search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மாவட்ட ரெயில்கள்"

    • நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
    • பாதையை சீரமைக்கும் வரை ரெயில்கள் நின்றதால் பயணிகள் கடுமையாக அவதிக்குள்ளானார்கள்.

    சென்னை:

    சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதே போல் அங்கிருந்து எழும்பூருக்கு இயக்கப்படும் ரெயில்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகிறார்கள்.

    வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மார்க்கத்தில் செல்லும் எல்லா ரெயில்களும் முழுஅளவில் நிரம்புவதோடு பொதுப்பெட்டியில் நிற்க முடியாத அளவிற்கு கூட்டம் உள்ளது.

    சென்னைக்கும் தென் மாவட்ட பகுதிகளுக்கும் தினமும் மக்கள் வந்து போய் கொண்டு இருப்பதால் ரெயில்களில் எப்போதும் இடம் கிடைப்பது இல்லை.

    இந்த நிலையில் திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் கடந்த 20-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் திருச்சியில் இருந்து இயக்கப்படும் சில ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சில ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரவில் முக்கிய பணிகள் திருச்சியை ஒட்டிய பொன்மலை நிலையத்தில் நடந்தது. இதே போல் மதுரைக்கு செல்லக்கூடிய பிரிவு பாதையிலும் பணிகள் நடந்தன. இதனால் நள்ளிரவில் சென்னைக்கு வந்த ரெயில்கள் அனைத்தும் பல மணி நேரம் வழியில் நிறுத்தப்பட்டன.

    நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    பாதையை சீரமைக்கும் வரை ரெயில்கள் நின்றதால் பயணிகள் கடுமையாக அவதிக்குள்ளானார்கள். நள்ளிரவு நேரமாக இருந்ததால் பயணிகள் தூக்கமின்றி சிரமப்பட்டனர். அதிகாலை 4 மணியளவில் தான் ஒவ்வொரு ரெயிலாக புறப்பட்டு வந்தன. இதனால் எழும்பூர் நிலையத்துக்கு வந்து சேர வேண்டிய ரெயில்கள் அனைத்தும் 4 முதல் 5 மணி நேரம் தாமதமாக வந்தடைந்தன.

    அதிகாலை 5 மணிக்கு வர வேண்டிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 8.30 மணிக்கு வந்து சேர்ந்தது. அதனை தொடர்ந்து நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை, முத்துநகர், அனந்தபுரி, கொல்லம், செந்தூர் மற்றொரு ராமேஸ்வரம் ரெயில் உள்ளிட்டவை வழக்கமாக காலை 6 மணி முதல் 8 மணிக்கு வந்து சேரும்.

    ஆனால் இந்த ரெயில்கள் இன்று 11, 12 மணிக்கே எழும்பூருக்கு வந்து சேர்ந்தன. தென் மாவட்ட ரெயில்கள் தாமதம் ஆனதால் தஞ்சாவூர், சிதம்பரம், கும்பகோணம் வழியாக வரக்கூடிய ரெயில்களும் இனறு வழக்கத்தை விட தாமதமாக வந்தன.

    விடுமுறையில் சென்றவர்கள் இன்று காலையில் வழக்கமான பணிக்கு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில் ரெயில்கள் தாமதத்தால் பணிக்கு செல்ல முடியவில்லை.

    குழந்தைகளுடன் வந்த பயணிகள் வழக்கமான நேரத்திற்கு வீட்டிற்கு சென்று விடலாம் என திட்டமிட்டனர். ஆனால் பலமணி நேரம் தாமதமாக புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். தங்கள் உறவினர்கள், நண்பர்களை அழைத்து செல்ல வந்தவர்கள் எழும்பூர் நிலையத்திற்கு முன்பு காத்து நின்றனர். திருச்சியில் இன்றும் நாளையும் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுவதால் காலதாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதே போல் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற ரெயில்களும் தென் மாவட்டங்களுக்கு இன்று தாமதமாக சென்றடைந்தன.

    ×