search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jyoti murugan"

    • ஜோதி முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்டதைப் படிக்காதே'.
    • இப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஜோதி முருகன் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் 'கண்டதைப் படிக்காதே'. புல்லி மூவிஸ் சார்பில் எஸ். சத்யநாராயணன் தயாரித்துள்ள இப்படத்தில் ஆதித்யா, சுஜி, சீனிவாசன், வைஷாலி, ஜெனி பெர்னாண்டஸ், ஆரியன், ராஜ் நவீன், சபிதா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் சத்யநாராயணன் மணிமாறன் என்கிற எழுத்தாளர் பாத்திரத்தில் நடித்துள்ளார்.


    செல்வா ஜானகிராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மஹிபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ,படப்பை போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. பதினொரு நாடுகளில் பல்வேறு விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் ஒன்பது சர்வதேச விருதுகள் வென்றுள்ளது . 'கண்டதைப் படிக்காதே' திரைப்படம் வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படம் குறித்து தயாரிப்பாளர் சத்யநாராயணன், "சென்னையில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறாள். அதன் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சிவராமன் புலனாய்வில் இறங்குகிறார். மர்மத்தின் வேர் தேடி கொடைக்கானல் செல்கிறார். அங்கே போன பிறகு தான் தற்கொலைகளுக்கான திகிலான சம்பவம் அவருக்குத் தெரிகிறது.


    மணிமாறன் ஓர் எழுத்தாளர். ஒரு திகில் கதையை எழுதி இருக்கிறார். அந்தக் கதையைப் படித்த அவரது பேத்தி நிஷா அதை இணையதளத்தில் பதிவிடுகிறாள். அந்தக் கதையைப் படித்ததால் நிஷாவும் இறந்து போகிறாள். இணையதளத்தில் வந்த அந்தக் கதையைப் படிக்கும் வாசகர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள். இந்தப் பட்டியலில் புலனாய்வு செய்யப் போன காவல்துறை அதிகாரியின் தங்கையும் அடக்கம் . அதனால் இதன் பின்னணியில் உள்ள மர்மத்தைத் தேடி விசாரணை செய்கிறார். அவர் அதற்காக கொடைக்கானல் செல்கிறார். அங்கே நிஷா இல்லை. அவர் நிஷாவின் பாட்டியைத் தான் சந்திக்கிறார்.


    கண்டதை படிக்காதே போஸ்டர்

    இதில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயலும் போது இதன் பின்னணியில் ஒரு சாமியார் இருப்பது தெரிகிறது. அவரது கட்டுப்பாட்டில் உள்ள இறந்து போன ஒரு தம்பதிகளின் ஆவிகள் செய்யும் வேலை தான் அது. இணையத்தில் வெளிவந்தது அவர்களது சொந்தக் கதையாகும். அவர்களின் கதையைப் படிப்பவர்களை அந்த ஆவிகள் கொன்றுவிடுகின்றன என்று தெரிகிறது. அந்த சாமியார் சிவராமனைக் கொல்ல முயல்கிறார். சிவராமன் அதை எப்படி எதிர்கொள்கிறார்? அந்த ஆத்மாக்களைத் தடுத்து எப்படி மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த கண்டதை படிக்காதே திரைப்படத்தின் கதை" என்று கூறினார்.

    ×