search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை தமிழர் பிரச்சனை"

    • நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகள் இலங்கையில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும்.
    • அரசியலமைப்பு சட்டம் 13ஏ, தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்குகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரே ஆகியோரை சந்தித்து பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுபான்மை தமிழ் சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, இலங்கையில் அரசியலமைப்பு சட்டம் 13A முழுவதுமாக அமல்படுத்தப்படுவது முக்கியம் என இந்தியா கருதுகிறது, என்றார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை நிலவுவதற்கு இந்தியா எப்போதும் ஆதரிக்கும். கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதும், மாகாணசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதும் முக்கியம் என்ற எங்களது பார்வையை, இலங்கை அதிபர் விக்கிரமசிங்கவுடன் பகிர்ந்துகொண்டேன்.

    நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகள் இலங்கையில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் நன்மை பயக்கும். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் தேவைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் நான் பேசினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில், 1987ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் தேதி, இலங்கை அரசியலமைப்பில் 13வது திருத்தச்சட்ட உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அரசியலமைப்பு சட்டம் 13ஏ, தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்குகிறது.

    அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி அவர்கள் ஒன்றாக வாழ முடியும்.

    இந்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கையில் உள்ள பெரும்பான்மையான தமிழ் கட்சிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர். 13ஆவது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×