search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்து புகழ் பெற்ற வெண்ணிற ஆடை நிர்மலா
    X

    எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்து புகழ் பெற்ற வெண்ணிற ஆடை நிர்மலா

    வெண்ணிற ஆடை மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமான நிர்மலா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருடன் இணைந்து நடித்து புகழ் பெற்றார்.
    உண்மையில், "வெண்ணிற ஆடை''யில் நடித்தபின் மேற்கொண்டு நடிக்க நிர்மலா விரும்பவில்லை.

    இதற்கு இரண்டு காரணங்கள். முதல் காரணம், தனியாக 10-ம் வகுப்பு பரீட்சை எழுதி பாஸ் செய்து விட்டு, கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பினார். இரண்டாவது காரணம், "வெண்ணிற ஆடை''யில் தன்னுடைய நடிப்பு நிர்மலாவுக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, பட உலகையே விட்டு ஒதுங்கிவிட எண்ணினார்.

    இந்த சமயத்தில் பிரபல மலையாள டைரக்டர் குஞ்சாகோ, தான் எடுக்கும் "காட்டு துளசி'' என்ற படத்தில் நிர்மலாவை நடிக்க வைக்க விரும்பினார்.

    ஆனால் நிர்மலா நடிக்க மறுத்தார். "என் முதல் படத்திலேயே என் நடிப்பு எனக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, எனக்கு நடிக்க விருப்பம் இல்லை'' என்று கூறினார்.

    ஆனால் குஞ்சாகோ விடுவதாக இல்லை. "உங்களிடம் மறைந்திருக்கும் நடிப்புத் திறமையை வெளியே கொண்டுவர என்னால் முடியும். `காட்டுத்துளசி', உங்களுக்கு ஏற்ற அருமையான கதை. இதில் நடித்தால், உங்களுக்கு பெரும் புகழ் கிடைப்பது உறுதி'' என்று கூறினார்.

    அவருடைய வற்புறுத்தல் காரணமாக, "காட்டுத்துளசி''யில் நிர்மலா நடித்தார்.

    அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மலையாளப்பட உலகில் நிர்மலா பெரும் புகழ் பெற்றார். நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்தன.

    இதனால், மேற்கொண்டு படிக்கும் எண்ணத்தை கைவிட்டு மலையாளப் படங்களில் நடிக்கலானார்.

    இதன்பின் 1968-ம் ஆண்டு, சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்த "லட்சுமி கல்யாணம்'' படத்தில் நடிக்க, நிர்மலாவுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று, நிர்மலா நடித்தார்.

    எம்.ஜி.ஆர். நடித்த "ரகசிய போலீஸ் 115'' என்ற படத்தில், எம்.ஜி.ஆரைக் காதலிக்கும் இளம் பெண்ணாக நிர்மலா நடித்தார். எம்.ஜி.ஆருடன் சேர்ந்து "கண்ணில் தெரிகின்ற வானம், கையில் வராதோ'' என்று டூயட் பாடும் காட்சி சிறப்பாக அமைந்தது.

    தொடர்ந்து, "பூவா தலையா'', "மன்னிப்பு'', "வைராக்கியம்'', "வீட்டுக்கு வீடு'', "அன்புக்கு ஒரு அண்ணன்'', "சுடரும் சூறாவளியும்'', "நீதிதேவன்'', "தங்கச்சுரங்கம்'', "எங்கமாமா'', "தங்கைக்காக'', "அன்பு சகோதரர்கள்'', "வெகுளிப்பெண்'', "இன்றுபோல் என்றும் வாழ்க'', "இதயக்கனி'' உள்பட பல படங்களில் நடித்தார்.

    1972-ல் இந்தியில் "தோரகா'' என்ற படம் வெளிவந்தது. துணிச்சலான கதை அமைப்பைக் கொண்ட "புதிய அலை'' படம்.

    இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற்ற இந்தப்படத்தை, "அவள்'' என்ற பெயரில் தமிழில் தயாரித்தனர். கதாநாயகியாக நிர்மலாவும், கதாநாயகனாக சசிகுமாரும், வில்லனாக ஸ்ரீகாந்த்தும் நடித்தனர்.

    இந்தப் படத்தில் நிர்மலா பணக்கார வீட்டுப்பெண். அவரை சசிகுமார் காதலித்து மணப்பார். சசிகுமாரின் நண்பரான ஸ்ரீகாந்த், நிர்மலா மீது மோகம் கொள்வார்.

    ஒரு விருந்தில், எல்லோரும் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பார்கள். அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, நிர்மலாவை ஸ்ரீகாந்த் கெடுத்துவிடுவார். விடிந்த பிறகுதான் நிர்மலாவுக்கு உண்மை தெரியும்.

    இந்த படம் பரபரப்பாக ஓடியது. எனினும் இத்தகைய கதையை படமாக்கலாமா என்று பட்டிமன்றமே நடந்தது. "படம் ஆபாசம்'' என்று சிலர் கூறினார்கள். "குடிப்பழக்கத்தின் தீமையை, இப்படம் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது'' என்று வேறு சிலர் வாதம் செய்தனர்.

    1974-ம் ஆண்டு "அவளுக்கு நிகர் அவளே'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார், நிர்மலா. இதில் மூன்று வேடங்களில் நடித்தார்.

    இப்படத்தின் கதாநாயகன் ரவிச்சந்திரன். வசனம் எழுதி, டைரக்ட் செய்தவர் மதுரை திருமாறன்.

    200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்த நிர்மலா, ஏராளமான நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருதும், "நாட்டிய திலகம்'' என்ற பட்டமும் பெற்றவர்.

    "ஆடிவரும் தேனே'', "கற்பகம்'', "கல்கி'' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நிர்மலா நடித்துள்ளார்.

    தன்னுடைய கலை உலக அனுபவங்கள் பற்றி நிர்மலா கூறியதாவது:-

    "எப்படி நடிக்க வேண்டும் என்பதை சிவாஜி சாரிடம் கற்றுக்கொண்டேன்.

    பிறருக்கு உதவ வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் குணம், என்னை வெகுவாகக் கவர்ந்தது. முடிந்தவரை உதவவேண்டும் என்ற எண்ணத்தை என்னிடம் உருவாக்கியது.

    சினிமாவில் நடிப்பதை விட தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, தொலைக்காட்சி தொடர்கள் எனக்கு ஒத்து வரவில்லை. தொடர்ந்து சீரியல்களில் நடிக்க நான் ஆர்வம் காட்டவில்லை.''

    இவ்வாறு நிர்மலா கூறினார்.

    Next Story
    ×