search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tempo accident in Valparai"

    வால்பாறை அருகே மலைப்பாதையில் டெம்போ கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Accident
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட காட்டுப்பட்டி, குழிப்பட்டி, குறுமலை, மாவடப்பு, மேல்குறுமலை பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வசிப்பிடப் பகுதிகளில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் நடந்து திருமூர்த்தி மலைக்கு சென்று வருகின்றனர். மேலும் தங்களது விவசாய விளைபொருட்களை டெம்போக்கள் மூலம் பொள்ளாச்சிக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    நேற்று மாலை தாங்கள் விளைவித்த நிலக்கடலைகளை டெம்போவில் ஏற்றி பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டிக்கு கொண்டு சென்று விற்பனை செய்தனர். பின்னர் கோட்டூரில் உள்ள சந்தையில் வீட்டுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கினர்.

    இரவு 8 மணி அளவில் கோட்டூரில் இருந்து டெம்போவில் தங்கள் பகுதிக்கு 18 பேர் சென்றனர். குறுமலையை சேர்ந்த ராஜன்(40) டெம்போவை ஓட்டினார். டெம்போ ஆழியாறு, அட்டகட்டி வனத்துறை சோதனைச் சாவடிகளை கடந்து காடம்பாறை செல்லும் ஆர்ச் வழியாக சென்றது.

    அட்டகட்டியை தாண்டி காடம்பாறை ஆர்ச் பகுதியில் உள்ள சில வளைவுகளை கடந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டெம்போ தாறுமாறாக ஓடியது. அப்போது டெம்போ சாலையோரத்தில் உள்ள பாறைகளில் மோதி சுமார் 20 அடி உயர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதனால் டெம்போவில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் குறுமலையை சேர்ந்த வெள்ளையன்(45), வெள்ளையனின் மனைவி செல்வி(40), ராமன்(45), தன்னாசி(34), மல்லப்பன்(40) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    குறுமலையை சேர்ந்த திருமன்(45), முருகன்(15), மாவடப்பு பகுதியை சேர்ந்த காளியம்மாள்(35), முரளி(18), சீதை(24), சித்ரா (24), மாரியம்மாள்(30), திருமாத்தாள் (40), மாகாளி (40), செல்வி(35), குழிப்பட்டியை சேர்ந்த ராஜன்(40), பச்சயம்மாள்(25) ஆகிய 12 பேர் காயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார், ஆம்புலன்ஸ் குழுவினருடன் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் படுகாயமடைந்த காளியம்மாள், முரளி, சித்ரா, மாரியம்மாள் ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து காடம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #Accident
    ×