என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.

    இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'

    இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மேஹா ஹிட் ஆனது.

    மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.

    கடந்த ஜனவரி 30 முதல் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இத்திரைப்படம் நெட்பிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

    இதற்கிடையே இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான "துரந்தர்: தி ரிவெஞ்ச்" (Dhurandhar: The Revenge) திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்றது.

    இந்நிலையில் இந்த படத்தின் நீளம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. முதல் பாகம் 3.30 மணி நேரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், இரண்டாம் பாகம் 4 மணி நேரம் ஓடக்கூடிய படமாக உள்ளது.

    சென்சாருக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இப்படத்தின் நீளம் 3.55 மணி நேரம் ஓடக்கூடியதாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இது உறுதி செய்யப்பட்டால் துரந்தர்: தி ரிவெஞ்ச் இதுவரை வெளியான மிக நீளமான இந்தி படங்களில் ஒன்றாக மாறும்.  இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதேபோல கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் மார்ச் 19 வெளியாக உள்ள டாக்சிக் திரைப்படத்தின் நீளம் 3 மணிநேரம் 15 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது.

    கேஜிஎப் 2 படத்திற்கு பிறகு யாஷ் நடிக்கும் படம் இது என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. துரந்தர் - டாக்சிக் ஆகிய இந்த இரண்டு படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

    ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பவனுதாயி என்கிற பெயரில் தாய் கிழவியாக ஊரில் வலம் வருபவர் ராதிகா. அங்குள்ளவர்களுக்கு வட்டிக்கு விட்டு மிரட்டி வட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறார்.

    ஒரு கட்டத்தில் கிழவி எப்போது இறக்கும் என ஊரே காத்திருக்கிறது. ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது.

    இன்னும் சில நாட்களில் ராதிகா இறந்து விடுவார் என்று ஊரே காத்திருக்கிறது. அப்போது, ராதிகா 160 சவரன் சேர்த்து வைத்துள்ளது மகன்களுக்கு தெரியவருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகை சொத்துக்காகவாவது தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என மெனக்கிடுகிறார்கள்.

    இறுதியில் தாய் கிழவி உயிர் பிழைத்தாரா? அந்த 160 சவரன் நகை என்னவாயிற்று? என்பது படத்தின் மீதிக்கதை.

    இப்படம் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    சுமார் பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'தாய் கிழவி' படம் வெளியான முதல் நாளே நாடு முழுவதும் ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் வசூலித்தது.

    இந்நிலையில் 'தாய் கிழவி' படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இப்படத்தை தொடர்ந்து கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தை சிவகுமார் முருகேசன் இயக்க உள்ளார். இதன் அறிமுக டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • ஐசரி கணேஷ் படத்தை தயாரித்துள்ளார்.
    • ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'தேரே இஷ்க் மே'. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.

    கர எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் ஏப்.30ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.  


    • நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும், நர்மதா உதயகுமார் என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
    • தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் , பார்க்கிங், லப்பர் பந்து போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியையும், பாராட்டுகளையும் பெற்றுத்தந்தது.

    அதன்பின் கடந்தாண்டு வெளிவந்த டீசல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து தாஷமக்கான் போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளதாக ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில்,

    "எனது மனைவி நர்மதாவிற்கும் எனக்கும் இன்று (02.03.2026) பெண் குழந்தை பிறந்துள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தாயும் சேயும் நலமாக உள்ளனர். எங்களது வாழ்வின் இந்த அழகான புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இவ்வேளையில், எங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் காட்டிய அன்பு மற்றும் ஆசிகளுக்கு நாங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் 

    உங்களது தொடர்ச்சியான ஆதரவிற்கும், கனிவிற்கும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் நமசிவாய" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும், நர்மதா உதயகுமார் என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    தயாரிப்பாளர் JK சரவணா முழுமையாக திரைப்பட தயாரிப்பில் கால்பதித்துள்ளார்.

    ஒரு திரைபடம், ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் பிரம்மாண்ட பயணம், மற்றொன்று ஒரு ஐயப்ப பக்தரின் வாழ்க்கைப் பயணம் – தந்த்ரா பிலிம்ஸ் அறிவித்த இரண்டு ஐயப்ப சுவாமியின் திரைப்படங்கள்!!

    தமிழ் திரைப்பட உலகில் ஆன்மீக உணர்வும் வரலாற்றுப் பெருமையும் ஒன்றிணையும் புதிய முயற்சியாக, தயாரிப்பாளர் JK சரவணாவின் தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய திரைப்படங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    முன்னதாக சென்னை 600028, சென்னை 600028-2 படங்களை இணைந்து தயாரித்த தயாரிப்பாளர் JK சரவணா முழுமையாக தமிழ் திரைப்பட தயாரிப்பில் கால்பதித்துள்ளார். சுவாமி ஐயப்பனை மையமாக கொண்டு உருவாகும் இந்த இரண்டு படங்களின் தலைப்புகளை, பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

    தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் "தத் த்வம் அஸி" (Tat Twam Assi - அதுவாகவே நீ இருக்கிறாய்). இது சமகாலத்தில் நடைபெறும் ஆன்மீக ஆக்ஷன் திரைப்படமாக, சுவாமி ஐயப்பன் பக்தரின் வாழ்க்கை, அவரது நம்பிக்கை, பக்தி மற்றும் ஆன்மீக பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது.

