search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஆன்லைன் வணிக பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கலாம்.. என்பிசிஐ பரிந்துரை..!
    X

    ஆன்லைன் வணிக பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கலாம்.. என்பிசிஐ பரிந்துரை..!

    • யுபிஐ பரிவர்த்தைகளுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் விளக்கம் அளித்தது.
    • தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் சார்பில் 1.1 சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சார்ந்து யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) பரிந்துரை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் வங்கிகள் மற்றும் பேமண்ட் சேவை வழங்குவோர் அதிக வருவாய் ஈட்ட முடியும்.

    அந்த வகையில் இதற்கான கட்டணம் ஏப்ரல் 1 ஆம் தேதி மூலம் வசூலிக்கப்பட இருக்கிறது. இதோடு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்த கட்டணங்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.

    பிபிஐ எனப்படும் பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிக பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். ரூ. 2 ஆயிரத்திற்கும் குறைந்த பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.

    இதற்கான கட்டணம் ஆன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே வசூலிக்கப்படும். அதே சமயம் பயனர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பது பற்றி இறுதி முடிவை வணிகர்களே எடுக்கலாம். வழக்கமான யுபிஐ பரிவர்த்தனைகள், அதாவது ஒருவர் நேரடியாக தனது வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பும் தொகைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது.

    இந்தியாவில் யுபிஐ சார்ந்த பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, பிரபலமான ஒன்றாகவும் இருந்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் வங்கி அக்கவுண்ட்களில் இருந்து மொபைல் போன் மூலமாகவே பணம் அனுப்ப முடியும். பிபிஐ-க்கள் என்பது பணத்தை வைத்துக் கொண்டு பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும் டிஜிட்டல் வாலெட்கள் ஆகும்.

    பேடிஎம், போன்பெ மற்றும் கூகுள்பே உள்ளிட்டவை பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சேவையை வழங்கி வருகின்றன. பரிவர்த்தனையை மேற்கொள்ள வங்கி சார்பில் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பின் படி, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை வசூலிக்க பிரீபெயிட் பேமண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×