search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor Kiran Bedi Survey"

    புதுவை கவர்னர் கிரண்பேடி ஆய்வின்போது புகார் மனுக்களை ஏற்க மறுப்பதால் தற்போது அவரை வரவேற்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. #KiranBedi
    புதுச்சேரி:

    கண்தானம் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து செல்வதன் அவசியம் மற்றும் சைக்கிள் ஓட்டி செல்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து கவர்னர் கிரண்பேடி தவளக்குப்பம் பகுதியில் கடந்த 3 வாரமாக சைக்கிளில் சென்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    அதுபோல் இன்று காலையும் கவர்னர் கிரண் பேடி தவளக்குப்பம் அரவிந்தர் கண் ஆஸ்பத்திரியில் இருந்து அங்குள்ள ஊழியர்களுடன் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி சென்றார். தானம் பாளையம், நல்லவாடு, புதுகுப்பம், பூரணாங்குப்பம் வழியாக சென்று பேரணி மீண்டும் அரவிந்தர் கண் ஆஸ்பத்திரியை அடைந்தது.

    விழிப்புணர்வு பேரணி சென்ற இடங்களில் ஆய்வு செய்த கவர்னர் கிரண்பேடி அப்பகுதிகளில் குப்பைகள் அள்ளப்பட்டு சுகாதாரமாக இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். மேலும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கலியமூர்த்தியையும் பாராட்டினார்.

    அப்போது கவர்னர் கிரண்பேடி பேசும்போது, சுகாதாரத்தை பேணி காக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். குப்பைகளை அகற்றுவதற்கு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் அவசியம் என்றார்.

    கவர்னர் கிரண்பேடி முன்பெல்லாம் ஆய்வு செய்ய வரும்போது பொதுமக்கள் திரண்டு அவரை வரவேற்பார்கள். மேலும் தங்களது பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்து வந்தனர்.



    ஆனால், நாளடைவில் கவர்னர் கிரண்பேடி புகார் மனுக்களை ஏற்க மறுத்து தன்னை கவர்னர் மாளிகையில் சந்தித்து குறைகளை தெரிவிக்குமாறு கூறியதால் தற்போது கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்ய வரும்போது அவரை வரவேற்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    இன்று காலை கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டபோது, இது வெளிப்பட்டது. அதுபோல் இன்றைய ஆய்வின் போது அதிகளவு போலீசாரும் பாதுகாப்புக்கு வரவில்லை. ஒருசில அதிகாரிகள் மட்டுமே உடன் வந்தனர். #KiranBedi


    ×