    இந்த திரைப்படத்தை, சுவாமி ஐயப்பன் பக்தியை மையமாகக் கொண்டு உருவாகிய 100 கோடி ரூபாய் வசூலை கடந்த சூப்பர் ஹிட் படமான "மாளிகப்புரம்" படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்குகிறார். ஆன்மீக கதைகளை உணர்வுப்பூர்வமாக திரையில் சொல்லும் அவரது அனுபவம், "தத் த்வம் அஸி" படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டாவது திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள "ஆர்ய கேரள வர்மன்", வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமாகும். இந்தப் படம் இதுவரை அதிகம் பேசப்படாத சுவாமி ஐயப்பனின் சுயசரிதை கதை, 16 -ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பின்னணியில், அவரது வீரத்தையும், ஆன்மீகத் தத்துவத்தையும் மையமாகக் கொண்டு உருவாகிறது.

    இந்த திரைப்படத்தை JK சரவணா மற்றும் ஆதித்யா தங்கிராலா இணைந்து இயக்குகிறார்கள். ஆன்மீகம், வீரம், பண்பாடு ஆகியவை இணையும் ஒரு சக்திவாய்ந்த காட்சிப் படைப்பாக "ஆர்ய கேரள வர்மன்" உருவாகவுள்ளது.

    இந்த இரண்டு படங்களின் டைட்டில் அறிவிப்பு நிகழ்வு, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ராஜா அண்ணாமலை புரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டு புதிய படத்தின் தலைப்புகளை வெளியிட்டு படத்தின் தயாரிப்பு பணிகளை துவங்கி வைத்தார். 

    பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் உருவாகிறது.

    உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டி.ஜே. இன்டர்நேஷனல் நிறுவனங்கள் தயாரிப்பில் செ. ஹரி உத்ரா எழுதி இயக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மாஸ்டர் பிளான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பூஜை இன்று எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இந்தப் படம் கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற திரைப்படங்களைப் போல அனைவரும் ரசிக்கும் வகையில் கலகலப்பான பிளாக் ஹூயுமர் கலந்த நகைச்சுவை திரைப்படமாக அரசியல் பின்னணியில் உருவாகவுள்ளது.

    இன்று நடைபெற்ற பூஜை விழாவில் தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், P.L. தேனப்பன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். புதிய முயற்சியாக உருவாகும் இந்த திரைப்படம், அரசியலை சேர்ந்த ஆட்களால் ஏற்படும் பிரச்சனையில் நாயகன் நாயகியின் குடும்பம் சிக்கிக் கொள்வதும், அந்த குடும்பம் வில்லன்களிடம் இருந்து, எவ்வாறு மீண்டு வருகின்றது என்பதையும் நகைச்சுவை மற்றும் டார்க் ஹூமர் கலந்த அணுகுமுறையில் சொல்ல இருக்கிறது.

    இந்தப் படத்தில் தருண் விஜய் மற்றும் சாயாதேவி நாயகன், –நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் திவ்யா ஜெகத், அப்புகுட்டி, கூல் சுரேஷ், சென்ட்ராயன், வினோத் சாகர், அருண் மைக்கேல் டேனியல், சம்பத் ராம், சாய் தீனா, பருத்தி வீரன் சரவணன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

    முழுக்க முழுக்க நகைச்சுவை ஹூமர் பின்னணியில் நகரும் இப்படம், குடும்ப உறவுகளையும் சமூகச் சிக்கல்களையும் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் துவங்கி, விழுப்புரம், செஞ்சி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது. இயற்கை சூழலும் கிராமப்புற பின்னணியும் இணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    கலகலப்பான பிளாக் ஹூயுமர் காமெடியாக உருவாகும் 'மாஸ்டர் பிளான்' திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் X தளத்தில் வெளியிட்டுள்ளது.

    நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், தாய் கிழவி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ. 2.5 கோடி வசூலித்துள்ளது. மேலும், இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில், தாய் கிழவி படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன், ராதிகா மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை கண்டுகளித்த நிலையில் திரைப்படம் குறித்து சீமான் விமர்சன அளவில் வெகுவாக பாராட்டித்தள்ளினார்.

    இதுகுறித்த வீடியோவை சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் X தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.



    சல்லியர்கள் திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியடப்பட்டது.

