search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் ஷாஜகான்"

    புதுவை வருவாய்துறை அமைச்சரான ஷாஜகான் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை வருவாய்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அமைச்சர் ஷாஜகான். நேற்று இரவு இவர், சுய்ப்ரேன் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.

    அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வைத்திலிங்கம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அமைச்சர் ஷாஜகானின் உடல் நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடமும், மருத்துவ குழுவினரிடமும் கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து மருத்துவ குழுவினர் அமைச்சர் ஷாஜகானின் உடல்நிலையை கண்காணித்து இன்று காலை வரை சிகிச்சை அளித்து வந்தனர்.

    அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனினும் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அமைச்சர் ஷாஜகானை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.

    அதன்படி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் கூடிய சிறப்பு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. காலை 10.45 மணியளவில் அமைச்சர் ஷாஜகான் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அமைச்சர் ஷாஜகானுடன் அவரது மனைவி வகீதா மற்றும் உறவினர்கள் சென்றனர்.

    இதற்கிடையே அமைச்சர் ஷாஜகான் மரணம் அடைந்து விட்டதாக இன்று காலை வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் ஷாஜகானின் ஆதரவாளர்கள் புதுவை ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

    இதனால் ஆஸ்பத்திரி வளாகமே பரபரப்பும், பதட்டமுமாக இருந்தது. அமைச்சர் ஷாஜகான் நலமுடன் இருப்பதாகவும், அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்த பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர்.
    ×