என் மலர்
நீங்கள் தேடியது "ஜிஎஸ்எல்வி எப் 16"
- ஸ்ரீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்டின் மேல்பகுதியில் நிசார் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
- செயற்கைக்கோளை ஏவும் பணியில் இஸ்ரோ-நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இது பூமியிலிருந்து 743 கிலோ மீட்டர் சூரிய ஒத்திசைவான சுற்றுப்பாதையில் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட், நிசார் செயற்கைக்கோளை 98.40 சாய்வுடன் செலுத்த உள்ளது.
2 ஆயிரத்து 392 கிலோ எடையுள்ள நிசார், ஒரு தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள். நாசாவின் எல்-பேண்ட் மற்றும் இஸ்ரோவின் எஸ்-பேண்ட் என்ற இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் வகையை சேர்ந்தவையாகும்.
பூமியைக் கண்காணிக்கும் இரட்டை அதிர்வெண் கொண்ட முதல் செயற்கைக்கோள் நிசாராகும். இவை இரண்டும் இஸ்ரோவின் மாற்றியமைக்கப்பட்ட ஐ-3கே என்ற செயற்கைக்கோளில் ஒருங்கிணைக்கப்பட்ட நாசாவின் 12 மீட்டர் விரிக்கக்கூடிய மெஷ் பிரதிபலிப்பான் ஆண்டெனாவைப் பயன்படுத்துகின்றன.
நிசாரில் முதல் முறையாக 'ஸ்வீப்சார்' என்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 242 கிலோ மீட்டர் பரப்பளவு மற்றும் உயர் இடம்சார்ந்த தெளிவுத்திறனுடன் பூமியைக் கண்காணிக்கும்.
இந்த செயற்கைக்கோள் முழு உலகத்தையும் ஸ்கேன் செய்து 12 நாள் இடைவெளியில் அனைத்து வானிலை, பகல் மற்றும் இரவு தரவுகளையும் வழங்குவதுடன் பரந்த அளவிலான பயன்பாடுகளை செயல்படுத்தும். நிசார் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கண்டறிய முடியும்.
அதாவது தரை சிதைவு, பனிப்படல இயக்கம் மற்றும் தாவர இயக்கவியல். கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் தன்மை, மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேற்பரப்பு நீர் வளங்களை வரைபடம் செய்தல் மற்றும் கண்காணித்தல், பேரிடர் ஆகியவற்றை கண்டறியும். நிசார் ஏவுதல் என்பது இஸ்ரோ மற்றும் நாசா மற்றும் ஜெ.பி.எல். என்ற தொழில்நுட்ப குழுக்களுக்கு இடையே 10 ஆண்டுகளுக்கு மேலாக வலுவான தொழில்நுட்ப ஒத்துழைப்பின் விளைவாகும். தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்டின் மேல்பகுதியில் நிசார் செயற்கைக்கோள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த செயற்கைக்கோளை ஏவும் பணியில் இஸ்ரோ-நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.






