search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motorcycle mechanic killed"

    புதுவையில் பெண் தகராறில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கை கொலை செய்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை சின்னையாபுரத்தை சேர்ந்தவர் செங்கேணி. இவருடைய மகன் அய்யப்பன். (வயது 25). இவர் புதுவை 100 அடி ரோட்டில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி அய்யப்பன் காயம் அடைந்தார். பின்னர் நண்பர் உதவியுடன் வேலைக்கு சென்று வந்தார்.

    அதுபோல் நேற்று மாலை வேலை முடிந்ததும் தனது நண்பர் சங்கர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அய்யப்பன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பெண்கள் பள்ளி அருகே வந்த போது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் திடீரென அய்யப்பனை வழி மறித்தது.

    பின்னர் அய்யப்பனை சரமாரியாக அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனை தடுக்க முயன்ற சங்கரையும் அந்த கும்பல் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டது.

    இதில் உயிருக்கு போராடிய அய்யப்பனை உருளையன்பேட்டை போலீசார் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யப்பன் இறந்து போனார்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் அய்யப்பன் கொலை செய்யப்பட்டதற்கான திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

    அய்யப்பன் கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடியான விக்கி (25) என்பவரின் தங்கையை காதலித்து வந்துள்ளார். காதலியை திருமணம் செய்து கொள்ளவும் அய்யப்பன் விரும்பினார். இதனை அறிந்த விக்கி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஏற்கனவே அய்யப்பன் மீது கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளதால் விக்கி தனது தங்கையை அய்யப்பனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்கியை தாக்கி உள்ளார்.

    அப்போதே அய்யப்பனை தீர்த்துக்கட்ட விக்கி முடிவு செய்தார். ஆனால், விபத்தில் சிக்கி அய்யப்பன் வீட்டிலேயே இருந்ததால் தனது திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் விக்கி இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அய்யப்பன் தனது நண்பர் உதவியுடன் வேலை செய்து வருவதாக விக்கிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அய்யப்பனை கொல்ல விக்கி திட்டமிட்டார்.

    அதன்படி நேற்று மாலை அய்யப்பன் வேலை முடிந்து தனது நண்பர் சங்கருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது விக்கி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அய்யப்பனை வழிமடக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் விக்கியுடன் அவரது கூட்டாளிகளான ஜெய் என்ற ஜெயக்குமார், சோனி உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் விக்கி உள்பட 4 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    ×