search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மந்திரி முரளீதரன்"

    • அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்திக்கிறார்.
    • விழாவையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    கொழும்பு :

    ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி இலங்கை விடுதலை பெற்றது. அதன் 75-வது சுதந்திர தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் பிரதான விழா கொண்டாட்டங்கள் இன்று நடக்கின்றன. அதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொள்கிறார்.

    இதற்காக 2 நாள் பயணமாக அவர் நேற்று இலங்கை சென்றார். சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதுடன், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    மேலும், இந்திய வம்சாவளியினரையும் முரளீதரன் சந்திக்கிறார்.

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இலங்கைக்கு சென்று வந்த 2 வாரத்தில் முரளீதரன் அங்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை சுதந்திர தின கொண்டாட்டத்தில் முரளீதரன் மட்டுமின்றி, பல்வேறு வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். அவர்களில், காமன்வெல்த் தலைவர் பேட்ரிசியா ஸ்காட்லாந்தும் ஒருவர்.

    விழாவையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கொழும்பு நகரிலும், புறநகர்களிலும் ராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    இலங்கை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பல கோடி ரூபாய் செலவிடப்படும் என்று தெரிகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீளாத நிலையில், இவ்வளவு செலவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

    அதுபோல், 2019-ம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை தண்டிக்காததை கண்டித்து, விழாவை புறக்கணிப்பதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.

    தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்காததை கண்டித்து, தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கருப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. ஒரு மாணவர் சங்கம், 24 மணி நேர தர்ணா போராட்டத்தை அறிவித்துள்ளது.

    ×