search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Polytechnic teacher exam"

    விடைத்தாள் முறைகேடு புகாரைத்தொடர்ந்து பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. #Polytechnic #highcourt
    சென்னை:

    விடைத்தாள் முறைகேடு புகாரைத்தொடர்ந்து பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர்கள் (ஆசிரியர்கள்) பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந்தேதி தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 568 பேர் கலந்து கொண்டனர். 2011 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். இவர்களில் 196 பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி தேர்வை ரத்து செய்தது.

    இதை எதிர்த்து, தேர்வு எழுதிய சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    விரிவுரையாளர் தேர்வு முறைகேடு சம்பந்தமாக தமிழக அரசு ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளது. அதில், 196 பேரின் விடைத்தாளில் முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக விடைத்தாளை மதிப்பீடு செய்த நிறுவனம் லட்சக்கணக்கில் பணம் பெற்று இருப்பதும் தெரியவந்துள்ளது.

    மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் விரிவுரையாளர் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது சரியானது தான். தமிழக அரசின் அந்த உத்தரவு செல்லும்.

    ஊழல் என்பது மிகப்பெரிய நோய். இது நமது நாட்டில் புற்றுநோய் போன்று வளர்ந்து வருவது வேதனைக்குரியது. இதுபோன்ற நோயை பரவவிட்டால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். தமிழக அரசு எடுத்துள்ள இதுபோன்ற முடிவுகள் தான் ஊழலற்ற சரியான பாதையில் செல்ல வேண்டும் என்ற மக்களுக்கு நம்பிக்கையை தரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Polytechnic #highcourt
    ×