search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரவாயல் பறக்கும் சாலை"

    • சென்னை துறைமுகத்தில் இருந்து 12 மணி நேரத்தில் புதுச்சேரி துறைமுகம் சென்றடையும்.
    • சென்னை துறைமுகம்-மதுரவாயல் ஈரடுக்கு பறக்கும் சாலைக்கு ரூ.5 ஆயிரத்து 800 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை காமராஜர் துறைமுகத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதால் சரக்குகளை கையாளுவதில் சிக்கல் நீடித்தது. இதனையடுத்து சரக்கு கப்பல்களை புதுச்சேரி எடுத்து சென்று அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் சரக்குகள் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டது.

    இதற்காக புதுச்சேரி துறைமுகம் ரூ.40 கோடியில் சீரமைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு 67 மீட்டர் நீளமுள்ள 'எம்.வி. ஹோப் செவன்' எனப்படும் தனியார் சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. இதனை துறைமுக சபை தலைவர் சுனீல்பாலிவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை-புதுச்சேரி இடையேயான சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கி இருப்பதன் மூலம் சென்னை-திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

    சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும். சாலை வழியாக சரக்குகளை எடுத்து வரும்போது கூடுதல் செலவு ஏற்படும். கடல்வழி போக்குவரத்து மூலம் சரக்குகளை கொண்டு செல்லும்போது 25 முதல் 30 சதவீதம் செலவு குறையும்.

    முக்கியமாக சுங்கத்துறை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் புதுச்சேரி துறைமுகத்திலேயே மேற்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கப்பல் வாரத்துக்கு 2 நாட்கள் இயக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து 12 மணி நேரத்தில் புதுச்சேரி துறைமுகம் சென்றடையும். இதன்மூலம் சென்னை துறைமுகத்தில் அதிகளவில் சரக்குகளை கையாண்டு நேர மேலாண்மையை மேம்படுத்த முடியும்.

    இந்த திட்டம் வரும்காலங்களில் பயணிகள் போக்குவரத்துக்கு உதவிகரமாக இருக்கும்.

    சென்னை துறைமுகம்-மதுரவாயல் ஈரடுக்கு பறக்கும் சாலைக்கு ரூ.5 ஆயிரத்து 800 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த சாலைப்பணி 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த சாலைக்கு சுற்றுச்சூழல், ரெயில்வே துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த சாலையின் முதற்கட்ட பணிக்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. மார்ச் 7-ந் தேதி டெண்டர் இறுதி செய்யப்படுகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கும.

    இவ்வாறு சுனீல்பாலிவால் தெரிவித்தார்.

    ×