என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதி முயற்சி"

    • கடனாளியாக இருப்பவர்களை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் ஜனா.
    • வாங்கிய கடனுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.

    நாயகன் ரஞ்சித் செய்து வந்த ஜவுளி வியாபாரம் நஷ்டம் ஏற்பட்டதால் கஷ்டப்பட்டு வருகிறார். இவருடைய மகனின் மருத்துவ ஆபரேசனுக்காக ரூ.80 லட்சம் வட்டிக்கு கடன் வாங்குகிறார். கடனை திருப்பி செலுத்த முடியாததால் வட்டி குட்டி போட்டு கோடி ரூபாய்க்கு மேல் கட்ட நேர்கிறது.

    கடனும், கடன்காரனும் கழுத்தை நெரிக்க என்ன செய்வதென்று தெரியாமல் சிக்கி தவிக்கிறார் ரஞ்சித். கடன் கொடுத்தவர்களின் அட்டூழியங்களும், அக்கிரமங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து வேறு வழியின்றி ரஞ்சித் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்கிறார். இதே சமயம் ஊரையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் சைக்கோ கொலைகாரன் ரஞ்சித் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் பதுங்கி இருக்கிறான்.

    இறுதியில் தற்கொலைக்கு முயன்ற ரஞ்சித் குடும்பத்தின் நிலை என்ன? வீட்டுக்குள் பதுங்கி இருக்கும் சைக்கோ கொலையாளி யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ரஞ்சித் சிறப்பாக நடித்து இருக்கிறார். கடன்காரர்களுக்கிடையே சிக்கி கொண்டு மனைவியும், மகளும் தன் கண் எதிரிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை கண்டு துடிக்கும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கும் காட்சிகளில் சமூகத்தில் நிலவும் பல குடும்ப தலைவர்களின் பிரதிபலிப்பாக தெரிந்து இருக்கிறார்.

    மனைவியாக வரும் மேகாலி மீனாட்சி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். கணவரது சோகத்திற்கு பக்க பலமாகவும் இருக்கும் அவரது நடிப்பு நேர்த்தியாக அமைந்துள்ளது. மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரங்களாக வரும் மவுனிகா, நிலேஷ் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம்.

    கடனாளியாக இருப்பவர்களை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் ஜனா. கடனில் சிக்கி கொண்டு வலியாலும், அவமானத்தாலும் தவித்து வரும் பல குடும்பங்களின் பரிதாப நிலையை காட்சிபடுத்தியதற்கு பாராட்டுகள். வாங்கிய கடனுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். திரைக்கதை வேகம் இல்லாமல் இருப்பது பலவீனம். அதுபோல் காட்சிகளின் அழுத்தம் குறைவாக அமைந்துள்ளது.

    சுனில் வாசனின் இசையும், சூர்யகாந்தியின் ஒளிப்பதிவும் கதையோடு சேர்ந்து பயணிக்கிறது.

    ×