search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nipah symptoms"

    கேரளாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் ஒருவர் கோவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Nipahvirus #Goahospital
    பனாஜி:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா வைரஸ் தாக்குதலுக்கு 2 நர்சுகள் உள்பட 14 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நிபா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவிற்கு நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், கோவாவில் நிபா வைரஸ் பரவியிருப்பதாக வந்த தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலிருந்து வந்த நபர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பேசிய மாநில சுகாதாரத்துறை மந்திரி விஷ்வஜித் ரானே, 'காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து தெரியவில்லை. அவருடைய ரத்த மாதிரிகள் புனே தேசிய சோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யாரும் பயப்பட தேவையில்லை' என கூறினார்.

    கேரள மாநிலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய நிபா வைரஸ் கோவாவில் பரவியதாக வந்த தகவல் அம்மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #Nipahvirus #Goahospital
    ×