட்கிறாரே, என்ன அர்த்தம்? ஒருவேளை படக்கம்பெனிகளுக்கு கார் ஓட்டும் டிரைவராக தேர்வு செய்யப் போகிறாரோ என்னவோ என்று உள் மனதில் உதறல் ஆரம்பித்தது.

    ஆனால் டைரக்டர் அடுத்த கேள்வியாக "பைட் (சண்டை) தெரியுமா?'' என்று கேட்டு உடனடியாக என் டென்ஷனை குறைத்தார். உடனே நான் "நான் `கராத்தே'யில் பிளாக் பெல்ட் சார்'' என்றேன்.

    உண்மையில் புரூஸ்லி நடித்து அப்போது வெளிவந்திருந்த "எண்டர் தி டிராகன்'' படத்தை பார்த்த பிறகு, எல்லாருக்கும் வருகிற `கராத்தே' ஆசை எனக்கும் வந்தது. அதனால் ஒரு ஆறு மாத காலம் கராத்தே கற்றுக்கொண்டேன். ஆனால் `பெல்ட்' எல்லாம் வாங்கவில்லை. அந்த வகையில் டைரக்டரிடம் சொன்னது மட்டும் பொய்.

    "டயலாக் பேசுவியா?'' டைரக்டரின் அடுத்த கேள்வி.

    "பேசுவேன் சார்!''

    "சின்னதாய் ஒரு வில்லன் வேஷம் இருக்கு. நாளைக்கு காலையில் வந்துரு'' என்றார், டைரக்டர்.

    நாளை முதல் சினிமாவில் நடிகனாகப் போகும் சந்தோஷத்தில் அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
    Next Story
    ×