search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalapattur joseph murder"

    புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் காலாப்பட்டு ஜோசப்பை பட்டப்பகலில் 2 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.
    புதுச்சேரி:

    புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் காலாப்பட்டு ஜோசப் (வயது 46). காலாப்பட்டு முருகன் கோவில் தெருவில் வசித்து வந்தார்.

    அமைச்சர் ஷாஜகானின் தீவிர ஆதரவாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் உள்பட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.

    இன்று பகல் 12.30 மணியளவில் ஜோசப் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனியாக புதுவைக்கு வந்து கொண்டிருந்தார். பொம்மையார் பாளையத்தை தாண்டி ஆரோ பீச் அருகே வந்த போது மறைந்து இருந்த 2 பேர் திடீரென ஜோசப்பை வழிமறித்தனர்.

    அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு முயன்றார். அதற்குள் சுற்றி வளைத்த அவர்கள் ஜோசப்பை சரமாரியாக வெட்டினார்கள். அதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    உடனே அவர்கள் அங்கிருந்து தப்பிஓடி விட்டனர். ஜோசப் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சம்பவம் நடந்த இடம் தமிழக பகுதியாகும். கோட்டக்குப்பம் போலீசுக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து சென்று ஜோசப்பை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஜோசப் புதுவை காங்கிரசில் மிக முக்கிய பிரமுகராவார். அவர் கொலையால் புதுவையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலாப்பட்டு பகுதியில் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது. அங்கு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரை வெட்டியவர்கள் யார்? என்று தெரியவில்லை. கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ரியல் எஸ்டேட் தொழில் போட்டியால் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என்று தெரியவில்லை.

    அவரை வெட்டியது 2 பேர் என்று தெரிந்தாலும் பலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஜோசப் புதுவைக்கு வந்ததை கண்காணித்து தகவல் சொன்னதன் அடிப்படையில் காத்திருந்து கொலை செய்துள்ளனர்.

    எனவே மேலும் பலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஜோசப் எப்போதுமே தனியாகத்தான் மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். அதை எதிர்பார்த்து காத்திருந்து கொலை செய்து இருக்கிறார்கள்..

    கொலையுண்ட ஜோசப்புக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஜோசப் தனியார் தொழிற்சாலைகளில் காண்டிராக்ட் எடுத்து பணிகள் செய்து வந்தார். மேலும் பாலமுருகன் கோவில் அறங்காவலர் குழுவில் நிர்வாகியாகவும் இருந்தார்.
    ×