    நடிகர் ஆரி நடிப்பில் கடந்த வாரம் (பிப். 27) வெளியான திரைப்படம் ஃபோர்த் ஃப்ளோர். இந்தப் படத்தில் நடிகர் ஆரியுடன் பவித்ரா அரவிந்த், தீப்ஷிகா சந்திரன், சுப்ரமணிய சிவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த வாரம் இந்தப் படம் வெளியான நிலையில், ஃபோர்த் ஃப்ளோர் படத்திற்கு மால்களில் திரையரங்குகள் வழங்கப்படவில்லை என்று நடிகர் ஆரி குற்றம்சாட்டியுள்ளார்.

    முன்னதாக வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான "சல்லியர்கள்" திரைப்படத்திற்கும் மால்களில் திரையரங்குகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, திரையரங்குகள் வழங்கப்படாததால் சல்லியர்கள் திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியடப்பட்டது. மேலும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் மால்களில் திரையரங்குகள் வழங்கப்படாததற்கு வருத்தம் தெரிவித்து இருந்தார்.

    இந்த வரிசையில், தற்போது நடிகர் ஆரி தன் நடிப்பில் வெளியாகி இருக்கும் "ஃபோர்த் ஃப்ளோர்" திரைப்படத்திற்கு மால்களில் திரையரங்குகள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய நடிகர் ஆரி, "தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை என்பது அவமானமாக இருக்கிறது. நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் வழங்கப்படுவதில்லை. கேட்டால், விளம்பரம் போதவில்லை என்கின்றனர். அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. மற்ற படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. படம் பிடித்துள்ளதா, இல்லையா என்பதை மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்," என்றார்.

    • இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் தெற்கு போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
    • விரைவில் டைரக்டர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் கடந்த 2022-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சினிமா 'மஞ்சும்மல் பாய்ஸ்'. இந்த படத்தை இயக்கியவர் சிதம்பரம். படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமான இவர் மீது இளம்பெண் பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள எலம்குளம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் எர்ணாகுளம் தெற்கு போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். டைரக்டர் சிதம்பரம், தனது பிளாட்டில் புகுந்து பாலியல் நோக்கத்துடன் தவறாக நடந்து கொண்டதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் டைரக்டர் சிதம்பரம் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.சி. பிரிவு 74 மற்றும் 75-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் டைரக்டர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்படும் என்றும் எர்ணாகுளம் தெற்கு போலீசார் தெரிவித்தனர். தேவைப்பட்டால் கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    "ஆண் பாவம் பொல்லாதது" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ரியோ ராஜ். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் ரியோ ராஜ் நல்ல கதையம்சம் கொண்ட படங்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இவர் நடிப்பில் வெளியான "ஆண் பாவம் பொல்லாதது" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து இவர் மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் ரியோ ராஜ் திரைத்துறையில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். நடிகர் ரியோ ராஜ் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு "ரிவர் ரூட் ஸ்டூடியோஸ்" என பெயர் சூட்டியுள்ளார். மேலும், தனது தயாரிப்பில் உருவாகும் படத்தின் அறிவிப்போடு, தயாரிப்பாளராகும் அறிவிப்பையும் ஒரே வீடியோவாக அவர் வெளியிட்டுள்ளார்.

    அதன்படி ரியோ ராஜின் ரிவர் ரூட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் ரியோவுடன் ஜோ திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் வருண் கே.ஜி. மற்றும் பிரபல யூடியூபர் நிஷாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது முதற்கட்ட அறிவிப்பு வெளயாகி இருக்கும் நிலையில், தொடர்ந்து இந்தப் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.



    இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    நடிகர் சூர்யாவின் 46வது திரைப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு "விஸ்வநாத் அன்ட் சன்ஸ்" என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ரவீனா டான்டன், பவானி ஸ்ரீ, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை நிமிஷ் ரவி மேற்கொள்ள நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.

     

    2005ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் போன்றே "விஸ்வநாத் அன்ட் சன்ஸ்" படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கும் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்து இருக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வருகிற ஜூலை மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • ரஜினி - கமல் நடிக்கும் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது.
    • இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

    ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    ப்ரோமோ வீடியோவில் தீம் மியூசிக் ரெடியா இருக்கு என்று அனிருத் சொல்ல, யாரு ஹீரோ? என்று கமல்ஹாசன் கேட்க, கேட்குறாங்களா சொல்லுங்க ஜீ என்று ரஜினிகாந்த் சொல்ல இயக்குனர் நெல்சனும், அனிருத்தும் செய்வதறியாது திகைக்கின்றனர். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இந்த ப்ரோமோ வீடியோவை எடிட் செய்து மோடி - அமித் ஷா முகத்தை வைத்து தமிழக பாஜக வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், "பாரதத்தை வல்லரசாக்க அயராது உழைக்கும் இணையற்ற இரட்டையர்கள்..!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×