என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pacipparuppu Alva"

    • நாவில் வைத்த உடனேயே கரைந்து போய்விடும்.
    • பத்து நிமிடத்தில் ஈசியா செஞ்சிடலாம்.

    இனிப்பு வகைகளில் அல்வா என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் வாயில் வைத்தவுடன் நாவில் கரைந்து விடும் அல்வாவிற்கு தனி மவுசு தான். இதனால் தான் இருட்டுக் கடை அல்வா, திருநெல்வேலி அல்வா என்று விதவிதமாக அல்வாக்கள் பிரசித்தி பெற்றது. எவ்வளவோ பொருட்களை வைத்து நாம் அல்வாவை செய்து இருப்போம். ஆனால் வெறும் பாசி பருப்பு மட்டும் வைத்து எப்படி அல்வா செய்வது? இதை செய்ய பத்து நிமிடம் போதுமானது. 100 கிராம் பாசிப்பருப்பு இருந்தால் போதும், கடகடன்னு செஞ்சி, கமகமன்னு சாப்பிடலாம். அது எப்படி செய்வது? என்பதை பார்க்கலாம் வாங்க.

    உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பாசிப்பருப்பு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசிபருப்பு – 100 கிராம்

    சர்க்கரை – 100 கிராம்

    பால் பவுடர் அல்லது பால் – 1/2 கப்

    முந்திரி பருப்பு – 10

    பாதாம் பருப்பு – 5

    பிஸ்தா பருப்பு – 5

    நெய் – தேவையான அளவிற்கு

    செய்முறை

    பாசிப்பருப்பு அல்வா செய்வதற்கு பால் பவுடர் இல்லை என்றால் பால் சேர்த்துக் கொள்ளலாம். முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி விட்டு உலர்த்திக் கொள்ள வேண்டும். உணர்த்திய இந்த பாசிப்பருப்பை ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ஐந்து நிமிடம் சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஆறியதும் மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    ரவை அளவை விட சிறியதாக கொரகொரவென்று அரைத்தால் போதும். சர்க்கரையை மிக்சியில் சுற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். எந்த அளவிற்கு பாசிப்பருப்பை சேர்க்கிறோமோ அதே அளவிற்கு சர்க்கரையும் சேர்க்க வேண்டும். அதற்கு அளவை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அரைத்து வைத்த பாசிப்பருப்பு மாவுடன், அரைத்து வைத்த சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை கப் அளவிற்கு பால் பவுடரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் பவுடர் இல்லாதவர்கள் அதனை தவிர்த்து விடுங்கள்.

    பின்னர் உடைத்து வைத்துள்ள நட்ஸ் வகைகளை பொடிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து சூடேறியதும், இரண்டு தேக்கரண்டி அளவிற்கு நெய் சேர்க்க வேண்டும். அதில் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பு மாவை சேர்த்து குறைந்த தீயில் வைத்து இடைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மாவு கெட்டியானதும் பால் பவுடர் அல்லது பால் சேர்க்க வேண்டும். இரண்டு கப் மாவிற்கு, இரண்டரை கப் தண்ணீர் சேர்த்தால் போதுமானது. பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதில் உடைத்து வைத்துள்ள நட்ஸ்களை சேர்க்க வேண்டும். பின்னர் வாசனைக்காக சிறிதி ஏலக்காய் தூள் சேர்த்து சிறிது நேரம் கிண்டி விட்டு மூடி வைத்து விடலாம்.

    அடுப்பை குறைந்த தீயில் வைத்து இருப்பது அவசியம். ஒரு 5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் நெய் தெளிந்து, அல்வா பதத்திற்கு நிறம் மாறி பாசிப்பருப்பு நன்றாக வெந்து வந்திருக்கும். பத்து நிமிடத்தில் ஈசியா செஞ்சிடலாம். சுட சுட சாப்பிடும் பொழுது அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். நாவில் வைத்த உடனேயே கரைந்து போய்விடும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த அல்வாவை அடிக்கடி வீட்டில் செய்து எல்லோருக்கும் கொடுத்து, நீங்களும் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

    ×