search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வெகுமதி அருளும் கோமதி
    X

    வெகுமதி அருளும் கோமதி

    • புற்றுமண் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் பிரசாத மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர்.
    • நாகதோஷம் உள்ளவர்கள் புற்று மீது மஞ்சள் தூவி வேண்டிக் கொள்கிறார்கள்.

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் "அரியும், சிவனும் ஒன்று" என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் ஆடித்தபசு திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக கோமதி அம்மன் சன்னதி முன்புள்ள தங்ககொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, துவக்கப்படும்...

    கொடிமரத்தில் தர்ப்பை புல், பட்டுத்துணி சுற்றப்பட்டு, மஞ்சள், சந்தனம், பால், இளநீர் போன்ற பூஜைப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை பாடி சிறப்பு தீபாராதனையான "சோடச தீபாராதனை'யுடன் தத்துவார்த்தமாக விழா சிறப்பாக ஆரம்பிக்கப்படும்...

    பார்வதி தேவியின் தவத்தின் பொருட்டும்; சங்கன், பதுமன் ஆகிய நாகங்களுக்கும் நமக்கும் சிவன் வேறு, அரி வேறல்ல என்பதை உணர்த்தும் பொருட்டும் சிவபெருமான் சங்கர நாராயணராகக் காட்சி தந்த தலம் சங்கரன் கோவில்!

    சிவபெருமான் ஒரு பாதி சிவனாகவும் மறுபாதி நாராயணனாகவும் காட்சி தந்த அந்த அரிய நிகழ்ச்சி, ஆடி மாதத்தில் ஆடித்தபசு விழாவாக சங்கரன்கோவில் தலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    தனது வாமபாகத்தை தன் சகோதரர் நாராயணனுக்காக தியாகம் செய்த அன்னை நாராயணி அன்னையரின் மங்கலங்களை காத்தருளுகிறாள்.

    ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே

    சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே

    தபஸ் என்றால் தவம் அல்லது காட்சி எனப்பொருள்படும்.

    அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி ஒற்றைக்காலில் தபசு இருந்து பெற்ற நாளே ஆடித்தபசு திருநாள்...

    சம்ஸாரமாகிற வியாதியிலிருந்தும் ரோக உபாதைகளிலிருந்தும் காக்கக் கூடியவள் ஸ்ரீ கோமதி அன்னை.

    சங்கரநாராயணராக காட்சி கொடுத்த அரிய நிகழ்ச்சி சங்கரன்கோவிலில் ஆண்டுதோறும் "ஆடித்தபசு' திருவிழாவாக தொடர்ந்து 12 நாட்கள் வரைகொண்டாடப்படுகிறது...

    அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளி தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருந்து சங்கரநாராயணர் காட்சி பெறுகிறாள் அன்னை !.

    சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார்.

    ஆடி மாதத்தில்தான் அன்னை பார்வதி தவம் செய்து சிவப்பரம்பொருளை மீண்டும் அடைந்ததை ஆடித்தபசு என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது...

    சங்கரனும் நாராயணரும் ஒன்று என்று காட்டும் தலத்தில், தபசு இருந்து பலன் அடைந்தவள் அம்பிகை.

    அம்பிகையின் தவம் பலித்ததனால், தங்கள் பிரார்த்தனை நிறைவேற இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள்.

    அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபத்திற்கு வந்து சேரும் நிகழ்ச்சி

    கோமத்யம்பா ஸமேதம் ஹரிஹர வபுஷம் சங்கரேசம் நமாமி

    சங்கரலிங்கசுவாமி ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி

    யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பானவை..

    சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடையுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.

    திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி , லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம்!!!. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.

    காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம்... மற்ற நேரங்களில் விபூதி பிரசாதம் கிடைக்கிறது...

    பூஜையின்போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள்.

    சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர்.

    திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார்.

    அபிஷேகம் கிடையாது.

    ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.

    சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக, பூஜை நடக்கும்.

    ஆடித்தபசு விழாவன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் புறப்பாடாகிறார்.

    சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர்.

    சங்கரன் கோவிலில் சித்திரை , ஐப்பசி மாதப் பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்து துவங்கும் புதிய வருடத்தில் உணவிற்கு பஞ்சமில்லாத நிலை இருக்க வேண்டும் என்பதற்காக சித்திரையிலும், ஐப்பசி புண்ணிய கால துவக்கம் என்பதால் மாதத்தின் முதல் நாளிலும் அன்ன அபிஷேகத்தை செய்கிறார்கள்.

    பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பதுபோல, கோயிலின் வடக்கு பிரகாரத்தில் சொர்க்கவாசலில் மகாவிஷ்ணு, பல்லக்கில் அனந்த சயனத்தில் எழுந்தருளி, ரதவீதி சுற்றி வருவார். அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

    புற்றுமண் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் பிரசாத மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர்.

    வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக்கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

    சிவன் சன்னதி பிரகாரத்தில் வன்மீகநாதர் - புற்று வடிவில் அமைந்த சன்னதியில் சிவன், சுயரூபத்துடன் காட்சி தருகிறார். தலைக்கு மேலே குடை பிடித்தபடி இருக்கும் நாகத்தின் மீது இவர் அமர்ந்திருப்பது அபூர்வ அமைப்பு. புற்றுக்குள் (வன்மீகம் என்றால் புற்று) இருப்பவர்.

    நாகதோஷம் உள்ளவர்கள் புற்று மீது மஞ்சள் தூவி வேண்டிக் கொள்கிறார்கள். பஞ்ச நாகச்சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்கிறார்கள்.

    சிவன் சன்னதி கருவறை சுற்றுச்சுவர் - பின்புறத்தில் "யோக நரசிம்மர்' வேறெங்கும் காணப்படாத விசேஷமாக அருள்கிறார்.

    பல் வலி உள்ளவர்கள் யோக நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

    "சர்ப்ப விநாயகர்' கையில் நாகத்துடன் காட்சி தருகிறார். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் ஞாயிறு ராகு காலத்தில், பாலபிஷேகம் செய்து, பால் பாயசம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தைகள், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் வேண்டிக்கொள்கின்றனர்.

    பெரும்பாலான முருக தலங்களில் கந்தசஷ்டியின்போது, சூரசம்ஹாரத்திற்கு ஒரு முகம் கொண்ட சுப்பிரமணியராக மட்டுமே முருகன் செல்வார்.

    இங்கு சூரசம்ஹாரத்தின்போது முருகன், விஸ்வரூபம் எடுத்ததன் அடிப்படையில் ஆறுமுகங்களுடன் சண்முகராகச் செல்கிறாராம் முருகப்பெருமான்!

    மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

    Next Story
    ×