search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganapathy balamurugan"

    • இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லைசென்ஸ்’.
    • இந்த படத்தில் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

    ஜே.ஆர்.ஜி. புரடக்சன்ஸ் சார்பில் என்.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'லைசென்ஸ்'. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் T.சிவா, இயக்குனர் பேரரசு, எடிட்டர் ஆண்டனி, 'சண்டியர்' ஜெகன், ரிவர்ஸ் உமன் ஆர்கனைசேஷன் மது சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, "இந்த படத்தின் இயக்குனர் கணபதி பாலமுருகனை பார்க்கும்போது திருமணம் ஆகி பத்து வருடம் இருக்கும் என நினைக்கிறேன். அப்படிப்பட்டவரை அவரது மாமனாரே மேடை ஏறி பாராட்டுகிறார் என்கிறபோது உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோன்று இவரது படமும் வெற்றி பெறும். பொழுதுபோக்கு படம் எடுப்பவர்கள் பொறுப்பாக படம் எடுப்பவர்கள் என இரண்டு பிரிவு உண்டு. அப்படி சமூகத்திற்காக படம் எடுப்பது தான் ஒரு பொறுப்பான இயக்குனரின் வேலை. அதைத்தான் இந்த படத்தின் இயக்குனர் செய்துள்ளார்.

    சில வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் கலந்துகொண்டபோது ராஜலட்சுமியை பாடகியாக சந்தித்தேன். இன்று ஒரு நடிகையாக சந்திக்கிறேன். அடுத்த தடவை அவரை சந்திக்கும்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் மிகப்பெரிய நடிகையாக சந்திக்க விரும்புகிறேன். இதற்கு முன் ஆசிரியராக பல நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் திரையில் பார்க்கும்போது நடிகைகளாக தான் தெரிந்தார்கள். இந்த படத்தில் ராஜலட்சுமி அந்த கதாபாத்திரமாகவே மாறி, நாம் பள்ளியில் படித்தபோது நமக்கு பாடம் நடத்திய ஆசிரியை போல எதார்த்தமாக தெரிகிறார். இந்த கதைக்கே அவர்தான் சரியான சாய்ஸ்.


    ஒரு டீச்சர் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்று எதற்காக கேட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இன்றைக்கு சூழல் அப்படித்தான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் ஒழுங்கீனமாக, சுயமரியாதை இல்லாமல், அராஜகமாக நடந்து கொள்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை ஆசிரியர்களின் கையில் பிரம்பு இருந்தது. மாணவர்களும் ஒழுக்கமாக இருந்தனர். அந்த பிரம்பை பிடுங்கி கீழே போட்டது யார் ? அந்த பிரம்பு கீழே விழுந்ததும் மாணவர்களிடம் இருந்து ஒழுக்கமும் போய்விட்டது.

    அதனால் ஆசிரியர்கள் கையில் மீண்டும் பிரம்பை கொடுக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் வராத ஒழுக்கம் கடைசி வரை வராது. மாணவர்கள் பிரச்சனையில் எப்போதுமே ஆசிரியர் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். இப்போது ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கண்டிக்கும் ஆசிரியர்களை பற்றி பெற்றோர்களிடம் புகார் கூறி அவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் மாணவர்களுக்கு டிசியை கொடுத்து அனுப்ப வேண்டும்.


    ஆசிரியர்களிடம் இருந்து பிரம்பை எப்படி பிடுங்கிப் போட்டார்களோ, அதேபோல மக்களிடம் பக்தியையும் பிடுங்கி போட முயற்சிக்கிறார்கள். பக்தி இருக்கும் வரை தான் தார்மீக பயம் இருக்கும். இது சமூக சிந்தனை கொண்ட நல்ல படம். மாணவர்கள் அனைவரும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்றபடி இந்த படத்திற்கு தமிழக அரசு வரிச்சலுகை கொடுக்க வேண்டும்" என்ற ஒரு கோரிக்கையுடன் பேசினார்.

    ×